For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்நைட், ஆல்-அவுட்டுக்கு டாட்டா! இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க... இயற்கை வழிகள்!

வீடுகளில் கொசு, ஈ, கரப்பான் பூச்சித்தொல்லையா? உடலுக்கு கேடு தராத, இயற்கை பூச்சிக்கொல்லி இதோ!

By Gnana
|

நாம் வீடுகளை சுத்தமாக வைத்திருந்தாலும், சுற்றுப்புறம் தூய்மையின்றி இருக்கும்போது, வீடுகளில் கொசுக்கள் மற்றும் பூச்சித்தொல்லைகள் ஏற்பட்டு, கொசுக்கடியினால் வேதனையும் தூக்கமின்மையும், பூச்சிகளினால் ஆரோக்கிய பாதிப்பும், அருவருப்பும் ஏற்படுகின்றன. எப்படி ஒழிப்பது இந்த தொல்லைகளை?

நாம் தனி வீட்டில் வசித்தாலும் குடியிருப்புகளில் இருந்தாலும், சில எளிய வழிகளில், வீடுகளில் மூலிகைச்செடிகளை வளர்ப்பதன் மூலம், கொசு மற்றும் பூச்சிகளை அழித்து, நிம்மதியடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி

துளசி

ஆன்மீகத்தில் மிக உயர்ந்த செடியான துளசி, மனிதர்களின் உடல் நலத்தைக் காக்கும் அருந்தன்மை நிறைந்தவை என்பதை நாமறிவோம். அவை, வீடுகளில் உள்ள பூச்சிகளையும் விரட்டும் என்பதை நாமறிவோமா?

துளசிச்செடிகளை துளசி மாடத்தில் மட்டுமன்றி, தோட்டங்களில், வீடுகளின் ஜன்னலோரங்களில் வைத்து வளர்த்து வர, கொசு மற்றும் பூச்சிகள் விலகும். மாலை வேளைகளில் வாரமொரு முறை, காய்ந்த துளசி இலைகளைக் கொண்டு, புகை மூட்டம் வீடுகளில் இட்டு வரலாம்.

தும்பை

தும்பை

தும்பை, உடலுக்கு நன்மை தரும் அருமையான மூலிகை, கண் பார்வைக்கு சிறந்த வளம் தரும். தும்பைச்செடிகளை வீடுகளின் தோட்டங்கள் மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் வளர்த்துவர, பூச்சிகள் வீட்டை அணுகாது.

தும்பை இலைகளை அரைத்து, உடலில் தடவி உறங்க, கடிக்க வரும் கொசுக்கள் விலகி ஒடி விடும்.

தும்பை இலைகளை அரைத்து, அவற்றை வெயிலில் உலர்த்தி, மாலை வேளைகளில் வீடுகளில் புகை மூட்டம் போட்டு வர, கொசுக்கள் மற்றும் பூச்சிகள் அழிந்துவிடும்.

Image Source

பேய் மிரட்டி

பேய் மிரட்டி

தும்பை செடியினத்தில் ஒன்றான பெருந்தும்பை எனும் பேய்மிரட்டி, சிறந்த கிருமிநாசினி மற்றும் கொசு விரட்டியாகும். மருத்துவ நன்மைகள் மிக்க பேய் மிரட்டி செடிகளை வீட்டின் தோட்டத்தில் வளர்த்து வரலாம், பேய் மிரட்டி இலைகளை நன்கு நீரில் அலசி, அந்த இலைகளை விளக்கு திரி போல சுருட்டி, சிறிய விளக்கில் விளக்கெண்ணை ஊற்றி அதில் இலைத்திரியை இட்டு பற்றவைக்க, பச்சை இலை திரி, பளிச்சென எரியும். மாலை வேளைகளில் இந்த விளக்கேற்றி வர, வீடுகளில் உள்ள கொசுக்கள் மற்றும் நச்சுப்பூச்சிகள் விலகி ஒடிவிடும். மேலும், வீட்டில் நேர்மறை எண்ணங்களை ஓங்கச்செய்யும் ஒரு அற்புத ஒளியும்கூட, இந்த பேய்மிரட்டி திரி விளக்கு!

புதினா

புதினா

புதினா, உடல் நலத்திற்கும், மன வளத்திற்கும் உற்சாகம் தரும் ஒரு வாசனை மூலிகை, இந்தச்செடியை வீடுகளில் வளர்த்துவர, பூச்சிகள் அண்டாது. இதன் வாசனைக்கு கொசு, வீட்டுப்பக்கம்கூட நெருங்காது. வீடுகளில் உள்ள கொசுக்களை ஒழிக்க, புதினாவில் இருந்து எடுக்கப்படும் மெந்தால் தைலத்தை சில துளிகள் நீரில் இட்டு, அந்த நீரை, ஒரு சிறிய ஸ்பிரேயர் மூலம், படுக்கையறையில் தெளித்துவர, கொசுக்கள் ஓடிவிடும்.

நூறு ரூபாய் செலவுசெய்து வாங்கி, வீடுகளில் மின்சாரத்தில் பொருத்தும் கொசு விரட்டி எண்ணைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை.

ஒரு ரூபாய்கூட செலவு வைக்காத இந்த மூலிகைகள், நமக்கு தரும் பலன்கள், ஏராளம்.

இதே போல இன்னும் சில மூலிகைச் செடிகளை, நாம் வீடுகளில் வளர்த்து வரலாம்.

பூண்டு

பூண்டு

வெங்காயம் போலே, வேரிலே காய்க்கும் பூண்டுச்செடிகளை வீடுகளில் தோட்டங்களில் வளர்த்து வரலாம். பூண்டின் வாசத்திற்கு கொசுக்கள் காத தூரம் ஓடிவிடும். பூண்டை நசுக்கி, அந்தச் சாற்றை சிறிது நீரில் கலந்து, அதில் ஒரு சிறிய பருத்தித் துணியை நனைத்து, வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பாத்ரூம் டாய்லெட் வெண்டிலேட்டர் அருகில் கட்டி வைத்து வர, கொசுக்கள் வீட்டை எப்போதும் நெருங்காது. பூண்டுத் தைலமும் உபயோகித்து கட்டலாம்.

துளுக்க சாமந்தி செடி

துளுக்க சாமந்தி செடி

மேரிகோல்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளுக்க சாமந்தி செடியை, தோட்டங்களில் வைத்துவளர்க்கலாம், வீடுகளில் வைத்தும் வளர்க்கலாம். மேரிகோல்ட் செடி மருத்துவப்பலன்கள் கொண்டவை, அழகுமிக்க இவற்றின் மஞ்சள் வண்ணப்பூக்கள், காண வசீகரமாக இருந்தாலும், இவற்றின் நறுமணம் சற்றே மூக்கைத்துளைக்கும் நெடியுடன் விளங்கும். இந்தச்செடியை வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களில் வளர்த்துவர, அவை கொசுக்களின் வளர்ச்சியைத்தடுத்து, அழிக்கும் தன்மையுடையவை. இதர பூச்சிகள் நாளடைவில் முற்றிலும் நீங்கி விடும்.

வேறு சில செடிகள்!

வேறு சில செடிகள்!

இதுபோல மேலும் சில செடிகளை, வீடுகளில் வளர்த்து வர, பூச்சிகள் மற்றும் ஈக்கள், கொசுக்கள் ஓடிவிடும்.

ரோஸ்மேரி செடி - வீட்டில் வளர்க்க ஏற்ற செடி, இதன் எண்ணை கொசுக்களை விரட்டும், உடலிலும் தடவிக் கொள்ளலாம்.

சிட்ரோனெல்லா புல் - இந்தப் புல் வகையை வீடுகளில் வளர்த்து வரலாம்., தொற்று ஜுரத்தை ஏற்படுத்தும் கொசு இனத்தை அழிக்கும் ஆற்றல் மிக்கது. நறுமணமிக்க இதன் எண்ணை, பலவித வாசனை திரவியங்கள் மற்றும் மெழுகு தயாரிப்பில் பயனாகிறது. இதன் எண்ணையை உடலில் தடவி வர, கொசுத்தொல்லை விலகும்.

காட்னிப் செடி - புதினா போன்று மின்ட் குடும்பத்தைச்சேர்ந்த செடியான காட்னிப், கொசுவை விரட்டுவதில், சிறப்பானது. வீடுகளில் வளர்த்து, இதன் இலைகளை அரைத்த சாற்றை அல்லது எண்ணையை உடலில் தடவிவர, கொசுக்கள் ஓடிவிடும்.

கற்பூரவல்லி - அநேகம்பேர் வீடுகளில், சதைப்பற்று மிக்க இலைகளைக் கொண்ட ஓமவல்லி எனும் செடிகள் இருக்கும் அதன் மறுபெயர்தான், கற்பூரவல்லி. இருமல் ஜலதோஷம் போக்கும் இந்தச்செடியிலிருந்து எடுக்கப்படும் தைமால் எனும் தைலத்தை, உடலில் தடவி வரலாம் அல்லது புகை மூட்டம் போட, கொசுக்கள் ஓடிவிடும்.

காயகற்ப வேப்பமரம் - வேப்பமரம், கிருமிநாசினி, கொசுக்களை விரட்டும், வேப்பெண்ணையில் விளக்கேற்றிவர, கொசுக்கள் ஓடிவிடும். வேப்பிலைகளை காயவைத்து வீடுகளில் மூட்டம் போட, கொசுக்கள் உள்ளிட்ட பூச்சிகள் ஓடிவிடும்.

லாவெண்டர் செடி - புதினா குடும்பத்தைச்சேர்ந்த லேவெண்டர் செடிகளும், வீடுகளில் வளரும் தன்மைமிக்கது, இதன் வாசனை எண்ணை, சென்ட் மற்றும் முக அழகு சாதனங்களில், நறுமணத்திற்காக சேர்க்கப்படுகின்றன. இதன் எண்ணையை உடலில் தடவிவர, கொசுக்கள் நெருங்காது.

லெமன் பாம் - புதினா குடும்பத்தைச்சேர்ந்த மற்றொரு செடியான லெமன் பாமின் தைலமும், கொசுக்கடியை விரட்டும். வீடுகளில் வளர்த்து வரலாம்.

இந்தச்செடிகளைப் பற்றி அறிந்துகொண்டாலும், அவற்றை வீடுகளில் வளர்க்க வாய்ப்புகள் இல்லை, நாங்கள் எப்படி, கொசு,எறும்பு மற்றும் பூச்சிகள் தொல்லைகளில் இருந்து விடுபடுவது, என்கிறீர்களா?

 எறும்புகளை விரட்ட

எறும்புகளை விரட்ட

வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை விரட்ட, ஒரு எளிய வழி இதோ!

வீடுகளில் உணவுப்பாத்திரத்தை அடுப்பறையில் வைக்கமுடியாதபடி, எங்கிருந்தோ வரும் எறும்புக்கூட்டம், உணவில் கலந்து, நாம் உணவைப்பயன்படுத்த இயலாத சூழலை ஏற்படுத்திவிடும். காய்ச்சிய பால், தயிர், சர்க்கரை, இனிப்புகள் போன்ற அனைத்து பொருட்களிலும் அவை ஏறி, நமக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிடும்.

இதுபோன்ற சிரமம் தரும் எறும்புத்தொல்லைகளை உடனே போக்க, வீடுகளில் உள்ள பெருங்காயம் மற்றும் கிராம்பு இவற்றை அரைத்து தூளாக்கி, அந்தத்தூளை, எறும்பு பாதிப்புள்ள இடங்களில் இரவில் தூவி வர, காலையில் எறும்புகள் விலகி, இடம் தூய்மையாகி விடும். இந்தத்தூளை சிறிது நீரில் கலந்து,. அதை எறும்பு உள்ள இடங்களில் தெளித்து வர, எறும்புகள் ஓடிவிடும்.

பூச்சிகளை விரட்ட

பூச்சிகளை விரட்ட

சில வீடுகளில் கரப்பான் மற்றும் பூச்சிகள் தொல்லை, பாத்ரூம் மற்றும் டாய்லெட்களில் அதிகம் காணப்படும், இந்த பாதிப்பைத்தீர்க்க, குழந்தைகளின் உடல்நலம் காக்கும் வசம்பு, உதவி செய்யும்.

வசம்புத்தூளை, இரவில் மேற்கண்ட இடங்களில் நன்கு தூவிவிட்டு, காலையில் சென்று பார்த்தால், ஒரு பூச்சியும் அங்கு இருக்காது.

வெந்நீரில் வசம்பு, வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து, கிருமிநாசினியாக அந்த நீரை வீடுகளில் பூச்சிகள் உள்ள இடங்களில் தெளித்துவரலாம். இந்த நீரை, ஹேண்ட்வாஷ் போல கைகளை கழுவவும் உபயோகிக்கலாம்.

மேலும் வசம்பு, நொச்சி இலை, தும்பை, பேய்மிரட்டி, ஓமவல்லி, வேப்பிலை, மாவிலை இவற்றின் காய்ந்த இலைகளை தேங்காய் ஓட்டில் வைத்து எரித்து, புகை மூட்டம் போட, வீடுகளில் உள்ள கொசுக்கள் உள்ளிட்ட பூச்சிகள் யாவும் அழிந்துவிடும்.

கொசுக்களை அழிக்கும் தட்டான்கள்!

கொசுக்களை அழிக்கும் தட்டான்கள்!

வீடுகளில் கொசு விரட்டி செடிகள் வளர்க்கத்தேவையில்லை, புகை மூட்டம் தேவையில்லை, இவை எல்லாவற்றையும் விட, வீடுகளின் சுற்றுப்புறங்களில், தட்டான்கள் அதிகம் வளரும் சூழலை உருவாக்கினாலே போதும். தட்டான்கள், கொசுக்களை முட்டைப்பருவத்திலேயே அழித்து, கொசுக்கள் பரப்பும் வியாதிகளில் இருந்து நம்மைக்காக்க வந்த, இறைக்கொடை!

நாம் மறந்துவிட்டோம்! தட்டான்கள் இன்று அழிவின் விளிம்பில்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: home home remedies வீடு
English summary

Home Remedies To Rid off Mosquito, Cockroach and Other Insects from Your House!

Home Remedies To Rid off Mosquito, Cockroach and Other Insects from Your House!
Story first published: Wednesday, January 31, 2018, 10:45 [IST]
Desktop Bottom Promotion