தீபாவளிக்கு வழக்கமான முறுக்கு செய்யாம இந்த 2 பொருளை சேர்த்து ஸ்பெஷல் முறுக்கு செய்யுங்க... செமையா இருக்கும்..!

Posted By:

Thengai Paal Murukku Recipe in Tamil: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளி என்றாலே புத்தாடைகளும், வீட்டில் செய்யும் பலகாரங்களும்தான். என்னதான் கடைகளில் விதவிதமாய் பலகாரங்கள் வாங்கினாலும் வீட்டில் செய்யும் பலகாரங்களின் ருசியே தனி. இப்போதே வரப்போகிற தீபாவளிக்கு என்ன பலகாரங்களை செய்யலாம் என்று லிஸ்ட் அனைத்து வீடுகளிலும் லிஸ்ட் போட தொடங்கியிருப்போம்.

அனைத்து வீடுகளிலும் தீபாவளியில் அவசியம் செய்யும் பலகாரமென்றால் அது முறுக்குதான். இந்த வருடமும் உங்கள் வீட்டில் தீபாவளிக்கு முறுக்கு சுட திட்டமிட்டுள்ளீர்களா? இதுவரை நீங்கள் பலவிதமான முறுக்கு செய்திருப்பீர்கள். அந்த முறுக்கு சாப்பிட்டு உங்களுக்கு போரடித்து விட்டால் இந்த வருடம் பொட்டுக்கடலை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து இந்த வித்தியாசமான முறுக்கை முயற்சித்துப் பாருங்கள்.

Diwali Special Recipe How to Make Thengai Paal Murukku

இந்த முறுக்கை ஒருமுறை முயற்சித்து பார்த்தால் போதும் அதன்பின் அடிக்கடி உங்கள் வீட்டில் செய்ய சொல்லி கேட்பார்கள். உங்களுக்கு இந்த சூப்பரான பொட்டுக்கடலை, தேங்காய்ப்பால் முறுக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய்ப்பால் முறுக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

- புழுங்கல் அரிசி - 2 கப்
- பொட்டுக்கடலை - 1/4 கப்
- வர மிளகாய் - 8 மிளகாய்
- தேங்காய்ப்பால் - ஒரு கப்
- எள் - 2 ஸ்பூன்
- ஓமம் - சிறிதளவு
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் வர மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். முறுக்கு மாவு மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

- பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- பின்னர் அரிசி மாவுடன் அரைத்த பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

- மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் ஒரு துண்டில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரப்பதம் போய்விடும்.

- மாவு ரெடியானதும் இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு சிறிய உருண்டை எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பர் அல்லது துணியில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.

- எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

- இப்போது சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு ரெடி. பொட்டுக்கடலை சேர்க்கப்பட்டிருப்பதால் இந்த முறுக்கு வழக்கமான முறுக்கை விட மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

- இந்த தீபாவளிக்கு இந்த முறுக்கை செய்து உங்கள் வீட்டில் எல்லோரையும் அசத்துங்கள்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 13, 2025, 15:18 [IST]
Desktop Bottom Promotion