For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும வறட்சியை தடுக்க சூடா சாப்பிடுங்க

By Mayura Akilan
|

Winter Lip Care
பனிக் காலத்தில் உடல் அழகைப் பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

வறண்ட சருமம்

பனிக் காலத்தில் குளிர் காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறைந்து போவதால் தோல் உரிந்து வெடிப்புகள் ஏற்படும்.

பனிக்காலத்தில் சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைப் பசைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் படு மந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும். இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைத் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.

குளிக்கும் போது ஸ்க்ரப் உபயோகித்து தேய்த்து குளிக்கவும். ஏனெனில் இறந்த செல்களை நீக்குவதில் ஸ்க்ரப் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட மற்றும் இறந்த செல்கள் நீங்கி தோல் மென்மையாகும்.

சூடாக சாப்பிடுங்கள்

பனிக் காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும். உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரிப் பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கப்படும்.

ஒமேகா 3 சத்து நிறைந்த மீன் உணவை அதிகம் உண்ணுங்கள். இது தோல் வறட்சியடைவதை தடுக்கும்.காய்கறிகள், பழங்களை அதிகம் உண்ணுங்கள்.

தேங்காய் எண்ணெய் மசாஜ்

உடலில் தேங்காய் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெண்ணை, கடுகு எண்ணை ஆகியவை சிறந்தது. சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிர்ப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். பனிக் காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்கலாம்.

உதடு பாதுகாப்பு

மனித உடலிலே மென்மையானது உதட்டுப் பகுதி. உதடுகளில் சுரப்பிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அவை அதிகமாக பாதிக்கப்படுகின்றன. பனியால் அதிகம் பாதிக்கப்படுவது உதடுகள் தான். உதட்டில் உள்ள ஈரப்பதம் உலர்ந்து வறண்டுவிடுவதோடு வெடிப்புகளும் ஏற்படும். எனவே தரமான உதட்டுக்கு போடும் கிரீம் உபயோகப்படுத்துவது உதடு வெடிப்பில் இருந்து பாதுகாக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.

பாத பராமரிப்பு

பனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து நன்றாகச் சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுப்படும்.பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் மூழ்க வைத்து, பின்னர் வாசலின் தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.

வெளியில் செல்லும் போது எப்போதும் மாய்ஸரைசர் கொண்டு கை மற்றும் பாதங்களில் பூசிக்கொள்ளவும். உறங்கும் முன்பாக பாதங்களில் மாய்ஸரைசர் தடவி ஷாக்ஸ் அணிந்த கொள்ளவும். இது பாத வெடிப்பில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணை, பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்ப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக் காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது. பனிக் காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது.

உடற்பயிற்சி அவசியம்

பனிக்காலத்தில் போர்வையை போர்த்தி தூங்கத்தான் நினைப்பு வரும். ஆனால் அதிகாலையில் எழுந்து வியர்க்கும் வகையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கப்படும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுரப்பிகள் ஓரளவு சுறுசுறுப்படையும், அதன்மூலம் சருமத்திற்கு ஈரத் தன்மையும், எண்ணைத் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary

Tips to take care of your skin this winter | சரும வறட்சியை தடுக்க சூடா சாப்பிடுங்க

The dry winter season is slowly creeping in. Just because the season is dry and cold doesn't mean that your skin will look like that. Taking care of your skin is a daily process and is not restricted for winter or any harsh season.
Story first published: Monday, December 19, 2011, 17:47 [IST]
Desktop Bottom Promotion