இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம.. ஒருடைம் இத செய்யுங்க.. அள்ளும்..

Posted By:

Vengaya Kurma Recipe In Tamil: இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் பெரும்பாலும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரியான சைடு டிஷ் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் வெங்காயம் உள்ளதா? அப்படியானால் அந்த வெங்காயத்தைக் கொண்டு சூப்பரான சுவையில் குருமா செய்யுங்கள். இந்த வெங்காய குருமா இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சொல்லப்போனால் இந்த குருமாவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள்.

Onion Kurma How To Make Vengaya Kurma For Idli Dosa

உங்களுக்கு இந்த வெங்காய குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 15
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 6 (நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா/பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* முந்திரி - 6-8
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* அரைத்த வெங்காய விழுது
* தண்ணீர் - 2-3 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு, கசகசா/பொட்டுக்கடலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து கிளறி, 2-3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமா நன்கு கொதித்ததும், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெங்காய குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 23, 2026, 23:30 [IST]
Desktop Bottom Promotion