ஆந்திரா வெங்காய கார சட்னி.. இட்லிக்கு இந்த ஒரு சட்னியை செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..

Posted By:

Andhra Vengaya Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? அந்த இட்லிக்கு ஒரு அருமையான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்யும் சட்னியில் இருந்து வித்தியாசமான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் வெங்காய கார சட்னியை செய்யுங்கள்.

இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால், 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதுவும் மழை நேரத்தில் இப்படியான சட்னியை செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

Andhra Vengaya Kara Chutney How To Make a Andhra Onion Kara Chutney

உங்களுக்கு ஆந்திரா வெங்காய கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா வெங்காய கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 12
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் புளியையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த மிளகாயை சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ஆந்திரா வெங்காய கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, December 6, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion