சளி Vs ஃப்ளூ காய்ச்சல் Vs நிமோனியா: அறிகுறிகளை வைத்து வித்தியாசத்தை எப்படி அறிவது? விளக்கும் டாக்டர்!

World Pneumonia Day 2026: இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றைச் சாதாரண சளி அல்லது பருவகால காய்ச்சல் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சுவாசப் பாதையில் ஏற்படும் எல்லா நோய்த்தொற்றுகளும் ஒரே மாதிரியானவை அல்ல. சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் (Influenza), நிமோனியா (Pneumonia) ஆகியவற்றின் சில அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றின் தீவிரத்தன்மை, பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன.

World Pneumonia Day 2026 Cold Vs Flu Vs Pneumonia Pulmonologist Explains How To Identify Difference Through Symptoms

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12-ஆம் தேதி உலக நிமோனியா தினம் (World Pneumonia Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், இம்மூன்று நோய்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும், எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். இதுக்குறித்து சென்னையில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணரான டாக்டர். சுரேஷ் எஸ் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

சாதாரண சளி: மெதுவாகத் தொடங்கும் லேசான பாதிப்பு

"சாதாரண சளி என்பது பெரும்பாலும் மூக்கு மற்றும் தொண்டையைப் பாதிக்கும் வைரஸ் தொற்று (Viral Infection) ஆகும். இதன் அறிகுறிகள் பொதுவாக மெதுவாகத் தொடங்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தொண்டை வலி, லேசான இருமல், சிலருக்கு மிதமான காய்ச்சல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள்.

பெரும்பாலானவர்கள் 7 முதல் 10 நாட்களுக்குள் குணமடைந்துவிடுவார்கள். இருப்பினும், இருமல் போன்ற சில அறிகுறிகள் கூடுதல் நாட்கள் நீடிக்கலாம். போதுமான ஓய்வு, தண்ணீர் அருந்துதல் மற்றும் அறிகுறிகளைக் குறைப்பதற்கான சிகிச்சை ஆகியவை பொதுவாகப் போதுமானவை." என்று டாக்டர் கூறினார்.

ஃப்ளூ காய்ச்சல்: திடீரெனத் தொடங்கும் தீவிரமான அறிகுறிகள்

"ஃப்ளூ காய்ச்சல் (Influenza) என்பதும் வைரஸ் தொற்றுதான். ஆனால், சாதாரண சளியை விட இது உடலை அதிகமாகப் பாதிக்கக்கூடும். இதன் அறிகுறிகள் பெரும்பாலும் திடீரெனத் தொடங்கும். காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் வலி, தலைவலி, கடுமையான சோர்வு, தொண்டை வலி, சளியில்லாத இருமல் (Dry Cough) போன்றவை ஏற்படலாம்.

சாதாரண சளியைவிட ஃப்ளூ காய்ச்சல் ஒருவரை மிகவும் பலவீனமாக உணரச் செய்யலாம். சிலருக்கு இது நிமோனியா போன்ற தீவிரமான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாகச் சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் ஏற்கெனவே நீண்டகால உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஃப்ளூ காய்ச்சலால் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்." என்று டாக்டர் கூறினார்.

நிமோனியா: நுரையீரலைப் பாதிக்கும் நோய்த்தொற்று

"நிமோனியா (Pneumonia) என்பது நுரையீரலில் ஏற்படும் நோய்த்தொற்று ஆகும். இது பாக்டீரியா, வைரஸ் அல்லது அரிதாகச் சில வகைப் பூஞ்சைகளால் ஏற்படலாம். நிமோனியா ஏற்பட்டால், நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளில் (Air Sacs) வீக்கம் ஏற்படும். அவற்றில் திரவம் அல்லது சீழ் தேங்கக்கூடும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

தொடர்ந்து இருமல், காய்ச்சல், குளிர் நடுக்கம், நெஞ்சு வலி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், அதிக சோர்வு போன்றவை நிமோனியாவின் பொதுவான அறிகுறிகள். சிலருக்கு மஞ்சள் அல்லது பச்சை நிறச் சளியுடன் இருமல் ஏற்படலாம். முதியவர்களுக்கு வழக்கமான அறிகுறிகளுக்குப் பதிலாகத் திடீர் குழப்பம், அதிக பலவீனம் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.

சில நேரங்களில் ஃப்ளூ காய்ச்சலுக்குப் பிறகும் நிமோனியா ஏற்படலாம். எனவே, காய்ச்சல் குறைந்து உடல்நிலை சற்று மேம்பட்ட பிறகு மீண்டும் காய்ச்சல் அதிகரித்தாலோ, இருமல் மோசமானாலோ, நெஞ்சு வலி அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்?

"மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி, உதடுகள் அல்லது விரல் நுனிகள் நீல நிறமாக மாறுதல், திடீர் குழப்பம், கடுமையான பலவீனம் அல்லது அறிகுறிகள் திடீரென மோசமடைதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

குழந்தைகளுக்கு வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுவிடும் போது நெஞ்சுப் பகுதி உள்நோக்கி இழுக்கப்படுதல் (Chest Indrawing), பால் அல்லது உணவு சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, வழக்கத்தை விட அதிகமாகத் தூங்குவது அல்லது மந்தமாக இருப்பது போன்றவை முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளாகும்." என்று டாக்டர் கூறினார்.

சிகிச்சையை விடத் தடுப்பு சிறந்தது

"ஃப்ளூ காய்ச்சல், நிமோனியாவை ஏற்படுத்தக்கூடிய நிமோகாக்கல் பாக்டீரியா (Pneumococcal Bacteria) மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வது தீவிரமான சுவாச நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

அடிக்கடி கைகளைக் கழுவுதல், இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளுதல், புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல், சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் போதுமான காற்றோட்டத்தை உறுதிசெய்தல் போன்ற பழக்கங்களும் சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

மேலும், மருத்துவரின் ஆலோசனையின்றி ஆன்டிபயாட்டிக் (Antibiotics) மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இந்த மருந்துகள் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக மட்டுமே செயல்படும். வைரஸ் தொற்றுகளுக்கு இவை பலனளிக்காது." என்று டாக்டர் கூறினார்.

நினைவில் கொள்ள வேண்டியவை

தொடர்ந்து நீடிக்கும் இருமல், காய்ச்சல் அல்லது பிற சுவாசப் பிரச்னைகளைச் சாதாரண சளி என்று அலட்சியப்படுத்தக் கூடாது. அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதன் மூலம் தீவிரமான பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

இந்த உலக நிமோனியா தினத்தில், நோயின் எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வது உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதை அனைவரும் நினைவில் கொள்வோம்.

Story first published: Thursday, November 12, 2026, 12:50 [IST]
Desktop Bottom Promotion