இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?

இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்று அழைக்கப்படுகிறது. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்கள் மத கடவுளின் மீது இறை நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும், நகரங்களிலும் கோவில்கள் இருந்தாலும் ஒரு நகரம் மட்டுமே இந்தியாவின் 'ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. அது எந்த நகரம் என்று உங்களுக்குத் தெரியுமா?

Which City Is Called as the Spiritual Capital of India

காசி அல்லது பனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசிதான், இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் என்று போற்றப்படுகிறது. இது உலகின் மிகவும் பழமையான, இன்றும் தொடர்ந்து வாழ்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது மேலும் இந்து மதத்தின் மிகப்புனிதமான தலமாகவும் விளங்குகிறது.

இந்த நகரம் எங்கு உள்ளது?

உத்தரப் பிரதேசத்தில், புனித நதியான கங்கைக் கரையில் அமைந்துள்ள வாரணாசி, கடந்த 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக புனிதப் பயணம், கல்வி, மோட்சம், சடங்குகள் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான மையமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள், ஆன்மீகத் தேடலில் இருப்பவர்கள் மற்றும் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இதுவே இந்நகரத்தை இந்தியாவின் ஆன்மீக அடையாளத்தின் மையப்புள்ளியாக மாற்றியுள்ளது.

வாரணாசியின் முக்கியத்துவம்

வாரணாசியின் ஆன்மீக முக்கியத்துவம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. இது சிவபெருமானால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது, எனவே இது தெய்வீகமான நகரமாகக் கருதப்படுகிறது. 'காசி' என்ற பெயருக்கு "ஒளியின் நகரம்" என்று பொருள். இது ஞானம் மற்றும் முக்தியைக் குறிக்கிறது. ரிக் வேதம், ஸ்கந்த புராணம் மற்றும் மகாபாரதம் போன்ற புனித நூல்கள், வாரணாசியை வாழ்வும் மரணமும் சங்கமிக்கும் ஒரு புனித நகரம் என்று குறிப்பிடுகின்றன. பல நூற்றாண்டுகளாக, முனிவர்களும், அறிஞர்களும், தத்துவஞானிகளும் வேதங்கள், சமஸ்கிருதம் மற்றும் இந்து தத்துவங்களைக் கற்க இங்கு வந்துள்ளனர்.

கங்கை நதி

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கங்கை நதி வாரணாசியின் ஆன்மீக உயிர்நாடியாகவும், அங்கு நடைபெறும் சடங்குகளின் மையமாகவும் திகழ்கிறது. கங்கையில் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி, ஆன்மா முக்தியை அடையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தசாசுவமேத காட், அஸி காட் மற்றும் மணிகர்ணிகா காட் உள்ளிட்ட வாரணாசியின் புகழ்பெற்ற படித்துறைகள், அன்றாட பிரார்த்தனைகள், இறுதிச் சடங்குகள் மற்றும் புனித நிகழ்வுகள் நடைபெறும் இடங்களாக உள்ளன. ஒவ்வொரு மாலையும் மந்திரங்கள், தீபங்கள் மற்றும் இசையுடன் மிகச் சிறப்பாக நடத்தப்படும் 'கங்கா ஆரத்தி', ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்ப்பதுடன், மனிதகுலத்திற்கும் இறைத்தன்மைக்கும் இடையிலான அழியாத பிணைப்பை உணர்த்துகிறது.

காசி விஸ்வநாதர் கோயில்

சிவபெருமானின் புனித திருத்தலங்க்ளில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசியில் மிகவும் போற்றப்படும் கோயிலாகும். இது இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இக்கோயில் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, முக்தியை நோக்கிய பயணத்தில் ஒருவரை நெருக்கமாக்குகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனுடன், சங்கட மோசன அனுமன் கோயில், துர்கா கோயில் மற்றும் அன்னபூரணா கோயில் போன்ற பிற கோயில்களும், இந்நகரின் புனிதமான பன்முகத்தன்மையையும் ஆன்மீக ஆழத்தையும் பறைசாற்றுகின்றன.

இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம்

வாரணாசி 'இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம்' என்று அழைக்கப்படுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அது 'மோட்சம்' அல்லது பிறப்பு-இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதுடன் தொடர்புடையதாக இருப்பதுதான். இங்கு உயிர் நீப்பவர்களுக்கோ அல்லது இங்கு உடல் தகனம் செய்யப்படுபவர்களுக்கோ முக்தி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இங்கு பல நூற்றாண்டுகளாகத் தடையின்றி இறுதிச் சடங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாழ்வின் இறுதிக் நோக்கத்துடனான இந்த ஆழமான பிணைப்பு, ஆன்மீக விடுதலையைத் தேடும் பக்தர்களுக்கு வாரணாசியை ஒரு புனிதத் தலமாக மாற்றுகிறது.

Story first published: Tuesday, November 24, 2026, 16:21 [IST]
Desktop Bottom Promotion