தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..

Diwali Sweets and Diabetes: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளி என்றாலே நினைவிற்கு வருவது பட்டாசுக்கு அடுத்தப்படியாக பலகாரங்களாகவே இருக்கும். சொல்லப்போனால் பல வீடுகளில் பாரம்பரியமாக தீபாவளியை முன்னிட்டு, பலவிதமான பலகாரங்களை செய்யும் வழக்கம் இருக்கும். தற்போது ஒவ்வொரு வீடுகளிலும் சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் தங்களின் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அதிகரித்து, நிலைமை மோசமாகிவிடும்.

Diwali Sweets and Diabetes Doctor Shares Smart Ways to Enjoy the Festival Without Spiking Blood Sugar

இருப்பினும் இனிப்புகள் இல்லாமல் தீபாவளி முழுமை பெறாது என்று பலர் கருதுகிறார்கள். இருப்பினும் நீரிழிவு உள்ளவர்களுக்குப் பண்டிகைக் கால உணவுமுறை சற்று சவாலானதாக இருக்கலாம். ஏனெனில், பாரம்பரிய இனிப்புகளில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிக அளவில் இருப்பதால், அவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும். எனினும், நீரிழிவு இருப்பதால் இனிப்புகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அளவோடு சாப்பிடுவதும், கவனத்துடன் சாப்பிடுவதுமே முக்கியம்.

எனவே இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் தீபாவளி பலகாரங்களை சாப்பிட்டு பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கான சில எளிய வழிகள் குறித்து சென்னையில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகரான டாக்டர். அனிருதா சீனிவாசன் டி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

சுகர் அதிகரிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்:

* "உணவின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். பல இனிப்புகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்த இனிப்பை சிறிய அளவில் மட்டும் தேர்ந்தெடுங்கள். நாள் முழுவதும் அடிக்கடி இனிப்பு சாப்பிடுவதைத் தவிருங்கள்.

* உணவுகளுக்கு இடையே இனிப்பு, கார வகைகள் என எதையும் நொறுக்குத் தீனியாகச் சாப்பிடுவதைத் தவிருங்கள். பிரியாணி, சாதம், கார வகைத் தின்பண்டங்கள், இனிப்பு சேர்த்த பானங்கள் போன்றவையும் மொத்த கார்போஹைட்ரேட் அளவில் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* சுகர் ப்ரீ இனிப்புகளால் வித்தியாசம் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை. பால் திடப்பொருட்கள், மாவு, நட்ஸ்கள் போன்ற பொருட்களில் இருந்து சுகர் ப்ரீ இனிப்புகள் தயாரிக்கப்படுவதால், அவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கக்கூடும். அதேப்போல், வெல்லம், தேன், பேரீச்சம்பழம் ஆகியவையும் இரத்த சர்க்கரையை உயர்த்தலாம். எனவே, இவற்றை அளவின்றிச் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள்.

* இனிப்புக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வழக்கமான உணவை தவிர்ப்பது மற்றொரு பொதுவான தவறு. இன்சுலின் அல்லது சில நீரிழிவு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு இது குறிப்பாக ஆபத்தாகலாம். உணவு நேரங்களை ஒழுங்காகப் பின்பற்றுங்கள், உணவில் காய்கறிகளையும் புரதத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் அதிக அளவு இனிப்புகளை மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்." என்று டாக்டர் கூறினார்.

நினைவில் கொள்ள வேண்டியவைகள்

"பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டிலேயே இரத்த குளுக்கோஸ் அளவை உணவுக்கு முன்பும் பின்பும் பரிசோதியுங்கள். குறிப்பாக, முன்பு நீரிழிவு கட்டுப்பாடு போதுமான அளவில் இல்லாதிருந்தாலோ, நீங்கள் இன்சுலின் எடுத்துக் கொண்டிருந்தாலோ இது மிகவும் அவசியம்.

பண்டிகைக் காலத்தில் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். உணவுக்குப் பின் சிறிது நேரம் நடப்பது குளுக்கோஸ் கட்டுப்பாட்டுக்கு உதவும். பண்டிகை உணவை ஈடுசெய்வதற்காக மருந்துகளை மாற்றவோ, தவிர்க்கவோ வேண்டாம்.

நீரிழிவு சரியாகக் கட்டுப்படுத்தப்படாதவர்கள் அல்லது ஏற்கெனவே சிக்கல்கள் உள்ளவர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருந்து, தங்கள் மருத்துவரின் உணவு ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு மேலாண்மை என்பது தொடர்ச்சியான கட்டுப்பாட்டைப் பற்றியது; கொண்டாட்டங்களை முற்றிலும் இழப்பதைப் பற்றியது அல்ல. சரியான அளவு உணவு, ஒழுங்கான உணவு நேரங்கள், தொடர்ச்சியான உடல் செயல்பாடு, வீட்டிலேயே குளுக்கோஸ் கண்காணிப்பு, முறையான மருந்துகள் ஆகியவற்றுடன் நீரிழிவு உள்ளவர்களும் இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டே தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம்." என்று டாக்டர் கூறினார்.

Story first published: Friday, November 6, 2026, 13:12 [IST]
Desktop Bottom Promotion