For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்தான... கார்த்திகை பொரி உருண்டை

கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Posted By:
|

விழாக்காலங்களில் நெல் பொரி வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாளன்று விளக்கு ஏற்றி வழிபடுவதோடு நெல்பொரி இனிப்பு உருண்டை செய்து வழிபடுவது ஐதீகமாகும். கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், தீப்பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.

Karthigai Deepam 2019: Pori Urundai

பொரியுடன் சக்கரைப் பாகு சேர்த்து பிடிக்குற இந்த பொரி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் வாதம், கபம் தொடர்பான நோய்கள் நீங்கும், வாந்தி பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை திருநாளில் நெல் பொரி, அவல் பொரியோடு வெல்லம், தேங்காய் கலந்து உருண்டை பிடித்து இறைவனுக்கும், கார்த்திகை தீபங்களுக்கும் படைத்து வழிபடுவார்கள். அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம்.

பொரியை சாதாரணமாய் நினைத்து விட வேண்டாம் நெருப்பில் வெந்து தன்னை பெரிதாக்கி கொள்ளும் பொரி சத்துள்ள உணவில் தனித்துவம் பெற்றது. இப்போது சத்தான கார்த்திகை பொரி உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

*பொரி - 500 கிராம்

* வெல்லம் - 1 கப் ( நன்றாக பொடித்தது)

* ஏலக்காய் - 3

* தேங்காய் - சிறிதாக நறுக்கியது அரை கப்

* தண்ணீர் - அரை கப்

* வேர்க்கடலை - அரை கப்

செய்முறை:

* வெல்லத்தை பாகு காய்ச்சவும். ஏலாக்காயை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் பொரியை கொட்டி, அதில் வேர்க்கடலை, தேங்காய், ஏலக்காய் சேர்க்கவும். காய்ச்சிய பாகுவை மெதுவாக இந்த கலவையில் ஊற்றி கிளறவும்.

* வெது வெதுப்பாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அரை மணி நேரத்தில் இந்த பொரி உருண்டை செய்து விடலாம். பொரி உருண்டையை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நமத்து போகாது.

* கார்த்திகை தீபம் நாளில் வெல்லத்தில் செய்த உணவுப் பொருள் முக்கியமாக செய்யப்படுகிறது. பொரி உருண்டை போல, கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை, அப்பம், பாயசம், வடை செய்து படையலிட்டு சாப்பிடலாம்.

குறிப்பு

* நெல் பொரி உருண்டை செய்வதற்கு முன் வெறும் வாணலியைச் சூடேற்றி அதில் ஒருமுறை பொரியைப் புரட்டி எடுத்துச் செய்வதால், விரைவில் நமுத்துப் போகாது.

* பொரி இருக்கிறதோ அதே அளவு வெல்லம் இருக்க வேண்டும். நெல் பொரி உருண்டை பிடிக்கும் போது பாகைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சேர்க்க வேண்டும். பொரியுடன் வேர்க்கடலை, முந்திரி, தேங்காய்ச் சில்லு போன்றவற்றைக் கலந்து உருண்டை பிடிக்கலாம். உருண்டை பிடிக்கும்போது கையில் சூடு பொறுத்துக்கொள்ள அரிசிமாவு அல்லது நெய் தொட்டுக்கொண்டு பிடிக்கலாம்.

[ of 5 - Users]
English summary

Karthigai Deepam 2019: Pori Urundai

Pori urundai for karthigai deepam special,Pori Urundai is a traditional South Indian sweet made with puffed rice, jaggery and flavored with cardamom, ginger powders. Want to know how to prepare pori urundai at home? Read on...
Story first published: Tuesday, December 10, 2019, 10:30 [IST]
Desktop Bottom Promotion