பலாக்காய் இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இப்படி 65 செய்யுங்க.. சிக்கன் 65 தோத்துடும்...

Posted By:

Jackfruit 65 recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளின் பசியை ஆற்றும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்யும் பஜ்ஜி, போண்டாவை செய்து கொடுக்க விரும்பவில்லையா? உங்கள் வீட்டில் பலாக்காய் இருந்தால், அந்த பலாக்காயைக் கொண்டு 65 செய்து கொடுங்கள்.

அதுவும் மிகவும் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் ஸ்டைலில் செய்து கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை இந்த பலாக்காய் 65 ரெசிபியை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்வார்கள். இந்த பலாக்காய் 65 ரெசிபியை செஃப் வெங்கடேஷ் பட் எப்படி செய்வதென்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Jackfruit 65 How To Make a Palakai 65 Recipe Shared By Chef Venkateshbhat

உங்களுக்கு செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் ஸ்டைலில் எப்படி பலாக்காய் 65 செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் பலாக்காய் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பலாக்காய் - 1
* தண்ணீர் - 200 மிலி
* காஷ்மீரி வரமிளகாய் - 1 கைப்பிடி
* சமையல் வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பலாக்காயை சதுரத் துண்டுகளாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 200 மிலி நீரை ஊற்றி, 1 கைப்பிடி காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து, நீர் வற்றும் வரை மிளகாயை நன்கு வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு அந்த மிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த பலாக்காயை எடுத்து, அத்துடன் 1 எலுமிச்சையின் சாறு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சோள மாவு, அரிசி மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊற வைத்துள்ள பலாக்காயை உதிர்த்து சேர்த்து, ப்ரை செய்து எடுத்தால், சுவையான பலாக்காய் 65 தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 18, 2025, 16:35 [IST]
Desktop Bottom Promotion