சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்... ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு

Posted By:

Andhra Special Tomato Pappu: இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா?

அப்படியானால் இன்று ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு செய்யுங்கள். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Andhra Special Tomato Pappu Recipe In Tamil

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1.5 கப்
* புளி - 1/4 இன்ச் துண்டு
* கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* வெல்லம் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, 3 கப் நீரை ஊற்றி, அதன் நடுவே ஒரு டம்ளரில் புளியைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி வைக்க வேண்டும். பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, 6 விசில்விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்புடன், டம்ளரில் உள்ள புளியை சேர்த்து, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை தக்காளியை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிது வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, பருப்புடன் சேர்த்தால், சுவையான ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பப்பு தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Monday, August 14, 2023, 12:30 [IST]
Desktop Bottom Promotion