என்கிட்ட மட்டும் அத கேட்றாதீங்கம்மா! my story #241

Subscribe to Boldsky

இங்கிருக்கும் பெரும்பாலனவர்கள் செய்கிற தவறு என்ன தெரியுமா? பெரியவர்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கிறது. சந்தோசமோ துக்கமோ அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைப்பது. குழந்தைகளுக்கு எப்போதுமே விளையாட்டு புத்தி என்று அவர்களை சட்டையே செய்யாமல் நகர்ந்துவிடுவதுண்டு.

உண்மையில் குழந்தை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் அந்த குழந்தை உள்வாங்குகிறது. அது உள்வாங்கும் விதத்திற்கு ஏற்ப தன்னுடைய குணநலன்களை கட்டமைத்துக் கொள்கிறது. இது தான் என்னுடைய தேவை இதற்காகத்தான் அடம் பிடித்து அழுதேன் என்று அவர்களால் வெளிப்படையாக பேச முடியாவிட்டாலும் பெற்றோர்கள் அதனை கண்டுணர வேண்டியது அவசியம்.

இங்கே நம்மைப் போன்றே சராசரியான வாழ்க்கை முறையை நடத்துகிற குடும்பத்தில் பெற்றோருக்கும் குழந்தைக்குமான இடைவேளி எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாள் :

ஒரு நாள் :

காலை ஆறு மணிக்கு எழுந்தாள் என்னையும் எழுப்பிவிட்டுவிடுவார். நான் ரெடியாகி வருவதற்கும் அம்மா எதாவது சாப்பிட ரெடி செய்து கொண்டு வருவதற்கும் சரியாக இருக்கும் பெரும்பாலும் உப்புமா, இட்லியாகத்தான் இருக்கும். அதையே சாப்பிட்டு மதியத்திற்கும் எடுத்துச் சென்றுவிடுவேன். சில நேரங்களில் ஸ்கூல் பஸ் ஏற்றிவிட அப்பா வருவார் இல்லையென்றால் நானே சென்று விடுவேன்.

மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு திரும்பினால் வீட்டு பூட்டிக் கிடக்கும். மேல் வீட்டில் இருக்கிற ஆண்ட்டியிடம் சாவியை வாங்கிக் கொண்டு உள்ளே வருவேன். பேகை வைத்தவுடன் ஃபிரிட்ஜில் எதாவது ஸ்நாக்ஸ் இருந்தால் சாப்பிட்டுவிட்டு சைக்கிள் ஓட்ட கிளம்பிவிடுவேன். இரவு பசிக்க ஆரம்பித்தவுடன் எட்டு மணிக்கு வீட்டிற்கு வருவேன். அம்மா மட்டும் கிட்சனில் எதையோ செய்து கொண்டிருப்பார்.

பசி :

பசி :

வந்தவுடனேயே ஹோம்வொர்க் செய்யலையா? ஊர் சுத்த போய்ட்டியா?? பேரண்ட்ஸ் மீட்டிங்னு கூப்டு நானெல்லாம் வரவேமாட்டேன் என்று என்னென்னவோ சொல்வார். இந்த நேரத்தில் பசிக்குது என்று சொன்னால் அடி விழும் என்று தெரிந்துமே அம்மா பசிக்குது என்று போய் நிற்பேன். எனக்கென்ன பத்து கையா இருக்கு என்று மீண்டும் கத்துவார்.

அம்மாவிடம் அடம்பிடித்து பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போய் எதாவது நொறுக்குத் தீனி வாங்கி சாப்பிடுவேன்.

தூக்கம் :

தூக்கம் :

அந்த நொறுக்குத்தீனி சத்தியமாக பசியை தீர்க்காது. ஆனாலும், பசியுணர்வு சற்றே மறந்து போகும் என்பதால் விரும்பிச் சாப்பிடுவேன். மீண்டும் இட்லி அல்லது ரசம் சாதம் இருக்கும். டெய்லி இதே வைக்கிற என்று மறந்தும் சொல்லிவிடக்கூடாது மீறிச் சொன்னால் அவ்வளவு தான். எப்படியோ சாப்பிட்டு முடிக்க ஒன்பது மணியாகிவிடும். பின் ஒரு மணி நேரம் எழுதுகிற ஹோம்வொர்க் மட்டும் முடித்துவிட்டு பத்து மணிக்கு தூங்கச் சென்றுவிடுவேன்.

சரியாக அந்த நேரம் தான் அப்பா வீட்டிற்குள் நுழைவார். சில நாட்கள் முன்னரே வந்தாலும் சோஃபாவில் அக்கடாவென்று உட்கார்ந்துவிடுவார். அப்பா ஆபிஸ் போய் டயர்டா வந்திருக்கேன் இப்ப வந்து இப்டி எல்லாம் அடம் பிடிக்காத உனக்கு கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா? என்று பல முறை திட்டு வாங்கியதால் வந்துவுடனே டேடி..... என்று ஓடிச்சென்று அவரிடம் தாவுவதெல்லாம் இல்லை.

 அம்மா அப்பா :

அம்மா அப்பா :

ஸ்கூல் ப்ராஜெக்ட், கடைக்கு போணும், புக் கவர் போட்டு தாங்க, இப்படி எந்த உதவியும் அவர்களிடம் கேட்டுச் செல்ல முடியாது. வேலைக்கு சாப்பாடு கிடைக்கிறது, புது டிரஸ், சைக்கிள், டிவி, ஸ்நாக்ஸ்,ஸ்கூல் ஃபீஸ் ஆகியவை எல்லாம் கேட்பதற்கு முன்பே சில நேரங்களில் அடம்பிடித்தாவது வாங்கிவிடலாம் என்கிற நம்பிக்கை தான். எனக்கும் அப்பா அம்மா இருக்காங்க என்று எனக்கு உணர்த்துகிறது என்று நினைக்கிறேன்.

விசாரணை :

விசாரணை :

ஒரு முறை பள்ளியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது நான் அடித்த பந்து அந்த வழியாக நடந்து சென்ற எல்கேஜி மாணவனின் தலையில் பட்டு ரத்தம் தெரித்தது. உடனே பிடி வாத்தியார் முதல் பலரும் கூடினார்கள் அந்த மாணவனை ஒரு சார் வண்டியில் வைத்து தூக்கிச் சென்றார்கள்.

எங்களை மட்டும் தலைமையாசிரியர் அறையில் வைத்து விசாரணை நடந்தது.

ஸ்பெஷல் :

ஸ்பெஷல் :

நான் பால் தான் போட்டேன், இவன் தான் அடிச்சான்.... அப்பவே சொன்னேன் ப்ரேக் பெல் அடிக்க போறாங்க பசங்க எல்லாம் ஓடி வருவாங்க இழுத்து அடிக்காதுன்னு கேட்டாதான... இதுக்கு தாண்டா உங்களையெல்லாம் கிரவுண்டலயே விடறதில்ல எல்லாருக்கும் பனிஷ்மெண்ட் எல்லாரும் நாளைக்கு பேரண்ட்ஸ் கூட்டிட்டு வாங்க என்றார் தலைமையாசிரியர்.

ஏற்கனவே ஹோம்வொர்க் சரியாக செய்வதில்லை, குறைவான மதிப்பெண் தான் எடுக்கிறேன் என்று பெயரும் பெற்றிருந்ததால் எனக்கு ஸ்பெஷல் கவனிப்பும் நடந்தது. ஒரு மணி நேரம் தலைமையாசிரியர் அலுவலக வாசலில் முட்டிப் போட வைத்தார்கள். நாளைக்கு பேரண்ட்ஸ் வோட வரணும் என்ற மிரட்டலுடன் வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தார்.

திட்டம் :

திட்டம் :

நிச்சயமாக அம்மா இதைச் சொன்னால் துவைத்து எடுத்துவிடுவாள், வேறு எதாவது சாக்கு சொல்லி வரவைக்க வேண்டும். இங்கே ஆசிரியர்கள் விளக்கட்டும் பெரும்பாலும் பேரண்ட்ஸ் மீட்டிங் வைத்தால் நம்மை எல்லாம் வகுப்பறைக்கு செல்லச் சொல்லிவிடுவார்கள். ஆசிரியரிடம் அம்மா பேசி சமாளித்து விடுவார். அப்படியே கோபப்பட்டாலும் பொது இடத்தில் வைத்து அம்மா அடிக்கமாட்டார். இதை முடித்து ஆபிஸ் சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது காலையில் நடந்ததை அம்மா மறந்திடுவார்.

ஆக நாளை எப்படியாவது அம்மாவை பள்ளிக்கு அழைத்து வந்துவிட்டால் போதும். மாலை பள்ளி முடித்து வீடு திரும்பும் போது பிடி வாத்தியார் என்னையும் என்னுடன் கிரிக்கெட் விளையாடிய சிலரையும் அழைத்து நாளைக்கு பேரண்ட்ஸ்வோர் வர்ல அவ்ளோ தான் என்று மிரட்டி அனுப்பினார்.

எல்லாம் இவனால :

எல்லாம் இவனால :

எல்லாம் இவனால தாண்டா.... நீ தான அடிச்ச நான் ஏன் பேரண்ட்ஸ் கூட்டிட்டு வரணும். க்ளாஸ்ல எல்லார் முன்னாடியும் எவ்ளோ அசிங்கமா போச்சு தெரியுமா? இப்ப பிடி சார் திட்டும் போதும் அத்தன புள்ளைங்க நின்னு பாக்குதுக அவமானமா இருக்கு எல்லாம் உன்னால தான்.... போ இனிமே எங்களோட சேராத உன்கிட்ட இனி நாங்க பேசமாட்டோம்.

போ இனிமே எங்க ப்ளேஸ்ல உக்கார கூடாது, சைக்கிள் வைக்க கூடாது, சாப்பிட வரக்கூடாது என்று பட்டியலிட்டார்கள். இந்த திடீர் புறக்கணிப்பு அழுகையை வரவழைத்தாலும் கட்டுப்படுத்தி சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.

புண்ணியமா போகும் :

புண்ணியமா போகும் :

அன்றைக்கு விளையாடச் செல்லவேயில்லை. ஆயிரம் மாணவர்கள் வரை பயிலும் அந்தப் பள்ளியில் என்னை மட்டும் தனியாக ஒதுக்கியதாக கற்பனை செய்து கொண்டேன். நினைக்க நினைக்க அழுகை வந்தது. ஏழரை மணிக்கு அம்மா வந்தார். டேய் என்னடா ஊர் சுத்த போலயா இன்னக்கி லைட்டு கூட போடாம என்ன தூங்கிட்டு இருக்க உடம்பு சரியில்லையா என்ன?

செலவு இழுத்து வச்சிராதடா உனக்கு புண்ணியமா போகும். நானே பலசரக்கடைக்கு காசு கொடுக்காம வச்சிருக்கேன் என்று சொல்லிக் கொண்டே நெற்றியில் கை வைத்தார்.

அதுக்குள்ள பசியா? :

அதுக்குள்ள பசியா? :

எல்லாம் ஜில்லுனு கிடக்கு எந்திரி எந்திரிச்சு உக்காந்து படி என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று விட்டார். நைட்டிக்கு மாறி கிட்சனுக்குள் நுழைந்தவர் எனக்கு டீ போட்டு கொடுத்தார். குடித்துவிட்டு இரவு உணவு தயாரிக்கச் சென்றுவிட்டார். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது அப்பா வருவதற்குள் அம்மாவை நாளை பள்ளிக்கு வர சம்மதிக்க வைத்துவிட வேண்டும்

அப்பா வந்துவிட்டால் அவர் காரணத்தை எல்லாம் விளாவாரியாக கேட்பார். கிட்சனுக்குள் சென்றேன். என்னடா இப்பதான டீ குடிச்ச அதுக்குள்ள பசியா? சாம்பார் சாதம் வச்சிருக்கேன் பத்து நிமஷம் உக்காரு...

இல்லம்மா என்று தயங்கி நின்றேன்.

பிடி சார் :

பிடி சார் :

அம்மாவிடம் என்ன காரணத்தைச் சொல்லி வரச் சொல்வது. படிப்பில் எந்த லட்சணம் என்று அம்மாவிற்கு தெரியும் அதனால் சார் கூப்டாரு என்று சொன்னாலே திட்டு விழப்போகிறது என்று உறுதி செய்துவிடுவார். அதனால் வேறு ஐடியா செய்திருந்தேன்.

அம்மா எங்களுக்கு ஸ்டேட் லெவல் கிரிக்கெட் மேட்சுக்கு வெளியூர் கூட்டிட்டு போறாங்க அதுக்கு பேரண்ட்ஸ் பெர்மிஷன் வேணுமாம்.... போய்ட்டு வா அப்பாட்ட காசு வாங்கிக்க. இல்லம்மா பெர்மிஷன் கொடுக்கணும்ல என்ன டைரில சைன் போடணுமா இந்த பாத்திரத்த விளக்கி வச்சிட்டு வரேன்...

டைரில எல்லாம் சைன் போட வேண்டாம்.... பிடி சார்ட்ட வந்து சொல்லணும்.

தப்பு பண்ணா என்ன செய்வ? :

தப்பு பண்ணா என்ன செய்வ? :

எப்பையும் உங்க ஸ்கூல்ல இப்டியெல்லாம் சொல்ல மாட்டாங்களே ஸ்கூலுக்கு எல்லாம் வரமுடியாது ஆபிஸ் போக வேணாமா என்றார் அடம்பிடித்து அழ ஆரம்பித்தேன். உங்கப்பாட்ட சொல்லு வந்தாருன்னா கூட்டிட்டுப் போ....

ம்மா ப்ளீஸ்ம்மா அப்பா வேண்டாம். அப்பா வந்தா கேள்வி கேட்டுட்டே இருப்பாரு நீ வாம்மா என்று சிணுங்கினேன். சரி அழாத காலைல பாத்துக்கலாம்.தட்டுல போட்டு போய் சாப்டு என்றார். நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று பயமாகவே இருந்தது பின் சிறிது நேரம் கழித்து அம்மா நான் தப்பு பண்ணா என்ன செய்வ என்றேன்.

தப்பு பண்ணியா? என்ன தப்பு பண்ண....

சும்மா தான் கேக்குறேன் சொல்லேன்ம்மா

கண்டிப்பா வந்திடு :

கண்டிப்பா வந்திடு :

அப்பா வந்துவிட்டார் வாசலில் வண்டி நிறுத்தம் சத்தம் கேட்டது. இன்னும் ஹாலிலேயே இருந்தால் டாப்பிக்கை எடுத்து விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் முன் கூட்டியே தூங்கச் சென்றேன். அம்மா நாளைக்கு கண்டிப்பா வந்திடு... வருவல்ல என்றேன்... வரேண்டா போடா என்றார்.

அறைக்குள் சென்று லைட் ஆப் செய்து விட்டு தூங்கினாலும் காது முழுக்க வெளியில் நடப்பதை தான் கவனித்துக் கொண்டிருந்தது.

என்னவாம் :

என்னவாம் :

என்ன சீக்கிரமா தூங்கிட்டானா? அப்பா கேட்கிறார் எதிர்ப்பார்த்தது போலவே அம்மா டாப்பிக்கை ஓப்பன் செய்துவிட்டார். ஆனால் அப்பா எந்த கேள்வியும் கேட்கவில்லை சரி போய்ட்டு வந்திரு டிக்கெட் போட்றது செலவு எவ்ளோ ஆகும்னு கேட்டுக்கோ என்னக்கி போறான் எங்க போய் விடணும் எல்லாம் அவங்களே பாத்துப்பாங்களா இல்ல நம்ம போனுமான்னு கேட்டுக்கோ ஐநூறு ரூபாய்க்கு மேல ஆச்சுன்னா வேண்டாம்.

டேட்டு ட்ரைன் விவரமெல்லாம் எனக்கு என்ன தெரியும். நீங்களே நாளைக்கு அவனோட ஸ்கூலுக்கு போய் பேசிட்டு வந்திடுங்களேன் என்றார் அம்மா

ஐயையோ..... ப்ளான் மொத்தமும் சொதப்பிடுச்சே என்று பல்லை கடித்துக் கொண்டேன்... அப்பாவும் காலைல பாத்துக்கலாம். நாளைக்கு நான் வெளிய நிறைய வேல இருக்கு. கரண்ட் பில் கட்ட வேற போகணும்

காலையில் :

காலையில் :

அப்பா முன்பாக இந்த டாப்பிக் எடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதைவிட பள்ளிக்கு வந்து உண்மை தெரிந்த பிறகு அம்ம எப்படி ரியாக்ட் செய்வாள் என்பதும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அம்மா இன்னக்கி வந்திடு... என்று கிளம்பும் அவசரத்தில் சொல்வது போல சொன்னேன். பாக்கலாம் என்றார்.

அம்மா ப்ளீஸ்ம்மா அப்பறம் சார் என்னைய திட்டுவாரு அப்பா வருவாரு... வேண்டாம் நீ வாம்மா ப்ளீஸ்ம்மா என்று அழுதே விட்டேன். டேய் இதுக்கு போய் ஏண்டா அழற வரேன் போ என்றார். அதோடு பாத்ரூம் கதவு திறக்கும் சத்தமும் கேட்டதால் தெறித்து ஓடினேன்.... வழியிலேயே அப்பா துண்டை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்.

கவனமாக அவர் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் ஓடினேன்.... டேய் இந்தாடா என்று அழைப்பது கேட்டும் திரும்பி கூட பார்க்கவில்லை பாய்ப்பா பஸ்ஸுக்கு லேட்டாச்சு என்று சொல்லியபடியே ஓடினேன்.

எங்கடா உங்கம்மா :

எங்கடா உங்கம்மா :

டேய் இது எங்க ப்ளேஸ் இங்க சைக்கிள் வைக்க கூடாது என்று சைக்கிள் ஸ்டாண்ட்டில் இருவர் காவலுக்கு நின்றிருந்தார்கள். வகுப்பறையில் போய் பேக் வைத்தது தான் தாமதம் பிடி சார் கூப்டாரு என்று வந்துவிட்டார்கள் நண்பர்கள். பயம் இன்னும் அதிகரித்தது. ப்ரேயர் ஆரம்பித்தது முதல் அங்கேயே நின்றிருந்தேன்.

ஒரு சிலரின் பெற்றோர் வந்திருந்தார்கள். எங்கடா உங்க்கம்மா என்றார் சார்.... நானாக குத்து மதிப்பாக பத்து மணிக்கு வருவாங்க சார் என்று சொல்லி வைத்தேன்.

 பத்தைக் கடந்து :

பத்தைக் கடந்து :

பத்து மணி வரையில் ஒரளவுக்கு தைரியம் இருந்தது. ஆனால் மணி பத்தைக் கடந்து சென்று கொண்டேயிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பயம் அதிகரித்தது. இரண்டு முறை வந்து சார் கேட்டார். பன்னிரெண்டு மணி ஆன பிறகு இனியும் அம்மா வரமாட்டார் என்று உறுதியானது. ஏண்டா அம்மா வருவாங்கன்னு பொய் வேற சொல்றியா.... ஒழுங்கா வீட்ல சொன்னியா இல்லையா என்று ஒரு அறை விழுந்தது.

பிறர் என்னைப் பார்த்தது சிரிப்பது போல பிரம்மை வேறு.... வரேன்னு சொன்னாங்க சார் என்றேன்.... வரேன்னு சொன்னா எங்க பொய்... வாயத்தொறந்தா பொய்.... இப்பவே இவ்ளோ பொய் பேசுறியே.... திட்டுக்கள் விழுந்தது. அன்றைக்கு முழுவதும் பிடி சார் ரூம் வாசலிலேயே நின்றிருந்தேன்.

அவ்ளோ தானா :

அவ்ளோ தானா :

வந்த பெற்றோரிடத்தில் பெயரளவுக்கு பேசி அனுப்பி விட்டார்கள். அட இவ்ளோ தானா என்று சற்றே ஆசுவாசமடைந்தேன். நீ தான் பால் அடிச்ச அந்த குட்டிப் பையனுக்கு எவ்ளோ ரத்தம் தெரியுமா? கண்ணுல ஆப்ரேசன் பண்ணியிருக்காங்களாம்... கண்ணு தெரியாதாம்... போச்சு உன்னைய போலீஸ்ட்ட பிடிச்சு கொடுத்திருவாங்க அப்பறம் உன்னைய ஜெயில்ல போட்ருவாங்க உன்னால இங்க படிக்க முடியாது. என்று இஸ்டத்திற்கு ஏற்றி விட்டார்கள். உட்சபட்ச பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

காக்கிச் சட்டையில் இருந்த வாட்ச்மேன் அண்ணனைப் பார்த்தால் கூட உதறியது.

ஒரு வாரம் :

ஒரு வாரம் :

வீட்டிற்கு சென்றதுமே அம்மாவிற்கு போன் செய்தேன்.... ஏன்ம்மா வர்ல இன்னக்கி பூரா என்னைய வெளிய நிக்க வச்சிட்டாங்க தெரியுமா? அம்மா மீட்டிங்கல இருக்கேன் வந்து பேசுறேன்...என்றது அம்மாவின் குரல்.. நீ என்று அடுத்த வார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே போன் கட் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின் ஒரு வாரம் வீட்டில் அடம் பிடிப்பதும், பள்ளியில் திட்டு வாங்குவதும் சகஜமானது. அம்மாவுக்கு ஆபிஸ்ல பயங்கர வேலை போன் நம்பர் வாங்கிட்டு வா போன்ல பேசிக்கலாம் என்றார்.... இல்லை நீ நேரில் தான் வர வேண்டும் என்று அடம்பிடித்தேன்.

என்னிடம் :

என்னிடம் :

எவ்வளவு கெஞ்சியும் அம்மா பேச்சைக் கேட்கவேயில்லை.... அம்மாவுக்கு என் மீது பாசமே இல்லை அம்மாவுக்கு மட்டுமல்ல யாருக்குமே என் மேல பாசமில்ல என்று பழைய கதைகளை எல்லாம் தோண்டியெடுத்து அலசி ஆராய்ந்து வருத்தப்பட ஆரம்பித்தேன். என்கிட்ட எப்பயாவது பாசமா பேசிருப்பியாம்மா பாசமா கூட வேண்டாம் பேசிருப்பீங்களா ரெண்டு பேரும் நைட்டு தனியா தூங்க பயமா இருக்குன்னு எவ்ளோ நாள் சொல்லிருக்கேன் அப்பக்கூடபெரிய பையன் இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது ஒழுங்கா படிக்கணும்னு ஆறாவது படிக்கிறப்போ சொன்னீங்க ஆனா இப்ப எயித் படிக்கிறப்போம் என் பிரண்ட அவங்க அப்பா டெய்லி பைக்ல கொண்டு வந்து விடுறாரு.

நான் என்னம்மா தப்பு பண்ணேன்.... என்னைய ஏன் உங்களுக்கு பிடிக்கல என்று சுவற்றில் மாட்டியிருக்கும் ஃபேமிலி போட்டோவைப் பார்த்து அழுது கொண்டிருந்தேன். தவறியும் அம்மா கதவைத் திறந்து உள்ளே வரவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Office Going Parents Will face this Problem in their daily life

    Office Going Parents Will face this Problem in their daily life
    Story first published: Tuesday, April 24, 2018, 14:21 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more