World Asthma Day 2025: ஆஸ்துமா இருந்தா.. இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்..!

World Asthma Day 2025: தற்போது நகர்புறங்கள் வளர வளர நிறைய தொழிற்சாலைகள் வந்திருப்பதால், காற்று மற்றும் நீரில் மாசுக்கள் அதிகரித்து, ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதி வேகமாக அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த ஆஸ்துமாவால் பெரியவர்களிடம் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆஸ்துமா என்பது சுவாசக்குழாய் அழற்சியாகும். இந்த ஆஸ்துமா ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் காற்று மாசுபாடு, பூக்களின் மகரந்தம், குளிர்ந்த காற்று, தூசிகள், செல்லப்பிராணிகளின் ரோமங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் அனைவருக்கும் ஆஸ்துமாவை வரவழைக்காது. ஆனால் குறிப்பிட்ட சிலர் இவற்றில் குறிப்பிட்ட காரணிகளுக்கு அழற்சியாக இருப்பார்கள். இப்படி ஏற்படும் அழற்சியினால், சுவாசப்பாதைகள் வீக்கமடைந்து சுருங்கி, காற்று செல்வது கடினமாகி, மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

World Asthma Day 2025 Doctor Lists Best And Worst Foods For Asthma Patients

இப்படிப்பட்ட ஆஸ்துமா ஒருவருக்கு இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்றால், இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடும் போது விசில் அடிப்பது போன்ற சப்தம் வரும். இந்த அறிகுறிகள் இருந்தால், ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம். இப்படிப்பட்ட ஆஸ்துமாவிற்கு மிகச்சிறந்த தீர்வு என்றால், அது இன்ஹேலர் பயன்படுத்துவது தான்.

இது தவிர ஆஸ்துமாவை உணவுகளின் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று நேர்காணல் ஒன்றில் டாக்டர்.சிவராமன் கூறியுள்ளார். இன்று உலக ஆஸ்துமா தினம் என்பதால், ஆஸ்துமா நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம், எவற்றை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுவதைக் காணலாம். உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், டாக்டர் சிவராமன் கூறுவதைக் கேட்டு பின்பற்றி பயன் பெறுங்கள்.

ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டியவை மற்றும் சாப்பிடக்கூடாதவைகள்

* ஆஸ்துமா இருந்தால் முதலில் தவிர்க்க வேண்டிய உணவு தான் பால். ஆனால் நிறைய பேர் பாலை உணவுக்கு ஒரு மாற்றாக கருதுகிறார்கள். அதாவது, ஒருவர் உணவு சாப்பிட மறுக்கும் பட்சத்தில், அவரை ஒரு டம்ளர் பாலை குடிக்க சொல்லி வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். என்ன தான் பால் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், இது உணவுக்கு ஒரு மாற்று அல்ல என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அதுவும் ஆஸ்துமா உள்ளவர்கள் பாலை அதிகம் குடித்தால், அது உடலில் கபத்தன்மையை அதிகரித்துவிடும்.

ஏற்கனவே இவர்களின் உடல் செரிமானத்திற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும். இந்நிலையில் பாலை அதிகம் குடிக்கும் போது, அது மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் பால் மட்டுமின்றி, பால் தொடர்பான பொருட்களையும் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் மோர் குடிக்கலாம். ஒருவேளை பால் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்த பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம்.

* ஆஸ்துமா நோயாளிகள் உணவுகளை சரியான இடைவெளியில், சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு 4 வேளை உணவுகளை உட்கொள்ளலாம். குறிப்பாக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதாவது ஆவியில் வேக வைக்கும் உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு, பொங்கல் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகை உணவுகள் ஜீரணமாக கடினமாக இருக்கும் என்று டாக்டர் சிவராமன் கூறினார்.

* மேலும் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் எந்த உணவையும் வெதுவெதுப்பாக இருக்கும் போதே சாப்பிட வேண்டும். ஜில்லென்று நன்கு குளிர வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த உணவையும், பானத்தையும் சூடான நிலையில் தான் உட்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சிவராமன் கூறினார்.

* ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த தேநீர் என்றால் அது பால் சேர்க்காத கடுங்காப்பி அல்லது கருப்பட்டி காப்பி தான். இது தவிர ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவற்றையும் குடிக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் சூடாக குடிக்க வேண்டும். இப்படி சூடாக குடிக்கும் போது, மூச்சிரைப்பில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும் என்று டாக்டர் சிவராமன் கூறினார்.

* முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகள் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். இந்த மலச்சிக்கலை தவிர்க்க தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். அதுவும் இரவு தூங்கும் முன் 2 டம்ளர் வெதுவெதுப்பான சுடுநீரை குடிக்க வேண்டும். ஒருவேளை அஜீரண பிரச்சனை இருந்தால், சீரகத் தண்ணீரை சூடாக குடிப்பதை வழக்கமாக கொள்ளலாம்.

* ஆஸ்துமா நோயாளிகள் சாலட்டுகளை காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதை வழக்கமாக கொள்வது நல்லது. அதுவும் காலையில் எழுந்ததும் முதல் காலை உணவாக சாலட்டுகளை சாப்பிடுவது நல்லது. இந்த சாலட்டில் திராட்சை, தர்பூசணி, ஆரஞ்சு போன்றவற்றைத் தவிர்த்து வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடலாம். நிறைய பேர் ஆஸ்துமா நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தவறு. ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படும். ஒருவேளை சளி அதிகமாக நெஞ்சில் தேங்கியிருந்தால் மட்டும் தான், வாழைப்பழம் சாப்பிடக்கூடாதே தவிர, மற்ற வேளைகளில் வாழைப்பழம் சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் கூறினார்.

* முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகள் தங்களின் அனைத்து உணவுகளிலும் மிளகுத் தூளை சேர்ப்பதை வழக்கமாக வைத்துக் கொள்வது நல்லது. கிழங்குகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு ரசம். அதுவும் இந்த ரசத்தை அப்படியே குடிக்கலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் உட்கொள்ளலாம். ஆனால் தினசரி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது என்றும் டாக்டர் சிவராமன் கூறினார்.

மொத்தத்தில், ஆஸ்துமா நோயாளிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து, தவிர்க்க வேண்டியதை தவிர்த்து, சரியான மருத்துவத்தை மேற்கொண்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையை கட்டுக்குள் வைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை நீண்ட நாள் வாழலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion