கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Gothumai Rava Idli With Thakkali Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அப்படி நீங்கள் இட்லியை அதிகம் செய்வீர்களானால், ஒருமுறை அரிசிக்கு பதிலாக கோதுமை ரவையை சேர்த்து மாவு தயாரித்து இட்லி செய்யுங்கள். இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த இட்லிக்கு தக்காளி கார சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

Gothumai Rava Idli With Thakkali Kara Chutney How To Make Gothumai Rava Idli With Tomato Chutney

உங்களுக்கு இந்த கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா இட்லி மற்றும் தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவா இட்லிக்கு..

* உளுத்தம் பருப்பு - 1 கப் (1 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கோதுமை ரவை - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, நீரை ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த உளுத்தம் பருப்பை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் கோதுமை ரவை, உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு கைகளால் கலந்துவிட்டு, மூடி வைத்து 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, மாவை கிளறி விடும் போது மாவு கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி தட்டில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை ஊற்றி, இட்லி, பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், கோதுமை ரவா இட்லி தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, கறிவேப்பிலை தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தக்காளி கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 7, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion