சாதத்துக்கு ஒருமுறை இந்த ஒரு பொருளை அதிகமா சேர்த்து ரசம் வையுங்க... அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...

Posted By:

Garlic Rasam Recipe In Tamil: மழைக்காலம் தொடங்கிவிட்டது. பலரும் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொண்டால் தான் மழைக்காலத்தில் பரவும் தொற்றுநோய்களின் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால் உணவில் பூண்டுகளை அதிகம் சேர்க்கலாம்.

ஏனெனில் பூண்டு அவ்வளவு மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பூண்டு கொண்டு பல்வேறு ரெசிபிக்களை நாம் செய்து சாப்பிடலாம். அதுவும் நீங்கள் ரசப் பிரியர் என்றால், பூண்டு ரசம் செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. பூண்டு பற்களை அதிகம் தட்டிப் போட்டு ரசம் செய்யும் போது, அதன் மணமும், சுவையும் ஆளையே மயக்கிவிடும்.

Garlic Rasam How To Make a Garlic Rasam Recipe

உங்களுக்கு பூண்டு ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 8 பெரிய பல்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு (1/2 லிட்டர் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், மல்லி, துவரம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, நீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை எடுத்து நீரில் ஊற வைத்து, அதை பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூடி வைத்து 2 நிமிடம் தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி, நுரைகட்டி ஒருகொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான பூண்டு ரசம் தயார்.

Image Courtesy: Kavitha Samayalarai

[ of 5 - Users]
Story first published: Monday, July 15, 2024, 15:49 [IST]
Desktop Bottom Promotion