உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு சுரைக்காய் தோசை - எப்படி செய்றது-ன்னு தெரியுமா?

Posted By:

Kollu Suraikai Dosa Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அதற்காக டயட்டில் உள்ளீர்களா? டயட்டில் இருப்பதால், வாய்க்கு ருசியாக எதையும் சாப்பிட முடியவில்லையா? ஆனால் இனிமேல் கவலை வேண்டாம். ஏனெனில் உடல் எடையைக் குறைக்கும் அற்புதமான தோசை குறித்து தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். இந்த தோசையின் பெயர் கொள்ளு சுரைக்காய் தோசை.

இந்த தோசை செய்வதற்கு ஒருசில பருப்பு மற்றும் அரிசியை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு, 7 மணிநேரம் ஊற வைத்தால் போதும். மறுநாள் காலையில் சத்தான கொள்ளு சுரைக்காய் தோசை தயார். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, கார சட்னி அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Kollu Suraikai Dosa How To Make a Kollu Suraikai Dosa Recipe

உங்களுக்கு கொள்ளு சுரைக்காய் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சுரைக்காய் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கொள்ளு - 200 கிராம்
* பச்சரிசி - 50 கிராம்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 1 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* சுரைக்காய் - 100 கிராம் (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு, பச்சரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை எடுத்து, நீரை ஊற்றி, குறைந்தது 7 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 7 மணிநேரம் நன்கு ஊறியதும், அதை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் கழுவிய அரிசி பருப்பை பாதி சேர்த்து, அத்துடன் வரமிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு, , துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மீதமுள்ள அரிசி பருப்பை சேர்த்து, அத்துடன் சுரைக்காயை துண்டுகளாக்கி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதையும் மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு ஏற்றவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான சுரைக்காய் கொள்ளு தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 31, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion