தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்!

Egg Benefits In Tamil: நாம் உண்ணும் உணவுகளில் முட்டை ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் முட்டையில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. அதுவும் ஒரு முட்டையை சாப்பிடுவதால், அதன் மூலம் உடலுக்கு 75-76 கலோரிகளும், 6-7 கிராம் புரோட்டீனும், 5 கிராம் கொழுப்பும், 1.6 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பும் கிடைக்கும். இப்படிப்பட்ட முட்டையை உட்கொள்ளும் போது, அது தசைகளின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

What Happens If You Eat Eggs For 14 Days AIIMS Harvard Trained Doctor Explains

இவ்வளவு நன்மைகளை வழங்கும் முட்டையை எப்போதாவது சாப்பிடுவதை விட தினமும் ஒன்று என தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிடும் போது, உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்று, 25 வருட அனுபவம் கொண்ட இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

1. மூளைக்கு நல்லது

தினமும் முட்டையை சாப்பிடுவது மூளைக்கு மிகவும் நல்லது. ஏனெனில் முட்டையில் கோலைன் உள்ளது. இது நினைவாற்றலுக்கும், மனதை ஒருமுகப்படுத்த தேவையான நரம்பியக்கடத்தியான அசிடைல்கோலினை உருவாக்கவும் உதவுகிறது. எனவே இந்த முட்டையை தினமும் உட்கொண்டால், அது தெளிவான சிந்தனைக்கும், கவனத்திற்கும் உதவும் என்று டாக்டர் சேத்தி கூறினார்.

2. நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்

முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே இந்த முட்டையை தினமும் ஒன்று என தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிடும் போது, அது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தும் என்று டாக்டர் கூறினார். அதுவும் இந்த முட்டையை சமச்சீராக உட்கொண்டு வரும் போது, அது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

3. கண்களுக்கு நல்லது

முட்டையின் மஞ்சள் கருவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் உள்ளன. இவை அதிக ஆற்றல் கொண்ட நீல ஒளியை வடிகட்டவும், கண் ஆரோக்கியத்தைப் பேணவும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். அதோடு இந்த முட்டையானது சல்பர் அடங்கிய அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன. இவை தலைமுடி, சருமம் மற்றும் நகங்களுக்கு தேவையான கெராட்டினை உடல் உற்பத்தி செய்ய உதவுகின்றன என்று டாக்டர் சேத்தி கூறினார்.

முட்டை சாப்பிடாதவர்கள் என்ன சாப்பிடலாம்?

நீங்கள் முட்டை சாப்பிடமாட்டீர்களானால், டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை சாப்பிடலாம். ஏனெனில் இவை முட்டைக்கு இணையான தாவர அடிப்படையிலான புரோட்டீன் உணவுகளாகும். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று டாக்டர் கூறினார்.

முட்டையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

முட்டையில் நல்ல உயர்தரமான புரோட்டீன் உள்ளது. இது தவிர இதில் 13 விதமான வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் உள்ளன மற்றும் இதில் கோலின் என்னும் சத்து உள்ளது. மேலும் இதில் அயோடின், இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ, பி12 போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இந்த முட்டையை காலை உணவின் போது எடுக்கும் போது, அது வயிறு நிரம்பிய உணர்வை அதிகரிப்பதோடு, பசியையும் குறைக்கும்.

எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் முட்டையை எப்போதாவது சாப்பிட்டு வந்திருந்தால், இனிமேல் தினமும் ஒரு முட்டையை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டு, உங்கள் மூளை, இதயம், கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்தை எளிய வழியில் மேம்படுத்துங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, September 10, 2026, 13:35 [IST]
Desktop Bottom Promotion