எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க..

Posted By:

Hotel Style Paruppu Kadayal Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பருப்பு கடைந்து சாப்பிடுவீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் பருப்பு கடையலை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமான சுவையில் ஹோட்டல் ஸ்டைலில் பருப்பு கடையலை செய்து சாப்பிடுங்கள். இப்படி செய்யும் பருப்பு கடையலை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். மேலும் இந்த பருப்பை சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

How To Make Hotel Style Paruppu Kadayal Recipe

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்ழுன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை 2-3 முறை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வெந்தயம், தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்து தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதை பருப்புடன் சேர்த்து, அத்துடன் வெண்ணெய் சேர்த்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பின் மூடியைத் திறந்து கிளறினால், சுவையான பருப்பு கடையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 30, 2026, 15:30 [IST]
Desktop Bottom Promotion