ஜீன்ஸ் பேண்ட்டின் முன்பக்கத்தில் ஏன் ஒரு சிறிய பாக்கெட் உள்ளது - இதற்கு பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?

ஜீன்ஸ் பேண்ட் என்பது நாம் அடிக்கடி அணியும் ஒரு உடையாகும். உங்கள் ஜீன்ஸ் பேண்டின் வலது பக்கத்தில் முன்புறத்தில் இருக்கும் பாக்கெட்டிற்குள் இருக்கும் அந்தச் சிறிய பாக்கெட், இன்றைய காலத்தில் தற்போதுகிட்டத்தட்ட பயனற்றதாகவே தோன்றுகிறது. அதற்குள் போனையோ அல்லது பணத்தையோ வைக்க முடியாது. பெரும்பாலானோர் அதில் நாணயங்களையோ, லைட்டரையோ வைக்கிறார்கள், அல்லது பெரிதும் எதையும் வைப்பதே இல்லை.

Why Do Jeans Have A Tiny Pocket

உண்மையில், இந்த பாக்கெட் வெறும் அலங்காரத்திற்காகச் சேர்க்கப்பட்டதல்ல. ஜீன்ஸ் பேண்டுகள் முதன்முதலில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தப் பாக்கெட் இருந்து வருகிறது. அக்காலத்தில் டெனிம் துணியால் ஆன ஆடைகள் அன்றாட ஃபேஷனுக்காக அல்லாமல், தொழிலாளர்களுக்காகவே தயாரிக்கப்பட்டன. அந்தச் சிறிய பாக்கெட், அப்போது ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டது.

கைக்கடிகார பாக்கெட்

1873-ல், லெவி ஸ்ட்ராஸ் மற்றும் டைலர் ஜேக்கப் டேவிஸ் ஆகியோர், வேலைக்கான பேண்ட்களில் அழுத்தம் ஏற்படும் இடங்களை வலுப்படுத்த காப்பர் ரிவெட்டுகளைப் பயன்படுத்துவதற்கான காப்புரிமையைப் பெற்றனர். இந்த ரிவெட்டுகள், அதிக வேலையின் போது பைகளும் தையல்களும் கிழியாமல் இருக்க உதவின. ஆரம்பகால ஜீன்ஸ்களில், பாக்கெட் கைக்கடிகாரத்தை வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய பையும் முன்பக்க வலது பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

அந்த காலகட்டத்தில் பாக்கெட் கைக்கடிகாரங்கள், குறிப்பாகச் சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், கார்பென்டர்கள்மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. கைக்கடிகாரங்கள் கண்ணாடி முகப்புகளைக் கொண்டிருந்ததாலும், அவை பெரும்பாலும் சங்கிலிகளில் கோர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாலும், அவை அதிகம் அசையாமல் இருக்க ஒரு பை தேவைப்பட்டது. இந்தச் சிறிய பாக்கெட், வேலை செய்யும் போது கைக்கடிகாரத்தை எடுத்துச் செல்ல வசதியான ஓர் இடத்தை வழங்கியது.

ஆரம்பகால ஜீன்ஸ்கள் அனைத்திலும் கைக்கடிகாரப் பை ஒரு பொதுவான அம்சமாக இருக்கவில்லை. இது 1890-களில் லெவி ஜீன்ஸின் வழக்கமான அம்சமாக மாறியது. பாக்கெட் கைக்கடிகாரங்கள் படிப்படியாக அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விலகிய பின்னரும் கூட, இது வடிவமைப்பின் ஒரு பகுதியாகவே நீடித்தது.

இந்த பாக்கெட்டின் தற்போதைய பயன்

இந்தச் சிறிய பாக்கெட் பார்ப்பதற்கு அழகாகவும், சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டதாகவும் இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இது யாருக்கும் பெரிய அளவில் பயன்படுவதில்லை. இதன் அளவு பாரம்பரிய வடிவமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், தற்கால ஸ்மார்ட்போன்களோ அல்லது பணப்பைகளோ இதில் வைக்க முடியாது.

அதுமட்டுமின்றி ஒரு பெரிய பாக்கெட்டுக்குள் சிறிய பாக்கெட்டைத் தைப்பதற்கு கூடுதல் துல்லியமும் கூடுதல் வேலைப்பாடுகளும் தேவைப்படுகின்றன. இதனால், பேண்டின் இடுப்புப் பகுதியில், குறிப்பாக வலது பக்கத்தில், தடிமன் சற்று அதிகமாகிறது. பெல்ட்டை மிகவும் இறுக்கமாக அணியும் சிலருக்கு, இது லேசான அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், ஜீன்ஸ் பேண்ட் பிரியர்களைப் பொறுத்தவரை, இந்த வரலாற்றுச் சிறப்பம்சத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, இத்தகைய சிறிய குறைபாடுகளை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றும் ஒவ்வொரு ஜீன்ஸ் பேண்டிலும் இந்த அம்சம் இடம்பெற்றிருப்பது, நாம் அணியும் ஒவ்வொரு ஆடைக்கும் பின்னால் ஒரு மறைந்திருக்கும் வரலாறு இருப்பதையே காட்டுகிறது.

Story first published: Tuesday, November 24, 2026, 18:33 [IST]
Desktop Bottom Promotion