For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை!

|

வைகாசி மாத சுக்ல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை ஆகும். செல்வமும் வளமும் அள்ளித்தரும் அட்சய திருதியை போல பெண்களுக்கு அதே ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை!. தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனி தேவியை வழிபட்ட நன்னாள் இது என்று புராணங்கள் கூறுகின்றன.

சில சமயங்களில் ஆனி மாதத்திலும் வருவதுண்டு. கார்த்திகை சுக்ல பட்ச திருதியையிலும் சிலர் இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு இன்று இந்த திருநாள் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் அனுஷ்டிக்கலாம். இந்த பூஜையினால் நல்ல துணை, நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு முதலியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.

வட இந்தியாவில் இந்த விரதம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. எனவே நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் பிரதிமை அல்லது படம் வைத்து நன்கு அலங்கரித்து, பூஜை செய்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, நிறைய வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் நிவேதனம் செய்து, பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் அவற்றை தானம் செய்து பூஜையை நிறைவு செய்வர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரம்பா திருதியை புராண கதை

ரம்பா திருதியை புராண கதை

அரம்பையர்கள் தேவலோகத்தில் பார்வதிதேவியின் தோழிகளாவர். இவர்கள் பாற்கடலை கடையும் போது தோன்றியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மொத்தம் 60,000 பேர் என்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ர ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி போன்ற பலர் இருந்தாலும், ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றவர்கள்தான் அதிக அழகு கொண்டவர்கள் என நமது புரணங்களும், இலக்கியங்களும் கூறுகின்றன.

பேரழகி ரம்பை

பேரழகி ரம்பை

ரம்பை தான் இவர்களின் தலைவியாக கூறப்படுகிறாள். அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் உண்டு. அப்ஜம் என்றால் தாமரை. சரஸ் என்றால் தடாகம், குளம் என்று பொருள். அப்சரஸ் என்றால் தடாகத்தில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பையர்கள் ஆவர்.

வரம் கொடுத்த சிவன்

வரம் கொடுத்த சிவன்

இவர்கள் தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் எனவும், தாங்கள் என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்ட, அவரும் அவ்வரங்களை அளித்து, அவர்களுக்காக "அப்சரஸ்' எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார். இவர்கள், சிவ பூஜை செய்வதுடன், யாழ் இசை மீட்டுவதிலும் நடனம் ஆடுவதிலும் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர்களாய் விளங்கினர்.

ரம்பா நடனம்

ரம்பா நடனம்

ஒருமுறை தேவசபையில் ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களுக்கிடையே நடந்த நடனப் போட்டியின்போது, தேவலோக பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள எண்ணிய ரம்பை, அரங்கமே அதிரும்படி ஆக்ரோஷமாக ஆடினாள். அப்போது அவள் அணிந்திருந்த நெற்றிப் பொட்டும் பிறைச் சந்திரனும் கீழே விழ, நிலைகுலைந்தாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும் மேனகையும் ரம்பையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். தங்களது ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள்.

ரம்பைக்கு அவமானம்

ரம்பைக்கு அவமானம்

நடந்ததை எல்லாம் தேவர் பெருமக்கள் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்க... 'இன்றைய சகுனம் சரியில்லை; சபை கலையலாம்' என்று உத்தரவிட்டு எழுந்தான் இந்திரன். அன்று இரவு, ரம்பைக்குத் தூக்கம் வர மறுத்தது. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். மறுநாள் முதல் வேலையாக, தூக்கம் தொலைத்த கண்களுடன் இந்திரனைச் சந்தித்தாள். 'நேற்று அவையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பிராயச்சித்தம் வேண்டும். நடந்த சம்பவத்தால் 'முதல் அழகி' என்ற அந்தஸ்து என்னை விட்டுப் போய்விட்டதோ என்று அச்சம் கொள்கிறேன்' என்று கண்ணீர் பெருக பேசினாள் ரம்பை.

அழகிப்பட்டம்

அழகிப்பட்டம்

ரம்பையை முறைத்துப் பார்த்த இந்திரன், ' உன்னுடைய ஆட்டம்தான் பேயாட்டமாகி அரங்கையே அதிரவைத்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கலைகளின் அரசி கலைவாணி, அதைக் காணச் சகிக்காமல்தான் உனது பிறைச் சந்திரனைக் கழற்றியதோடு, நெற்றிப் பொட்டையும் அகற்றி விட்டாள். அதனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உன்னுடைய அழகிப் பட்டமும் நர்த்தன முறையும் அரங்குக்கு வராமலேயே இருக்கட்டுமே..!' என்று ஆவேசப்பட்டுப் பேசினான்.

தவம் இருந்த ரம்பை

தவம் இருந்த ரம்பை

'தேவேந்திரா! பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும், கௌரவத்துக்கும் தேவருலகில் அதிபதியான நீங்களே என்னை விலகி இரு என்று சொல்லலாமா? இதற்குச் சரியான வழியை- பிராயச்சித்தத்தை எனக்கு இப்போதே சொல்லி, எனது துயரத்தைப் போக்கிட வேண்டும்'' என்று மன்றாடினாள் ரம்பை. அழுது புலம்பும் ரம்பைக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய தேவேந்திரன், 'பூலோகத்தில், தன் பதியைத் தேடிச்சென்ற பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள். அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள். அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள களங்கமும் தீரும்' என்றான்.

கௌரிதேவியின் தரிசனம்

கௌரிதேவியின் தரிசனம்

அதன்படி, பூலோகம் வந்த ரம்பை கெளரிதேவியை நினைத்து விரதம் இருந்தாள். வைகாசி மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, மறுநாள் சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, பொன்மேனியளாகக் காட்சி தந்தார்.

மீண்டும் கிடைத்த அழகு

மீண்டும் கிடைத்த அழகு

ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர ஆசி கூறினார். மேலும் அவள் மேற்கொண்ட இந்த விரதத்தை அவளது பெயரால் ரம்பா திருதியை என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் அதிகரிக்குமென்றும் அருளினாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rambha Trithiya Viratham Benefits

Rambha Trithiya, is observed mainly in North India on the third day of the Shukla Paksha in the month of Jyeshta (May – June).
Story first published: Tuesday, May 26, 2020, 17:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more