மகனால் வெளியேற்றப்பட்ட தந்தையின் கடைசி வார்த்தைகள்! my story #186

Posted By:
Subscribe to Boldsky

கடந்த ஒரு வாரமாக மனதை ரணமாக தைத்துக் கொண்டிருக்கும் ஓர் விஷயம், எங்கே சொல்வது யாரிடம் பகிர்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த வாரம் வங்கி வேலையாக வெளியில் சென்றிருந்தேன். சுரீரென்று வெயில் ஸ்கூட்டியில் உட்காரவே முடியவில்லை. பத்து மணிக்கே இப்படியா என்று நொந்து கொண்டு குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

வரப்போ.... என்று ஆரம்பித்த மனைவியிடம், அங்க வேலைய முடிச்சிட்டு போன் பண்றேன், அப்போ லிஸ்ட்ட சொல்லு இப்பவே சொல்லுவ அப்பறம் அத மறந்துட்டீங்களா? இத மறந்துட்டீங்களான்னு கத்துவ என்று சொல்லிவிட்டு வெளியே நடந்து வந்தேன்.

Old man Over Thrown By his Son

சந்து திரும்பும் வரையில் அவள் வாசலில் நின்று என்னை பார்த்துக் கொண்டிருப்பாள் என்று தெரியும், பின்னே முப்பது ஆண்டு கால திருமண வாழ்க்கை என்றால் சும்மாவா... அடிக்கடி சண்டைகள் நடக்கும், ஆனால் ஒரு போதும் கை ஓங்கியது இல்லை. மகளொன்றும் மகனொன்றும் என அளவான குடும்பம். அப்பா அரசாங்க ஊழியராக இருந்ததினால் அவருக்குப் பிறகு அந்த வேளை எனக்கு கிடைத்தது. இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன். வருகின்ற பென்ஷன் பணமும் மகன் அனுப்புகிற பணமும் தான் எங்களது வாழ்க்கையை ஓட்ட உதவிக் கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம் :

குடும்பம் :

நான் பார்த்து அதிர்ந்த விஷயத்தை உங்களுடன் சொல்வதற்கு முன்னால் சில விஷயங்களை பேச வேண்டியிருக்கிறது. குடும்பம் என்றால் என்ன? எதையெல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்? எவ்வளவு வருடங்கள் அப்படி குடும்பமாக இருப்பார்கள்?

படித்ததும் குழப்பமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறதா?

சத்தியமாக நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது குழப்ப வேண்டும் என்பதற்காகவோ இந்த விஷயத்தை சொல்லவில்லை தெரியாமல் தான் கேட்கிறேன். இரு குடும்பத்தின் எக்ஸ்பயர் தேதி என்ன?

பங்களிப்பு :

பங்களிப்பு :

அண்ணன், அண்ணி, தம்பி, மாமியார் மாமானார், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் என கூட்டமாக இருந்த எங்கள் வீடு ஒரு கட்டத்தில் வேலை, குழந்தைகளின் படிப்பு என்று ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி பிரிந்து சென்றார்கள்.

வேலை செய்யுமிடத்தில் க்வாட்டஸ் கொடுக்க அங்கேயே நாங்கள் சென்றுவிட்டோம். இணையை இழந்த பறவை எப்படி தவிக்குமோ அதே போன்றொதொரு மனநிலையில் தான் அம்மா என்று இருந்திருப்பார். ஒரு மாதம் என் வீட்டிலும் ஒரு மாதம் என் அண்ணன் வீட்டிலும் இருப்பார்.

 ஒரு மாதக்கணக்கு :

ஒரு மாதக்கணக்கு :

அதென்ன ஒரு மாதக்கணக்கு, அம்மாவை வைத்துக் கொள்ள பிடிக்காமல் எல்லாம் இல்லை, இந்த ஊர்ர்காரர்களும் சொந்தங்களும் தான் இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டார்கள்.

நீயே பாத்துக்கர உங்க அண்ணன் பாத்துக்கமாட்டானா? உங்க அண்ணனும் புள்ள தானா? தம்பி வெளியூரில் இருந்ததினால் இந்த ஆட்டத்திற்கு அவனை சேர்த்துக் கொள்ளவேயில்லை சொந்த ஊரிலேயே நானும் அண்ணனும் மட்டும் தான் இருந்தோம். கேட்போரிடத்தில் எல்லாம் இங்க ஒரு மாசம் அண்ணன் வீட்ல ஒரு மாசம்னு அம்மா இருப்பாங்க என்று சொன்னால் தான் சமாதானம் அடைகிறார்கள். இதைத்தாண்டி வேறு எதாவது சொன்னால் அவ்வளவு தான்

இதிலென்ன சந்தேகம் :

இதிலென்ன சந்தேகம் :

அப்பா இறந்த சில மாதங்களில் அம்மாவை என்னுடனே வைத்துக் கொண்டேன், மனைவியும் அம்மாவும் அப்படியொன்றும் ராசி கிடையாது தான், தினமும் அலுவலம் முடிந்து இரவு எட்டு மணிக்கு நுழையும் போதே, இருவரும் ஒவ்வொரு மூளையில் உட்கார்ந்திருப்பார்கள்.

உன் பொண்டாட்டி இன்னக்கி என்ன பண்ணா தெரியுமாடா என்று அம்மா ஆரம்பிக்கும் போதே உள்ளே சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உருளும் இல்லையென்றால் மகளுக்கோ மகனுக்கோ வசவு விழுந்து கொண்டிருக்கும். அப்போதே கேட்டால் பத்திரகாளி ஆகிடுவாள் என்ற அனுபவம் இருக்கிறது என்பதால் சாவகாசமாக கேட்பதையே வழக்கமாக வைத்திருந்தேன்.

கேட்டால் சப்பையான காரணங்களை சொல்லி இருவரும் மல்லுக்கட்டி நிற்பார்கள்.

ஆண்களின் பாடு :

ஆண்களின் பாடு :

இன்னொரு நாள் பார்த்தால் இருவரும் சிரித்து பேசிக் கொண்டு பஜ்ஜி போடுறோம், பூ கட்றோம்னு தாயும் மகளுமாய் உறவாடிக் கொண்டிருப்பார்கள். என்னடா இது காலைல போகும் போது ரெண்டும் முகத்த திருப்பிட்டு இருந்தாங்க இப்போ வந்து இப்டி சொல்றாங்க என்று கேட்டால் நம்மையே முட்டாளாக்கி விடுவார்கள்.

மனைவியையும் , அம்மாவையும் சமாளிப்பதே தனிக்கலை என்றே சொல்லலாம்.

கோவிலுக்கு போயிருந்தேன், உங்க சின்ன பாட்டிய பாத்தேன்... ஒரே பையன் வீட்லயே ஏன் இருக்க அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கதா மூணு பசங்க இருக்காங்கள்ல மாறி மாறி இரு அப்பறம் நால பின்ன பெரிய செலவா வந்துச்சுன்னா மூணும் அடிச்சிட்டு நிப்பானுக

அம்மா மென்று முழுங்கி சொல்லும் போதே என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினச்சேன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

பேரப்பிள்ளைகள் :

பேரப்பிள்ளைகள் :

சின்னப்பாட்டி சொன்னது அம்மாவுக்கு நியாயம் என்று பட்டிருக்கும் போல, எனக்குத் தெரிந்து சின்னப்பாட்டி ஒருவர் மட்டும் தெரியாமல், எங்களிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு எத்தனை பேர் விமர்சித்தார்களோ அது அவர்களுக்கே வெளிச்சம்.

ரெண்டு மாசம் ஆகிடுச்சு அங்க பெரியவன் புள்ளைகள பாக்கணும் போல இருக்கு அங்க ரெண்டு நாள் இருந்துட்டு வரேன் போன் பண்ணேன் சாய்ந்தரம் வந்து கூட்டிட்டு போறேன்ன்னு சொல்லிருக்கான் என்றார் அம்மா.

அன்றிலிருந்து அங்கு ஒரு மாதம் இங்கு மாதம் என்றானது. தம்பியையும் இந்த ஆட்டத்தில் சேர்க்க, குட்டிய பாக்கணும்டா... ஊருக்கே வரமாட்றான் பாவம் லீவு கிடைக்கல போல நான் வேணா போய் பாக்கட்டுமா என்று தூபம் போட்டார், வயசான காலத்துல பஸ்ல போய்ட்டு வந்துட்டு இருக்காத... ஒண்ணு கணக்கா ஒண்ணு ஆகிடுச்சுன்னா யாரு பாக்குறது என்று மிரட்டி இருவருமே இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

உங்களுக்கென்ன பிரச்சனை? :

உங்களுக்கென்ன பிரச்சனை? :

குழந்தைகளுக்கு திருமணமானவுடன் குடும்பம் என்ற அமைப்பு சிதற ஆரம்பிக்கிறது என்றே வைத்துக் கொள்ளலாம். என் அம்மா எங்கே இருக்க வேண்டும், யார் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டுமே...

தனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் போது ஒருவனை மட்டும் அழைத்து டேய் உன் தம்பிகள வச்சுட்டு உங்கம்மா ரொம்ப கஷ்டப்படுது நீ கொஞ்சம் பெரிய பையன் தான போய் பக்கதுவீட்ல இரு, இல்ல உங்க பெரியப்பா வீட்டுக்குப்போ என்று யாராவது சொல்வார்களா? மூன்றுமே என் பிள்ளைகள் என்று தானே சரிசமமான பாசத்தை கொட்டி வளர்க்கிறாள். ஆனால் அம்மாவுக்கு மட்டும் ஒரே புள்ள வீட்ல இருக்காத என்ற மட்டமான அட்வைஸ் எதற்கு?

என் அம்மாவை நான் பார்த்துக் கொள்வதால் என் வீட்டில் வைத்திருப்பதால் உங்களுக்கென்ன பிரச்சனை.

அப்பாக்கள் ரோஷக்கார்கள் :

அப்பாக்கள் ரோஷக்கார்கள் :

என் வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டும் நான் பேசக்கூடாது தான். குழந்தைகளை திருமணம் செய்து விட்டு தனியாகவோ அல்லது மாதாமாதம் இப்படி பறந்து கொண்டிருக்கும் வயதானவர்களை பார்த்தாலே கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது.

இணையை பிரிந்த பெண்கள் சமாளித்து விடுவார்கள். மருமகளுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்வது எப்படியென்று அவர்களுக்கு தெரியும், எதை மகன்களுக்கு சொல்ல வேண்டும், எதை மகன்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனால் அப்பாக்களுக்கு இந்த விஷயமெல்லாம் அத்துப்படி கிடையாது.

தாத்தாக்களின் வாழ்க்கை :

தாத்தாக்களின் வாழ்க்கை :

திருமணமானதிலிருந்தே மனைவியின் சேவைகளைப் பெற்றே பழக்கப்பட்டவர்கள். மனைவி இறந்த பிறகு ஒரு கை முடமானது போலவேயிருக்கும். அதிலும் ஆண்களின் ஓட்டமெல்லாம் அவர்களுக்கு என்று வருமானம் வரும் போது, தனக்கு அடங்கி மரியாதை கொடுக்கும் மனைவி இருக்கும் வரை மட்டுமே, மனைவி இல்லை, அந்த வயதில் பெரிதாக வருமானமும் இருக்காது.

இரண்டுமே இல்லாமல் முற்றிலும் முடங்கிக் கிடப்பார்கள். இந்த நேரத்தில் வயோதிகத்தினால் உடலில் ஏற்படுகிற சிக்கல்கள், மகன்களின் பொருளாதாரப்பிரச்சனை

எல்லாம் சேர்ந்து கொள்ளும் போது தாத்தாக்களின் வாழ்க்கை திண்டாட்டமாகிவிடுகிறது.

பேங்க் :

பேங்க் :

என் கதையை விடுவோம். என் பெயரிலும் அண்ணன் பெயரிலும் இருந்த ஜாயிண்ட் அக்கவுண்டினை கேன்சல் செய்துவிட்டு அக்கவுண்டினை க்ளோஸ் செய்திடலாம் என்று சொல்லி கடந்த இரண்டு நாட்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். வெளியில் விசாரிக்கும் போது மிக எளிதான வேலையான சொன்னார்கள் ஆனால் உள்ளே சென்ற பிறகு இப்படி இழுத்தடிக்கிறார்கள்....

மணி பன்னிரெண்டாகிவிட்டது. வங்கியிலிருந்து வெளியே வந்து வங்கிக்கு பக்கவாட்டிலிருக்கும் ஜூஸ் கடையில் சாத்துக்குடி ஜூஸ் சொல்லிவிட்டு காத்திருந்தேன்.

முகங்கள் :

முகங்கள் :

வங்கிக்கு வரும் முகங்களும் மருத்துவமனைக்கு வரும் முகங்களும் ஏனோ எனக்கு ஒன்று போலவே பட்டது. ஏதோ ஒரு வித ஏக்கம் தவிப்பு அவர்களின் முகத்தில் பார்க்க முடிந்தது. ஏடிம் கார்டு, க்ரிடிட் கார்டு இருக்கிறதே, டிஜிட்டல் பேங்கிங் என்று என்னென்ன பெயரில் சொன்னாலும் அவை எதுவும் எங்களுக்கு குறிப்பாக அடித்தட்டில் இருக்கக்கூடிய முதியவர்களுக்கு வந்து சேரவில்லை என்பதே நிதர்சனம்.

ஊர்லயிருந்து பணம் போட்டிருக்கேன்னு சொன்னான் எடுக்க வந்திருக்கேன் என்று சொல்லும் பெரியவர்கள் தான் அங்கே அதிகம், ஏடிஎம் கார்டு இருந்தா ஈஸியா எடுக்கலாம் இப்டி பேங்க்குக்கு வரணும்னு அவசியமில்ல என்று சொன்னால் ஏடிஎம்ல போய் நம்பர போடணும் அது போடத்தெரிய மாட்டேங்குது என்று சிரிப்பார்கள்.

ஜூஸ் வந்தது :

ஜூஸ் வந்தது :

இந்தா சார் என்று ஜூஸை நீட்டினார்கள். வெயிலுக்கு கண்கள் கூச சற்று ஒதுங்கி ஓரமாக வந்தேன், அண்ணே இந்தாளு இன்னும் இங்கயே கிடக்கது என்று சொல்ல, டேய் ஒருவாட்டி சொன்னா புரியாதா என்று சொல்லி க்ளாஸில் தண்ணியை எடுத்து அந்தப்பக்கம் ஊற்றினார், கிழம்.... நம்ம உசுர வாங்குறதுக்குன்னே வருதுங்க இங்க ஒண்ணு கணக்கா ஒண்ணு ஆச்சுன்னா நம்ம தலைல வந்து விடியும் என்று புலம்பினான்.

யாராது என்று எட்டிப்பார்க்க எழுபதுகளில் ஓர் முதியவர் இருந்தார். தண்ணீர் தெளிக்கப்பட்டதால் மெல்ல எழ முடியாமல் எழுந்து கொண்டிருந்தார். பார்த்ததும் ஏனோ மனம் பதறியது. என்னையே ஒரு கணம் அப்படி பார்த்தது போல இருந்தது. குடித்துக் கொண்டிருந்த கிளாஸை வைத்து விட்டு அவரை தூக்கி உட்கார வைத்தேன்.

ஜூஸ் வேண்டுமா? :

ஜூஸ் வேண்டுமா? :

முகம் பார்க்க மிகவும் களைப்பாக இருந்தது போல தோன்றியது. நடுத்தர வர்க்கதினருக்கான முகக்களை பெரும் பணக்காரரோ அல்லது அன்றாடம் பிழைப்புக்கு உழைக்கும் வர்க்கமோ இல்லை.

ஜூஸ் குடிக்கிறீங்களா? வீடு எங்க? ஆட்டோ ஏத்தி விடவா?

பெரியவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

சார் ரெண்டு நாளா இங்கயே கிடக்குது. நேத்து நைட்டு பாக்க பாவமா இருக்கேன்னு நான் தான் ஜூஸ் குடுத்தேன். இன்னக்கி காலைல பாத்தா இங்கயே கிடக்குது. அதான் கிளம்புனு சத்தம் போட்டேன். அந்த கடைக்காரர் சொன்னார்.

ரெண்டு இட்லி போதும் :

ரெண்டு இட்லி போதும் :

அப்படியே அவரை விட்டுப்போகவும் மனமில்லை. அவர் காதருகே சென்று சற்று கத்தி ஐய்யா.... சாப்டீங்களா ஜூஸ் சொல்லவா என்றேன்.

ரெண்டு இட்லி போதும் என்று முணுங்கினார். அருகிலிருந்த ஓட்டலில் கேட்க லன்ச் டைம் சார் இட்லி இல்ல என்றார்கள் சரியென்று ஒரு வெரைட்டி ரைஸ் வாங்கிக் கொண்டு அவருக்கு முன்னால் விரித்து வைத்தேன். பதறிக் கொண்டு எடுத்து வாயில் வைத்துக் கொண்டார். கொடூரப் பசியில் இருந்திருப்பார் போல... ஓரிரு நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தார். இன்னும் திருப்தியடைவில்லை போல இன்னொரு பார்சல் வாங்கி வந்தேன் அதையும் சாப்பிட்டு முடித்தார்.

தண்ணீர் கொடுத்தேன். அரைவாசி பாட்டிலை குடித்தார். இப்போது தான் நிமிர்ந்து அவரை சுற்றி இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்த்தார்.

பெங்களூரு :

பெங்களூரு :

மெல்ல என் கையைப் பிடித்து எழுந்து கொண்டவர், என்னிடம் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். அவசர அவசரமாக ஜூஸ் கடைக்கு காசு கொடுத்துவிட்டு அவர் பின்னால் ஓடினேன்...

எங்க வர்ற?

வீடு எங்கன்னு சொல்லுங்க ஆட்டோ ஏத்தி விடுறேன்....

இங்கயிருந்து பெங்களூருக்கு ஆட்டோ வருமா?....என்று கேட்டுவிட்டு சற்று நடையை வேகப்படுத்தினார்.

நான் புரியாமல் பெங்களூருக்கு எதற்கு?? ஏன் அங்கே போக வேண்டும் என்கிறார். வீட்டிலிருந்து சண்டை போட்டு வெளியே வந்துவிட்டாரா? அதனால் வீட்டிற்கு போகப்பிடிக்காமல் பெங்களூரில் இருக்கக்கூடிய உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிறாரா என்று நினைத்துக் கொண்டேன்.

 சுய அறிமுகம் :

சுய அறிமுகம் :

சாப்பிட்டவுடன் இவ்வளவு சுறுசுறுப்பாக ஓடும் இந்த தாத்தாவின் வேகம் என்னை எதோ செய்தது அவருக்கு உதவ வேண்டும் என்ற உள்ளே அடித்துக் கொண்டேயிருந்தது. விடாமல் நானும் பேசினேன்.

ஒரு கட்டத்தில் மூடியிருந்த கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டார். நானும் உட்கார்ந்தேன். என்னைப் பற்றிய சுய அறிமுகம் செய்து கொண்டேன் பெயர் வயது குடும்பம் என பின்னணியை எல்லாம் சொல்லி பேச்சை ஆரம்பித்தேன், அப்பறம் கோயம்புத்தூர்ல எங்க.... என்று கேட்டு வைத்தேன்.

அவரிருக்கும் ஏரியாவை தெரிந்து கொண்டால் கொண்டு போய் விட வசதியாக இருக்குமல்லவா என்பது என் எண்ணம்.

கணக்கச் செய்யும் வார்த்தைகள் :

கணக்கச் செய்யும் வார்த்தைகள் :

இது கோயம்புத்தூரா? ராமேஸ்வரம்னு சொன்னான்....

ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது. எங்க இருக்கீங்கன்னு கூட தெரியலயா பெரியவரே என்றேன். நீண்ட மௌனத்திற்கு பிறகு பேச.... அல்ல புலம்ப ஆரம்பித்தார். சிலவற்றை நானாக கேள்விக்கேட்டு பெற்றேன். அதன் சாராம்சம் இது தான்.

ரெண்டு பசங்க, ஒருத்தன் பெங்களூர்ல வேலை இன்னொருத்தனுக்கு பூனே... நான் சின்ன வயசுல லேத்துப்பட்டறைல வேல செஞ்சேன் அப்பறம் சேலத்துல ஜவுளிக்கடையில வேலையிருக்குன்னு சொன்னாங்க சரி இங்க வருமானம் சரியில்ல அங்க போனா புள்ளைங்கள நல்லா படிக்க வைக்கலாம்னு போனேன்.... பிழிஞ்சு எடுத்துட்டானுங்க காலைல ஒன்பது மணில இருந்து நைட்டு எட்டு மணி வரைக்கும் வேலையிருக்கும். அப்போ எல்லாம் பஸ்ஸூக்கும் காசிருக்காது, நடந்தே வீட்டுக்கு வருவேன். கடையில இருந்து வீடு எட்டு கிலோமீட்டரு.

அவ்வளவு தான் வாழ்க்கை :

அவ்வளவு தான் வாழ்க்கை :

ஒண்ணுமில்லாத நாயி அங்க இங்கன்னு காச தேத்தி பன்னிரெண்டாவது வரைக்கும் படிக்க வச்சிட்டேன். அப்பறம் அவனுங்களா எதோ பேங்க் லோனு, ஸ்காலர்ஷிப்னு காலேஜ் சேர்ந்துட்டானுங்க.... அதுல எல்லாம் கெட்டிக்காரனுக ரெண்டு புள்ளையும் அருமையா படிக்கும்.

அப்பறம் இருக்குற நகைய வித்து நானும் கொஞ்சம் பணம் கொடுத்தேன். நல்ல வேல கிடச்சது பெரியவன் வெளிநாட்டுக்கு எல்லாம் போய்ட்டு வந்தான். அவங்க அம்மா சேலையும் எனக்கு சட்டையும் எடுத்துட்டு வந்தான். மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறேன்னு சொன்னா ஒரு தடவ வந்தப்போ. அதுவா லோன் போட்டு கல்யாணம் கட்டிகிச்சுக.... பெரியவன்ட்ட ஒரு பொண்ணு சின்னவன்ட்ட ரெண்டு பையன் இருக்காங்க அருமையா பேசுங்க.... பேத்தி நல்லா பாடுவா.

பேரன் கிரிக்கெட் பேட் கேட்டுட்டேயிருக்கான், நமக்கு வருமானம் இருந்தாதான பேரப்பசங்களுக்கு எதாவது செய்ய முடியும், எங்க அதுக்கெல்லாம்.... ரெண்டு வருசத்து முன்னாடி பொண்டாட்டிக்கு காச்ச வந்து ஆஸ்பத்திரில சேத்திருந்தேன் ஒரு வாரத்துல செத்துப் போச்சு.

அவ்ளோ தான். என் வாழ்க்கையே தலைகீழாகிடுச்சு.

 நடுத்தெருவில் :

நடுத்தெருவில் :

இதே ஊர்ல இருந்தவனுங்க அடிச்சு பிடிச்சு வெளியூர் வேலைய தேடிட்டு போனாங்க,இங்க சென்னை தான். மூணு மாசம் அவன் வீட்ல கொஞ்ச நாள் இவன் வீட்ல கொஞ்ச நாள்னு மாறி மாறி இருந்தேன். அப்பறம் ஒருத்தன் பெங்களூரு இன்னொருத்தன் பூனேக்குன்னு போனாங்க. அங்கயும் பின்னாடியே போனேன்... பாசையும் புரியாது , ஊரும் தெரியாது வீட்லயே அடஞ்சு கிடப்பேன்

மருமகளுக்கு கொஞ்சம் மனஸ்தாபம்.... சண்ட போட்டுக்கிச்சுக ஒரு ரூபாய்க்கு கூட பசங்கள எதிர்ப்பார்த்திருக்கிற நிலம... இங்கியிருந்து இன்னொருத்தன் வீட்டுக்கு போலாம்னு பாத்தா அவன் என்ன எட்டுற தூரத்துலயா இருக்கான்.

ஒரு நாள்... எதோ வேண்டுதல் இருக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு போறோம்னு சொல்லி நாங்க எல்லாம் கார்ல கிளம்பினோம். விடியக்காலைல ஒரு அஞ்சு மணியிருக்கும், டீ சாப்பிடலாம்னு வண்டிய நிப்பாட்டினான். அப்பா, எதிர் ரோட்ல பாத்ரூம் இருக்கு நீ போகணும்னா போய்ட்டு வந்துரு நாங்க இந்த கடைல டீ சாப்பிட்டு இருக்கோம்னு சொல்லி இறக்கிவிட்டான்.

ரோட க்ராஸ் பண்ணி அந்தப்பக்கம் தான் போயிருப்பேன்.... வண்டிய கிளப்பிட்டு சர்ர்ன்னு பறந்துட்டான்.

கடைசி வார்த்தைகள் :

கடைசி வார்த்தைகள் :

வார்த்தையே வர்ல.... கண்ணுல இருந்து தண்ணீ மட்டும் கொட்டுது. கையில ஒரு பைசா இல்ல... சரி பையன் கூடத்தான போறோம்னு சொல்லி சேத்து வச்சிருந்த காசையும் அங்கயே வச்சுட்டு வந்துட்டேன்.

திரும்ப வருவானா? எங்க போறான் ஒண்ணும் தெரியாது. அங்கயே நைட்டு வர உக்காந்திருந்தேன். வரமாட்டான்னு புரிஞ்சது. அது பைபாஸ் ரோடு.... நடந்து ஊருக்குள்ள வந்தேன், உழச்சு சாப்பிட்ட உடம்பு கைநீட்டி பிச்ச கேக்க கூச்சமாஇருந்துச்சு....நாலஞ்சு கடைல வேல கேட்டேன், கிழவன் என்ன வேலை செய்வான்ன்னு சொல்லி தொறத்திவிட்டாங்க ஒரே ஒரு ஹோட்டல்ல டேபிள் தொடைக்கிற வேல கொடுத்தாங்க மூணு வேலைக்கி சாப்பாடுன்னு சொன்னாங்க சரின்னு ஒத்துக்கிட்டேன்.

எனக்கு தங்குறதும் பிரச்சனை அதுக்கும் ஏற்பாடு பண்ணனுமான்னு சொல்லி தொறத்திவிட்டாங்க, அப்பறம் நடந்தே அந்த பேங்க் கிட்ட வந்துட்டேன். ஒரு வாரமாச்சு எதுவும் திங்கள தண்ணியும் டீயும் குடிச்சே காலத்த ஓட்டினேன். அதுக்கு மேல உடம்புல தெம்பு இல்ல விழுந்துட்டேன்....

பசங்களப்பத்தியா? நான் என்னப்பா சொல்றது.... நல்லாயிருக்கட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync life my story
  English summary

  Old man Over Thrown By his Son

  Old man Over Thrown By his Son
  Story first published: Thursday, March 1, 2018, 13:38 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more