செட்டிநாடு வாழைப்பூ பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பார்த்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Chettinad Vazhaipoo Biriyani Recipe In Tamil: உங்களுக்கு மதியம் டக்கென்று சமையலை முடிக்கணுமா? அதே சமயம் வீட்டில் உள்ளோருக்கு வாய்க்கு ருசியான சமையலை செஞ்சு கொடுக்கணுமா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? பொதுவாக வாழைப்பூ இருந்தால், அதைப் பொரியல் செய்து சாப்பிடுவோம். ஆனால் அப்படி பொரியலை செய்வதற்கு பதிலாக, அந்த வாழைப்பூவைக் கொண்டு பிரியாணி செய்யுங்கள்.

இந்த செட்டிநாடு வாழைப்பூ பிரியாணியானது நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி மட்டன் பிரியாணி தோற்கும் அளவில் ருசியாக இருக்கும். ஒருமுறை வாழைப்பூ பிரியாணியை செய்தால், பின் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த பிரியாணியை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் அருமையாக இருக்கும்.

Chettinad Vazhaipoo Biriyani How To Make a Chettinad Banana Flower Biryani

உங்களுக்கு செட்டிநாடு வாழைப்பூ பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வாழைப்பூ பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 5-6
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 5 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* தக்காளி - 1

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 1 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* புதினா - 1 கையளவு
* வாழைப்பூ - 1 கைப்பிடி
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கெட்டி தயிர் - 1/4 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* சீரக சம்பா அரிசி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வாழைப்பூவை சுத்தம் செய்து, மோரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, கிராம்பு, ஏலக்காய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் புதினாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த வாழைப்பூவை சேர்த்து நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, கொத்தமல்லி இலைகளை சிறிது தூவி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, நீர் ஓரளவு வற்றும் வரை கொதிக்க வைத்து அரிசியை வேக வைக்க வேண்டும்.
* நீர் வற்றியதும், மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும், தீயைக் குறைத்து, அந்த பிரியாணி பாத்திரத்தை தோசைக்கல்லின் மேல் வைத்து, தட்டு கொண்டு மூடி, அதன் மேல் ஒரு நீர் நிரப்பிய பாத்திரத்தை வைத்து, 20 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு வாழைப்பூ பிரியாணி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 22, 2025, 13:45 [IST]
Desktop Bottom Promotion