மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்

Posted By:

Left Over Chapati Upma Recipe in Tamil: பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத ஒரு காலை உணவு என்றால் அது உப்புமாதான். ஆனால் சரியான முறையில் செய்து சரியான சைடிஷ் உடன் சாப்பிடும் போது உப்புமாவும் சிறந்த காலை உணவுதான். பொதுவாக உப்புமா செய்யும் போது அது ரவாவை வைத்தே செய்யப்படுகிறது. உப்புமா போரான உணவாக இருக்க இதுவும் ஒரு காரணமாகும்.

Left Over Chapati Upma Recipe How to Make at Home in Tamil

ரவைக்குப் பதிலாக சப்பாத்தியை வைத்து செய்யப்படும் உப்புமா என்பது பெரும்பாலான மக்கள் அறியாததாகும். மீந்து போன சப்பாத்தி இருந்தால் அதை தூக்கியெறியாமல் உப்புமா செய்யும் போது அது வித்தியாசமாக இருப்பதுடன் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். காரமான வேர்க்கடலை சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது இது சூப்பரான காலை உணவாக இருக்கும்.

உங்களுக்கு மீந்துபோன சப்பாத்தியை வைத்து உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சப்பாத்தி - 5
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- கேரட் - 1
- குடைமிளகாய் - 1
- முட்டைக்கோஸ் - ½
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- பூண்டு - 8 பல்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி (அலங்கரிக்க)
- உப்பு - ½ டீ ஸ்பூன்

தாளிக்க:

- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து, ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

- கேரட் மற்றும் குடைமிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி தனியே வைக்கவும். முட்டை கோஸையும் மெல்லிதாக நறுக்கியோ அல்லது துருவியோ எடுத்து வைக்கவும்.

- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை நீக்க நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- நன்கு பழுத்த தக்காளியை சுத்தமாக கழுவி அதன் பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.

- கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை மண் இல்லாமல் சுத்தமாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- மீதமான சப்பாத்திகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து இறுக்கமாக சுருட்டி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைக்கவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். பின் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து கடுகை பொரிய விடவும். பின் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.

- பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

- அதனுடன் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். பின் அதனுடன் நறுக்கிய கேரட், முட்டை கோஸ், மற்றும் குடைமிளகாயை சேர்த்து கிளறவும்.

- அதில் ​​மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

- வாணலியை ஒரு மூடியால் மூடி, காய்கறிகள் மென்மையாகும் வரை மிதமான தீயில் வேக விடவும். காய்கறிகள் அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது மூடியை திறந்து கிளறி விடவும்.

- காய்கறிகள் ஓரளவிற்கு வெந்ததும், நறுக்கி வைத்த சப்பாத்தி துண்டுகளைச் சேர்த்து கிளறவும். அதனுடன் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.

- பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கிளறி, மீண்டும் மூடியால் மூடிசிறிது நேரம் வேகவிடவும். பின் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சப்பாத்தி உப்புமா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, October 30, 2026, 22:50 [IST]
Desktop Bottom Promotion