மதியம் லன்ச்பாக்ஸ்-க்கு ஒருமுறை இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. பிள்ளைங்க காலி பண்ணிட்டு தான் வருவாங்க..

Posted By:

Coconut Rice Recipe In Tamil: பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு மதியம் லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் வெரைட்டி ரைஸை விரும்பி சாப்பிடுவார்களா? அதற்காக புளி சாதம், எலுமிச்சை சாதம் என்று எத்தனை நாட்கள் தான் செய்து கொடுப்பீர்கள்.

ஒருமுறை தேங்காயை துருவி அதைக் கொண்டு வெரைட்டி ரைஸ் செய்து கொடுங்கள். இந்த தேங்காய் சாதம் 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். அதோடு இந்த ரெசிபியை மதிய வேளையில் சமைக்க சோம்பேறித்தனப்படும் போதும் செய்து சாப்பிடலாம். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Lunchbox Recipe How To Make a Coconut Rice Recipe

உங்களுக்கு தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வடித்த சாதம் - 2 கப்

செய்முறை:

* முதலில் சாதத்தை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதை ஒரு தட்டில்/அகலமான பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் கடுகு சேர்த்து தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து, லேசாக வதக்கி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக குளிர வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மென்மையாக கிளறி விட்டு இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

Image Courtesy: Indian Recipes Tamil

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 9, 2024, 7:06 [IST]
Desktop Bottom Promotion