அடுத்தமுறை சேமியா உப்புமாவை இந்த பக்குவத்துல செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Semiya Upma Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உப்புமா என்றாலே அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்களா? அதுவும் உப்புமா என்றால் ரவையைக் கொண்டு தான் நீங்கள் உப்புமா செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை உப்புமாவை சேமியா கொண்டு செய்யுங்கள். இப்படி சேமியா கொண்டு உப்புமா செய்யும் போது, அதுவும் பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லியை அரைத்து சேர்த்து உப்புமா செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த உப்புமா சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த உப்புமாவிற்கு தேங்காய் சட்னி சூப்பரான காம்பினேஷனாக இருக்கும்.

Semiya Upma How To Make Vermicelli Upma

உங்களுக்கு இந்த சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* பச்சை மிளகாய் - 2
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* வெங்காயம் - 1/2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது + 1 1/4 கப்
* அரைத்த பேஸ்ட்
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்த சேமியா - 1 1/2 கப்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், தேங்காய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பாதி வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து உயர் தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து காய்கறிகளை கிளறி, அரைத்த பேஸ்ட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி நன்கு கிளறி, 1 1/4 கப் நீரை ஊற்றி கலந்து, நன்கு நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க தொடங்கியதும், அதில் வறுத்த சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சேமியா உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 24, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion