அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க!

Posted By:

Mothers Day Special Pepper Chicken Gravy Recipe In Tamil: இன்று அன்னையர் தினம். இந்த அன்னையர் தினத்தன்று இதுவரை உங்களுக்காக வாய்க்கு ருசியாக சமைத்து கொடுத்த உங்கள் அம்மாவிற்கு உங்கள் கையால் ஏதாவது சமைத்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் அம்மாவிற்கு சிக்கன் பிடிக்குமா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு மிளகு கிரேவி செய்து கொடுங்கள்.

Mothers Day Special Pepper Chicken Gravy How To Make Milagu Kozhi Gravy Recipe

இந்த சிக்கன் மிளகு கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இப்படியொரு மிளகு சிக்கன் கிரேவியை செய்து கொடுத்தால், உங்கள் அம்மா விரும்பி சாப்பிடுவார். அதுவும் இதுவரை உங்கள் அம்மாவிற்கு என்று ஸ்பெஷலாக எதையும் சமைத்து கொடுத்தது இல்லை என்றால், இந்த மிளகு சிக்கன் கிரேவியை செய்து கொடுத்தால், ஆச்சரியப்படுவதோடு, சந்தோஷப்படுவார்.

இந்த பெப்பர் சிக்கன் கிரேவி ரெசிபி குறித்து வேம்பு கார்த்திக் என்பவர் தனது அம்மாவுக்காக என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த பெப்பர் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பெப்பர் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* நெய் - 2 ஸ்பூன்

வறுத்து பொடி செய்வதற்கு...

* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய 1 கப் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த 2 தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு கிளறி, நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், முந்திரி சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* சிக்கன் ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கி, சிறிது கொத்தமல்லியைத் தூவினால், மிளகு சிக்கன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion