இஞ்சியோட பூண்டு சேர்த்து இப்படி சட்னி அரைச்சா எவ்வளவு தோசை சுட்டாலும் பத்தாது... ட்ரை பண்ணி பாருங்க...!

Posted By:

Ginger Chutney Recipe in Tamil: இந்திய உணவுகளில் சட்னி வகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் டிபன் வகைகளுக்கு சாம்பாரை விட சட்னிதான் பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். சட்னிகள் சுவையாக இருக்கும் அதேவேளையில் அவற்றை ஆரோக்கியமானதாக அரைப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்றதாகும்.

இஞ்சி காலம் காலமாக இந்திய உணவுகளிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இஞ்சியில் பல மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இஞ்சி செரிமானத்தை ஊக்குவிக்கும், அதனால்தான் உணவுகளில் இஞ்சி அடிக்கடி சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் இஞ்சியை வைத்தே சட்னி அரைப்பது சுவையுடன், ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும். இந்த பதிவில் வித்தியாசமான இஞ்சி சட்னியை எப்படி அரைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Ginger Chutney Recipe How to Prepare Ginger Chutney

தேவையானப் பொருட்கள்:

- தோல் சீவி நறுக்கிய இஞ்சி - 2 துண்டு
- காஷ்மீர் மிளகாய் - 5
- வர மிளகாய் - 2
- பூண்டு - 5 பல்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
- புளிச்சாறு - 2 ஸ்பூன்
- வெல்லம் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:

- புளியை 10 நிமிடம் ஊறவைத்து புளிச்சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- இஞ்சியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
- இஞ்சி, பூண்டு வதங்கியதும் அவற்றை வேறு தட்டுக்கு மாற்றி வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் 1 ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- இப்போது அதில் மிளகாயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிரும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் அவற்றை மிக்சி ஜாருக்கு மாற்றி அதனுடன் புளி மற்றும் வெல்லம் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
- இப்போது அதை தனியாக வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- இப்போது கடாயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து அதனை சட்னி மீது ஊற்றவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் சூப்பரான, ஆரோக்கியான இஞ்சி சட்னி ரெடி.

[ of 5 - Users]
Story first published: Monday, December 23, 2024, 18:58 [IST]
Desktop Bottom Promotion