For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மருமகள் உதவியுடன் மகனை கொலை செய்த தாய்! My Story #194

  |

  மணி எட்டாகிவிட்டது. இன்னும் வரவில்லை... அத்தையின் முகத்தை பார்த்தேன், தைலத்தை கையில் எடுத்துக் கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தார், தேச்சு விடவா அத்த என்று கேட்டதும் சுயநினைவுக்கு வந்தவராய்....

  இன்னக்கி..... என்று இழுத்தார் மகள் உட்கார்ந்திருப்பதை சுட்டிக் காட்டி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சைகை செய்தேன். சரி, நீ குருமாவுக்கு அரச்சு வை நான் சப்பாத்திக்கு மாவு பிசையுறேன் வந்ததும் சூடா தட்டிக் கொடுக்கலாம் என்று எழுந்து கொண்டார்.

  மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் யூ.கே.ஜி படிக்கும் மகனும் உட்கார்ந்து எதோ ஒரு கார்டூன் சேனலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இன்றைக்காவாது நடக்குமா?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  முருகனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்று உறுதியானதுமே எல்லாரையும் போல சந்தோஷமாக கொண்டாடினாள், தன்னுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், வருங்கால கணவர், அவரது உறவுகள் எல்லாம் எப்படி என்னை வரவேற்ப்பார்கள், அந்த வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற கனவு பலமடங்காக அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

  #2

  #2

  அளவான வருமானத்தில் இருந்த முருகனுடன் எந்த பகட்டான வாழ்க்கையையும் இவள் நினைத்திருக்கவில்லை, மாறாக அளவு கடந்த அன்பும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டும் என்று மட்டும் கனவு கண்டு கொண்டிருந்தாள். திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் வெளியூரில் வேலை என்று சொல்லிச் சென்றவன் ஒரு மாதம் கழித்தே தான் வந்தான்.

  கொஞ்சம் கொஞ்சமாக திருமண வாழ்க்கை குறித்த உண்மை அவளுக்கு புரியத் துவங்கியது.

  #3

  #3

  அவரு எங்க போயிருக்காரு அத்த, என்னக்கேட்டா? நீயாச்சு உன் புருஷனாச்சு என்று விலகிக் கொள்ளவே செய்தார் மாமியார். ஒரு மாதம் கழித்து வந்தவனிடம் கணவனின் அன்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து ஏமாந்திருந்த வெறுப்பில் சற்றே குரலை உயர்த்தி.... எங்க போனீங்க ஒரு போன் இல்ல ஒண்ணுமில்ல, காணோம்னு எங்க எல்லாம் தேடினோம் தெரியுமா? என்று பேசிக் கொண்டிருக்க பளார் என்று கன்னத்தில் விழுந்தது.

  சுருண்டு படுக்கையறையின் வாசலிலிருந்து முன்னறைக்கு வந்து விழுந்தாள். மாமியார் ஓடிச் சென்று வாசல் கதவை சாத்திவிட்டு கிட்சனுக்குள் அடைக்கலமாகிவிட்டாள்.

  #4

  #4

  எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடி கைய நீட்டி பேசுவா.... நான் எங்க வேணா போவேன் எங்க வேணா வருவேன் அத கேக்க நீ யாரு? சொல்லுடி என்று ஆரம்பித்து மிகவும் கேவலமான வார்த்தைகளைச் சொல்லி திட்டினான். அவ்வளவு தான் வாழ்க்கை வெறுத்துப் போனது, அதன் பிறகு கணவனின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தது.

  #5

  #5

  நீங்க எதுவுமே கேக்க மாட்டீங்களா அத்த? உங்க பையன் தான..... ஒரு நாள் மாமியாரிடம் கேட்டேவிட்டாள், நான் சொன்னா மட்டும் கேக்கவா போறான், என்னைய கூட எத்தன வாட்டி அடிச்சு மண்டைய உடச்சிருக்கான் தெரியுமா?

  வெளிய சொல்ல முடியாமா வழுக்கி விழுந்துட்டேன், ஆக்ஸிடண்ட் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டு திரிஞ்சேன். குடிகாரன், எமன்.... சொல்லக்கூடாதுன்னு பாக்குறேன் என்று நிறுத்த என்ன அத்த என் தாலிய நினச்சு பயப்படுறீங்களா? என்று கேட்டள்.

  #6

  #6

  திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்திருந்தது, இரவானால் குடித்து விட்டு வருவதும் அறைக்குள் சென்று மனைவியை அடித்து கொடுமை படுத்துவதும் தொடர்கதையாகிவிட்டது, அத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல் தான் இருக்கிறார், யாரிடம் சொல்லி திருத்துவது எனக்கென்று விதிக்கப்பட்ட இந்த வாழ்க்கையிலிருந்து மீண்டு வர வழியே இல்லை என்றே நம்பிக்கொண்டு காலத்தை ஓட்டினார்கள்.

  அந்த வீட்டில் அவளுக்கு மாமியார் மட்டுமே ஆதரவாய் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும், மகனை எதிர்த்து கேள்வி கேட்டால் தன்னையும் தாக்கிவிடுவான் என்ற பயம்.

  #7

  #7

  நாளுக்கு நாள் கொடுமைகள் வளர்ந்து கொண்டே தான் போனது, இப்போது அடியைக்கடந்து சூடு வைப்பது, கிள்ளுவது, கடிப்பது என கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதைகள் உருமாற்றம் பெற்றன.

  ஒரு நாள் குடித்து விட்டு தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருக்க பின்னல் வேகமாக வந்த வேன் இடித்ததில் பயங்கர அடி முருகனுக்கு.

   #8

  #8

  உடல் முழுவதும் காயம், கால் எலும்பு முறிந்து கட்டுப் போட்டிருந்தார்கள். அவன் வீட்டில் இருக்கும் போது மட்டுமே பயந்து நடுங்கிக் கொண்டிருந்த காலம் போய்... 24 மணி நேரமும் நடுங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்தார்கள்.

  முருகன் வீட்டில் முடங்கிக்கிடந்த காலத்தில் வீட்டின் அன்றாட செலவுகளை சமாளிக்க, அருகிலிருந்து தையல் கடை மற்றும் எக்ஸ்பேர்ட் கடைக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.

  #9

  #9

  ஆறு மாதத்தில் உடல் நலம் தேறியது, வீட்டை விட்டு வெளியே சென்று வர ஆரம்பித்தான். நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தது, அதிகம் பேசவில்லை. அவள் தான் சம்பாதிக்கிறாளே நான் ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டிருந்தது, கணவன் வெளியில் செல்கிறான் என்றால் வேலைக்குச் செல்கிறான் என்றே நம்பி வந்தார்கள் இருவரும்.

  #10

  #10

  வேலைக்கு போறியா... இல்ல எவன் கூடயாவது படுக்க போறியா? என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவும், அடித்து துன்புறுத்தவும் ஆரம்பித்தான். வாங்கி வருகிற சம்பளப் பணத்தை பிடுங்கிக் கொண்டு போய் குடித்து குடித்தே தீர்த்து வருவதே வாடிக்கையாக இருந்தது.

  இடையில் மகள் பிறந்திருந்தாள். மகள் பிறந்த பின்னாவது மாறுவான் என்று பார்த்தால் அதுவும் இல்லை, மகளைக் கொண்டு மிரட்ட ஆரம்பித்தான். நீ இப்போ காசு குடுக்கல இந்த கொழந்தைய கொன்னு போட்ருவேன் என்பதே அவனது மிரட்டலாக இருந்தது.

  #11

  #11

  இப்போது இந்த கொடுமையை அனுபவிக்க இன்னொரு உயிருமா என்று நொந்து கொண்டு காலத்தை ஓட்டினார்கள். சில வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தை கர்ப்பமானாள். ஐந்து மாதக் கருவை சுமந்து கொண்டு முதல் குழந்தையை பார்த்துக் கொண்டும் வேலைக்குச் சென்று வந்து கொண்டும் இருந்தாள்.

  அன்றைக்கு இரவு முருகன் தள்ளாடியபடி வந்து சேர்ந்தான். பின்னால் வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் ஒருவர் வந்தார்.

  #12

  #12

  இருவருக்கும் யார் அது என்று தெரியவில்லை, நடுவீட்டில் சேர் போட்டு உட்கார வைத்து இவர்களின் முகத்தை பார்க்க, புரிந்து கொண்டு உள்ளே சென்று டீ போட்டு எடுத்து வந்தாள் மனைவி.

  வாங்கிக் குடித்தவர்,சுற்றிலும் வீட்டை நோட்டம் விட்டார். ஐயா.... இது என் அம்மா.... அது கைல இருக்குறது என் மவ என்று நிறுத்திவிட்டு மனைவியை கை காட்டி, இது என்று சிரித்துக் கொண்டும் தலையை சொறிந்து கொண்டும் நின்றான்.

  என் மனைவி என்று சொல்வதில் திடீரென்று இவனுக்கு ஏன் வெட்கம் இருவருக்கும் புரியவில்லை.

  #13

  #13

  வந்தவர் எழுந்து கொண்டார், சரியா இதெல்லாம் சொல்வாங்க என்று தன் உள் சட்டை பாக்கெட்டிலிருந்து நான்கு ஐநூறு ரூபாய்த் தாளை நீட்டினார். பவ்யமாக வாங்கிக் கொண்டான், ரெண்டுல உனக்கு என்ன வேணாலும் எடுத்துக்கோ என்று கணவன் சொன்னதும் தான் விபரீதம் புரிந்தது.

  எழுந்தவர் கிளம்பப்போகிறார் என்று நினைத்தால் உள்ளே படுக்கையறைக்குள் நுழைகிறார்.

  ஏய்.... என்ன பண்ணிட்டு இருக்க, யாரோ ஒருத்தன கூப்ட்டு உள்ள விடுற பணத்த வாங்குற யார் அவன்? எதுக்கு இங்க இருக்கான் என்று கேட்டுக் கொண்டிருந்த மனைவியை தரதரவென்று இழுத்து அறைக்குள் விட்டான்.

  Image Courtesy

  #14

  #14

  அவனின் அம்மாவும் சேர்ந்து கொண்டு டேய் என்னடா இதுவரைக்கும் பண்ண அக்கிரமம் எல்லாம் போதாதுன்னு இதுவேறையா பாவம்டா புள்ளதாச்சிடா என்று காலில் விழுந்து கெஞ்சினார் குடிபோதையில் இருந்த அவன் குழந்தையை பிடுங்கிக் கொண்டான்.

  கழுத்தில் கத்தியை வைத்து ஏய் கிழவி எந்திருச்சு போறியா குழந்தைய கொன்னு போடவா என்று சத்தமிட்டதும் இருவரும் அமைதியானார்கள். எவளாவது வாயத் தொறந்த இந்த உசுரு இருக்காது என்று மிரட்டி படுக்கையறையின் கதவைச் சாத்தினான்.

  #15

  #15

  உள்ளே கெஞ்சி தன்னை விட்டுவிடு என்று அலறினாள், நான் பணம் கொடுத்துட்டேன், என்கூட வந்துரு உன்னைய ராணி மாதிரி வச்சு பாத்துக்குறேன், வீடு கட்டித் தரேன் என்று சொல்லிக் கொண்டே நெருங்கினான்.

  இதிலிருந்து தப்பிக்கவே முடியாதா என்று அழுது அலறியவள் கைக்கு குழந்தையின் தொட்டிலுக்கு கட்டுகிற கட்டை ஒன்று கிடைத்தது, எடுத்த வேகத்தில் அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள்.

  #16

  #16

  சண்டாளி.... என்று கத்திக் கொண்டே ரத்தம் பீறிட்ட அவன் தலையில் ஒரு கையை வைத்துக்கொண்டு மறு கையால் அவளை தள்ளிவிட்டான், வயிற்றை குறிபார்த்து எட்டி உதைத்தான், சுதாரித்து சற்று நகர்ந்தாலும் பயங்கரமாக வலித்தது.

  அறையை திறந்து கொண்டு வெளியே ஓடினான். குழந்தையை போட்டு விட்டு முருகனும் அவர் பின்னாலேயே ஓடினார். வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு கிடந்த மருமகளை தூக்கி மருத்துவரிடம் ஓடினார்.

  Image Courtesy

  #17

  #17

  ரோட்டிலிருந்து தண்ணீர் குடத்தை தூக்கி வரும் போது வழுக்கி விழுந்து விட்டேன் என்றாள், பரிசோதித்த மருத்துவர் இப்போது ஆபத்தில்லை என்றாலும் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வலிக்கு மட்டும் மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

  வீட்டிற்கு வந்தாள் கணவன் கர்ண கொடூர கோபத்துடன் உட்கார்ந்திருந்தான். எவ்ளோ தைரியம் இருந்தா ரத்த வர்ற அளவுக்கு அடிப்ப... என்று இருவருக்கும் அடி விழுந்தது. குழந்தையை பிடுங்க முயற்சி செய்ய குழந்தையை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு ஓடினாள் மாமியார்.

  Image Courtesy

  #18

  #18

  ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது, நாளுக்கு நாள் இவனது கொடுமைகளை தாங்கவில்லை, என்ன செய்வது என்று தெரியாமல் மாமியாரும் மருமகளும் அழுது கொண்டிருந்தார்கள். மனைவி வேலை செய்யும் அலுவலகத்திற்கும் சென்று எதேதோ சொல்லி, கலாட்டா செய்துவிட்டு வந்தான்.

  இது எதுக்கு வம்பு என்று சொல்லி, அவளை வேலையிலிருந்து நீக்கினார்கள். அவளை சமாதானம் செய்ய, நீ கர்ப்பமாக இருக்கிறாய் குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு வா.... என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

  #19

  #19

  வருமானம் இல்லை, வீட்டில் எப்போதும் உயிர் பயம், குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லை, குழந்தைக்கு ஜூரம் பிடித்துக் கொண்டது வளையலை விற்று பணத்தை எடுத்து மருத்துவரிடம் ஓடினார்கள். பல்வேறு டெஸ்ட்டுகள் எடுக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.

  டெஸ்ட் எடுத்துவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் போது, ஒரு பெண்மணி வந்தாள்.

  #20

  #20

  முருகன்னா..... அங்க வேலப்பாத்தவரா என்றார். குழந்தையை மாமியாரிடம் கொடுத்துவிட்டு ஆமா... என்று மெல்ல எழுந்தாள். கர்ப்பமாக இருப்பதை பார்த்தவள், சாரி எதுக்கு எழுந்துக்குறீங்க உக்காருங்க சாரி... பாப்பாக்கு என்னாச்சு இங்க தைராய்டு டெஸ்ட் பண்ணிருந்தேன் ரிசல்ட் வாங்க வந்தேன் என்று சுருக்க அறிமுகம் கொடுத்தாள்.

  அவர எப்டித் தெரியும் ?

   #21

  #21

  அவள் சொன்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் வீடு வந்த சேர்ந்த பின்பும் கேட்டுக் கொண்டேயிருந்தது, என் புள்ள குடிச்சிட்டு திரியுதுன்னு நினச்சேன் ஆனா பாத்தா இவ்ளோ அட்டூழியம் செஞ்சுட்டு திரியாதா இதெல்லாம் ஏன் என்னைய கேக்க வச்ச என்று மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார் மாமியார்.

  அலுவலகத்தில் ஹவுஸ் கீப்பிங் பணியாற்றும் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்திருக்கிறான். வெளியில் தெரிந்தால் அலுவலகத்தின் பெயர் கெட்டு விடும் என்று சொல்லி அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்.

  #22

  #22

  அந்த பெண்ணுக்கு சொற்ப பணத்தை கொடுப்பதாகச் சொல்லி, வெளிய கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டாம் என்று எழுதி வாங்கியிருக்கிறார்கள். இந்த விஷயம் அவளது வீட்டினருக்கு தெரியவர அவர்கள் தாக்கிய போது தான் சாலை விபத்து என்று சொல்லி அள்ளி வந்திருக்கிறார்கள் முருகனை.

  #23

  #23

  இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு மாதத்திலேயே வேலை கேட்டுச் சென்றாள், அங்கே கொடுக்க மறுக்கவே வேறு இடம் தேடி சொற்ப வருமானத்திற்கு ஒரு வேலையை பிடித்துக் கொண்டாள்.

  இப்போது மீண்டும் முருகனின் ஆட்டம் ஆரம்பமானது, தண்ணியடிக்க காசு வேணும் என்று சொல்லி மனைவியை பாலியல் தொழில் செய்ய வர்புறுத்தினான், நீ சம்மதிக்கல அப்பறம் உன் பொண்ண கூட்டிட்டு போயிருவேன் என்று மிரட்ட ஆரம்பித்தான்.

  #24

  #24

  அத்த... இனிமேலும் பொறுத்துட்டு இருக்க முடியாது, என் குழந்தையையும் இதுல தள்ளிடுவான், தாலி கட்டினான்ற ஒரே பாவத்துக்கு இன்னும் எத்தன காலம் தான் பொருத்துட்டு இருக்குறது.... மனசொடிந்து பேசினாள்.

  மாமியாரால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, வாயை மூடி அழுதார். அத்த இன்னக்கி நைட்டு வீட்டுக்குள்ள நுழஞ்சதும் வேலைய முடிக்கிறோம் பேசிக் கொண்டார்கள்.

  #25

  #25

  மணி ஒன்பதாகிவிட்டது, இரண்டு குழந்தைகளையும் உள்ளறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தாள். இருவரும் உறங்கியதும் அறையை விட்டு வெளியேறி வெளிப்பக்கமாக தாளிட்டாள். அத்த வாசல்ல நுழஞ்சதும், கத்தியெடுத்து குத்திடலாம், நான் இத எடுத்து அடிக்கிறேன், நீங்க அந்தப்பக்கம் நில்லுங்க என்று திட்டமிடப்பட்டது.

  எப்டியும் ஃபுல் மப்புல வரும்... ஒரே அடில போய் சேர்ந்துரும்.

  #26

  #26

  பத்தரை மணிக்கு கதவு தட்டும் சத்தம்.மாமியார் தான் கதவைத் திறந்தார் என்ன ஆச்சரியம் அன்றைக்கு என பார்த்து குடிக்காமல் இருந்தான், சோறு இருக்கா என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றான் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியை லாவகமாக மாமியாரிடம் கொடுத்துவிட்டு, கணவனின் பின்னால் ஓடினாள்... இருக்குங்க என்று சொல்லி தட்டில் சோறு போட்டு நீட்டினாள்.

  அமைதியாக சாப்பிட்டான், ஏன் அந்த கதவு பூட்டிருக்கு என்று குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த அறையை திறந்து உள்ளே சென்று படுத்துக் கொண்டான்.

   #27

  #27

  என்றைக்கும் இல்லாமல் இப்படி இவன் ஏன் நடந்து கொள்கிறான், பேசிக் கொண்டதை கேட்டிருப்பானா என்ற சந்தேகம், இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்று தவித்தார்கள்.

  ஒரு பக்கம் பயமும் ஆட்டிப்படைத்தது. நாளை காலைல ஆறு மணிக்கு பாப்பாவும் நானும் பழனிக்கு போறோம் வேண்டுதல் இருக்கு என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டான்.

  நாங்களும் வரோம், குடும்பதோட போலாம் என்று சொல்ல, யாரும் வேணாம் எல்லாம் எங்களுக்கு தெரியும் என்று படுத்துக் கொண்டான்.

   #28

  #28

  வேண்டுதல் என்று சொல்லி குழந்தையை எங்கே கூட்டிச் செல்வான் என்று தெரிந்து போனது, இன்றைக்கு குடிக்காமல் வந்ததற்கான காரணமும் புரிந்து போனது, அத்த இன்னைக்கு எப்டியாவது செஞ்சே ஆகணும் இல்லன்னா எம்புள்ள உசுரு மட்டுமில்ல என் உசுரும் இருக்காது அத்த என்றாள்.

  சமையலறைக்கு அழைத்து போய் ஒரு மணி நேரம் பேசினார்கள்.

  Image Courtesy

  #29

  #29

  படுக்கையறைக்குள் நுழைந்தார்கள். நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்தது, முருகனின் குறட்டை சத்தம் கேட்டது. வரிசையாக மகள், மகன் அதன் பிறகு கணவர் படுத்திருந்தார்கள். மகனைத் தூக்கி சற்று விலக்கி படுக்க வைத்தாள். மகள் தூக்கத்தில் ஏற்கனவே சுவற்றோரம் சென்றிருந்தாள், மஞ்சள் விலக்கில் மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருக்கும் வியர்த்து கொட்டியது.

  கண்களை மூடி ஏதோ நினைத்தாள் கண்ணைத்திறந்து அத்தையை பார்த்தாள், ஆம் என்பது போல சைகை செய்ய தலையணையை எடுத்துக் கொண்டாள்.

  #30

  #30

  அத்தை கணவனின் காலடியில் உட்கார்ந்து இறுக்கமாக பிடித்துக் கொள்ள தயாரானாள், அவள் தலையணையைக் கொண்டு முகத்தை அழுத்த ஆரம்பித்த அடுத்த நொடி மாமியார் கால்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். தன் முழு பலத்தையும் பிரயோகித்து தலையணையால் முகத்தை வைத்து அழுத்தினாள்.

  கால்களை இறுக்கமாக முருகனின் அம்மா பிடித்திருந்தாள். முழுதாக இரண்டு நிமிடங்கள் துடித்தவனின் உயிர் அடங்கியது. இனி எல்லாம் முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட நிமிர்ந்த போது ஒரு கணம் இருவரும் திடுக்கிடார்கள்

  நான்கு வயதான முருகனின் மகன் நிற்கிறான்.... என்னம்மா பண்ற இருட்டுல?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync life my story
  English summary

  Mother Murdered Her Son

  Mother Murdered Her Son
  Story first published: Wednesday, March 7, 2018, 9:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more