எலும்புகள் பலவீனமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள்!

Weak Bones Symptoms In Tamil: எப்படி இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புக்களின் ஆரோக்கியம் முக்கியமானதோ, அதேப் போல் உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் மற்றும் உடலுக்கு நல்ல அமைப்பைக் கொடுக்கும் எலும்புகளின் ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாதது.

எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், உட்கார்வது, நடப்பது போன்ற தினசரி செயல்பாடுகளை செய்ய முடியும். ஆனால் வயது அதிகரிக்கும் போது, எலும்புகள் அதன் அடர்த்தியை இழக்கத் தொடங்கி, குறிப்பிட்ட வயதிற்கு மேல் எளிதில் எலும்பு முறிவு ஏற்படக்கூடிய வகையில் பலவீனமாகிவிடுகிறது.

Weak Bones: Symptoms That Indicate Your Bones Are Weak In Tamil

எனவே தான் எலும்புகளின் அடர்த்தி குறையாமலும், அதன் வலிமை அதிகரிக்கவும் உதவும் உணவுகளை அனைத்து வயதினரும் தங்களின் தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முக்கியமாக 30 வயதிற்கு மேலானவர்கள் தங்கள் தினசரி உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் 30 வயதை எட்டியதுமே எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

சரி, ஒருவரது எலும்புகள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதை பலரும் கேட்கலாம். எனவே தான் கீழே பலவீனமான எலும்புகளை உணர்த்தும் சில ஆரம்பகால எச்சரிககை அறிகுறிகளை கொடுத்துள்ளோம். உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

1. அடிக்கடி எலும்பு முறிவு

எலும்புகள் பலவீனமாக இருந்தால், சிறு அடிப்பட்டாலும் எலும்பு முறிவு ஏற்படக்கூடும் அல்லது அடிக்கடி தடுக்கி விழ நேரிடும். அதோடு காயங்கள் ஏற்பட்டாலும் அந்த காயங்கள் குணமாவதற்கு நீண்ட காலம் ஆகும். இப்படி உங்களுக்கு ஏற்படுகிறது என்றால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது எலும்புகளானது மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

2. வளர்ச்சியில் தடை

வயது அதிகரிக்கும் போது, ஒருவரது உயரமும் அதிகரிக்கும். ஆனால் வயதிற்கு ஏற்ற உயரத்துடன் இல்லாமல் இருந்தால், எலும்புகள் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். எலும்புகளின் அடர்த்தி குறைவதால், முதுகுத்தண்டில் உள்ள முதுகெலும்புகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, உயரம் குறையும். எனவே நீங்கள் குட்டையாக அல்லது வளர்ச்சியில் தடையை கண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை மதிப்பிட உடனே ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

3. முதுகு வலி

தொடர்ச்சியான முதுகு வலி, குறிப்பாக நடு அல்லது கீழ் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், அது பலவீனமான எலும்புகளின் எச்சரிக்கை அறிகுறியாகும். முதுகெலும்பு அதன் வலிமையை இழப்பதால், அது முதுகெலும்பு முறிவுகளுக்கு வழிவகுத்து, அதன் விளைவாக நாள்பட்ட முதுகு வலியை சந்திக்க வைக்கிறது. ஆகவே திடீரென்று உங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி, நிலைமை மோசமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

4. நகம் உடைவது

நகம் உடைவது எப்படி எலும்புகள் பலவீனமாக இருப்பதைக் குறிக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பொதுவாக எப்போது உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்களின் குறைபாடு ஏற்படுகிறதோ, அப்போது நகங்கள் உடையக்கூடும். மேலும் இவ்விரு சத்துக்களும் எலும்புகளின் வலிமைக்கு மிகவும் இன்றியமையாதவை.

ஆகவே நகங்கள் உடைகிறது என்றால் எலும்புகளின் வலிமைக்கு வேண்டிய சத்துக்கள் குறைவாக இருந்து, எலும்புகள் பலவீனமாக உள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி எலும்புகளின் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ளுங்கள்.

5. ஈறுகள் சுருங்குவது

எலும்புகள் பலவீனமாவதைப் போல, தாடை எலும்புகளும் பலவீனமாகும். இப்படி பலவீனமாகும் போது, ஈறுகள் சுருங்கும் அல்லது பற்கள் ஆட ஆரம்பிக்கும். இதைக் கொண்டு தாடை எலும்புகள் பலவீனமாக இருப்பதை அறியலாம். இந்த நிலை தீவிரமாகும் போது, அது பெரிடோன்டல் நோயை ஏற்படுத்தலாம்.

இதைத் தவிர்க்க நல்ல வாய் சுகாதாரத்துடன், அவ்வப்போது பல் மருத்துவரை சந்தித்து பற்களில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

6. பிடிமானத்தில் வலிமை குறைவது

உங்களால் எதையும் சரியாக பிடிக்க முடியவில்லையா, உங்கள் பிடிமானத்தில் வலிமை குறைவாக உள்ளதா, அப்படியானால் கைகள் மற்றும் மணிக்கட்டு பகுதியில் உள்ள எலும்புகள் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

இதற்கு வயது மற்றும் தசை பலவீனம் போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் கைகள் மற்றும் மணிக்கட்டு பகுதியை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், இந்த பகுதியில் உள்ள எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, August 17, 2023, 11:28 [IST]
Desktop Bottom Promotion