1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...

Posted By:

Gothumai Rava Kichadi Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான சுவையில் ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையுடன் சில பருப்புக்களை சேர்த்து கிச்சடி செய்து சாப்பிடுங்கள். இந்த கிச்சடி மிகவும் சுவையாக இருப்பதால், வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்தவற்கு ஈஸியாக இருக்கும்.

Gothumai Rava Kichadi How To Make Healthy Wheat Rava Kichadi Recipe

உங்களுக்கு கோதுமை ரவா கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்
* கோதுமை ரவை - 1 கப்

வேக வைப்பதற்கு...

* ஊற வைத்த கோதுமை ரவை
* ஊற வைத்த பருப்பு
* தண்ணீர் - 6 கப்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த கோதுமை ரவை
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மற்றொரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை ரவையை எடுத்துக் கொண்டு நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த கோதுமை ரவை, பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சீரகம், வரமிளகாய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து கிளறி வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த கோதுமை ரவையை சேர்த்து கிளறி, கிச்சடி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது சுடுநீரை ஊற்றி கிளறி, கொதி விட்டு கொத்தமல்லியைத் தூவி, முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கோதுமை ரவா கிச்சடி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 12, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion