தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Diwali Special Adhirasam Recipe In Tamil: பொதுவாக தீபாவளி என்றாலே பட்டாசுக்கு அடுத்தப்படியாக முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமூன் போன்ற பலகாரங்கள் தான் நினைவிற்கு வரும். சொல்லப்போனால் பலகாரங்கள் இல்லாமல் தீபாவளி முழுமையடையாது என்றே கூறலாம். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும், ஆனால் அதை செய்யத் தெரியாதா?

Diwali Special Recipes How To Make Instant Adhirasam In 15 Minutes

முக்கியமாக அதிரசம் செய்வது கஷ்டம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு. ஏனெனில் அதிரசத்தை 15 நிமிடத்தில் எந்த ஒரு பாகு பதமும் இல்லாமல் சட்டென்று செய்யலாம். இந்த முறை மட்டும் உங்களுக்கு தெரிந்தால் போதும், பின் எந்த ஒரு பண்டிகையானாலும் அதிரசத்தை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துவீர்கள்.

உங்களுக்கு 15 நிமிடத்தில் அதிரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அதிரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொடித்த வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 2 கப்
* பச்சரிசி மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் பொடித்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இந்த வெல்ல நீரை வடிகட்டி ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, அதில் 1 கப் பச்சரிசி மாவு மற்றும் 1 கப் கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது தீயை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* மாவானது நன்கு திரண்டு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, மேலே 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மாவை சமன்படுத்தி, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* மாவானது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கையில் எண்ணெய் அல்லது நெய்யை தடவி மாவை நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, பட்டர் ஷீர், வாழை இலை அல்லது எண்ணெய் கவரை எடுத்து, அதன் மேல் எண்ணெய் தடவி, ஒவ்வொரு உருண்டையை வைத்து, ஓரளவு தடிமனான அளவில் தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். விருப்பமிருந்தால், நடுவே ஒரு விரலால் ஓட்டை போட்டுக் கொள்ளலாம்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், குறைவான தீயில் வைத்து, தட்டி வைத்துள்ள அதிரசத்தை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்துக் கொண்டால், சுவையான அதிரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 6, 2026, 20:55 [IST]
Desktop Bottom Promotion