சிக்கனை வாங்குனா.. எப்பவும் போல ப்ரை செய்யாம.. இப்படி செய்யுங்க.. போட்டி போட்டு காலி பண்ணுவாங்க..

Posted By:

Honey Garlic Chicken Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனை வாங்கினால் எப்போதும் சிக்கன் 65 அல்லது சிக்கன் வறுவல் செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமாக அந்த சிக்கனை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் தேன் உள்ளதா?

அப்படியானால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஹனி கார்லிக் சிக்கனை செய்து கொடுங்கள். இப்படி சிக்கனை தேன் சேர்த்து செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அப்போது இதை செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டுக்களைப் பெறலாம்.

Honey Garlic Chicken How To Make Honey Garlic Chicken Recipe

உங்களுக்கு ஹனி கார்லிக் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹனி கார்லிக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கனை ஊற வைப்பதற்கு...

* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* பூண்டு பொடி - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்

சாஸ் செய்வதற்கு...

* சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
* சில்லி ஃப்ளேப்ஸ் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸபூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோள மாவு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

ஹனி கார்லிக் சிக்கன் செய்வதற்கு...

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* தேன் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயத்தாள் - சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனுடன் உப்பு, மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ், பூண்டு பொடி மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் சோயா சாஸை எடுத்து, அத்துடன் வினிகர், சில்லி ப்ளேக்ஸ், உப்பு, மிளகுத் தூள், சோள மாவு மற்றும் சிறிது நீரை ஊற்றி சாஸை கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில், அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சிக்கனில் இருந்து நீர் வெளியேறி வற்றி, சிக்கனின் நிறம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தயாரித்து வைத்துள்ள சாஸை நன்கு கலந்து, மிதமான தீயில் வைத்து, சாஸ் கெட்டியாகும் வரை வதக்கி வேக வைக்க வேண்டும்.
* சாஸ் சற்று கெட்டியாகி சிக்கனுடன் சேர்ந்ததும், அதில் 2 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஹனி கார்லிக் சிக்கன் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 20, 2025, 14:35 [IST]
Desktop Bottom Promotion