ஆண்களே! உங்களுக்கு மாரடைப்பு சீக்கிரம் வரக்கூடாதா? அப்ப இந்த 3 விதமான கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க..

International Men's Health Week 2025: தற்போது ஆண்கள் இதய பிரச்சனைகளால் அதிகம் மரணமடைந்து வருகிறார்கள். அதுவும் 40 வயதுடைய திரைப் பிரபலங்கள் நிறைய பேர் மாரடைப்பால் இறக்கும் செய்தியை சமீப காலமாக அதிகம் கேட்கிறோம்.

நேற்று கூட பிரபல பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரின் முன்னாள் கணவரும், தொழிலதிபருமான சஞ்சய் கபூர், தனது 53 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படி இளம் வயதிலேயே ஆண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்து வருவதால், ஒவ்வொரு ஆண்களும் தங்கள் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

International Men s Health Week 2025 Top 3 Millet Kanji Recipes For Men To Improve Heart Health

மாரடைப்பானது ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் என்றாலும், பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்கள் தான் அதிக அபாயத்தில் உள்ளனர். இதற்கு கொலஸ்ட்ரால் மட்டுமின்றி, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாக உள்ளன. மேலும் ஆண்கள் அவ்வளவு எளிதில் தங்கள் உடல் ஆரோக்கிய பிரச்சனைக்கு மருத்துவரை அணுகமாட்டார்கள். பிரச்சனை முற்றிய நிலையில் தான் மருத்துவரை அணுகுவார்கள். இப்படியான அணுகுமுறையை ஒவ்வொரு ஆணும் முதலில் மாற்ற வேண்டும்.

ஆண்களின் இப்படியான அலட்சிய போக்கால் ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினத்திற்கு முந்தைய ஒரு வாரம் சர்வதேச ஆண்கள் சுகாதார வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆண்களின் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றியும், அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் ஆங்காங்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டின் சர்வதேச ஆண்கள் சுகாதார வாரமானது ஜூன் 9 தொடங்கி ஜூன் 15 வரையிலான காலமாகும்.

பொதுவாக ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு அவர்களின் உணவுப் பழக்கங்களும் ஒரு முக்கிய காரணமாக உள்ளன. எனவே மாரடைப்பு வராமல் இருக்க ஆண்கள் முதலில் தங்களின் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதுவும் தங்களின் உணவில் சிறுதானியங்களை அதிகம் சேர்த்து வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. அரிசியை விட சிறுதானியங்களில் மாவுச்சத்து 10-15 சதவீதம் குறைவாக உள்ளது. மேலும் நுண் சத்துக்கள் அதிகம் உள்ளன. உதாரணமாக ராகியில் பாலை விட 2 மடங்கு கால்சியம் உள்ளது. இரும்புச்சத்து என்றால் கம்பில் அதிகம் உள்ளது. இது தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்றவைகளும் அதிகம் உள்ளன. அதேப் போல் அரிசியை விட கிளைசீமிக் இன்டெக்ஸ் சிறுதானியங்களில் குறைவு.

இப்படிப்பட்ட சிறுதானியங்களை தினசரி உணவில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை கட்டுப்படும், உடல் எடை குறையும், செரிமானம் சீராக நடக்கும், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு வரும் அபாயம் குறையும், எலும்புகள் மற்றும் தசைகளுக்கு நல்லது, உட்பட ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

"சிறுதானியங்களிலேயே கம்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும், இதில் புரோட்டீன், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளன மற்றும் அரிசியை விட 8 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து உள்ளது என்றும், இந்த கம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்" என்றும் டாக்டர் கார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட சிறுதானியங்களுள் கம்பு, குதிரைவாலி, ராகி போன்றவற்றை கொண்டு எப்படி ருசியான கஞ்சியை சமைப்பது என்பதை இப்போது காண்போம். ஆண்கள் இந்த கஞ்சியை தங்களின் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

1. கம்பு வெஜிடேபிள் கஞ்சி

தேவையான பொருட்கள்:

* கம்பு - 100 கிராம்
* தண்ணீர் - 1 கப் + 7 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் கம்பை சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பீன்ஸ், கேரட், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 7 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து அவ்வப்போது கிளறி விட்டு நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கம்பு வெஜிடேபிள் கஞ்சி தயார்.

2. ராகி கஞ்சி/ ராகி வெஜிடேபிள் சூப்

உங்களுக்கு வெறுமனோ ராகியை காய்ச்சி, தயிர் மற்றும் வெங்காயம் சேர்த்து கரைத்து கஞ்சியாக சாப்பிட பிடிக்காவிட்டால், அவற்றை ருசியாக சமைத்து சாப்பிட நினைத்தால், பிரபல செஃப் தீனதயாளன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ராகி வெஜிடேபிள் சூப்பை தயாரித்து குடியுங்கள். இந்த சூப் சத்தானது மட்டுமின்றி, மிகவும் சுவையானதும் கூட. இப்போது அதை எப்படி செய்வதென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

* ராகி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* விருப்பமான காய்கறிகள் - 1 சிறிய பௌல் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர்)
* முருங்கைக்கீரை - 1 கப்
* முளைக்கட்டிய பச்சை பயறு - 1 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 சிட்டிகை
* ஆளி விதை பவுடர் - 1 சிட்டிகை
* கடலை எண்ணெய் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் விருப்பமான காய்கறிகளை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் முருங்கைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் முளைக்கட்டிய பச்சை பயறை சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ராகி மாவை நீரில் கரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்கறியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் உடனே தேங்காய் பாலை ஊற்றி கிளறி, சிறிது நீரையும் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மிளகுத் தூள், மாங்காய் தூள், ஆளி விதை பவுடர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ராகி வெஜிடேபிள் சூப் தயார். முக்கியமாக இந்த சூப்பை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கெட்டியாகிவிடும்.

3. தேங்காய் பால் குதிரைவாலி கஞ்சி

தேவையான பொருட்கள்:

* குதிரைவாலி - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* கெட்டி தேங்காய் பால் - 1 கப் + 6 கரண்டி
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் குதிரைவாலி அரிசியை நீரில் 3-4 முறை கழுவி, பின் நீரை ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மறுநாள் காலையில் அந்த குதிரைவாலி அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, அதை குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மீண்டும் ஒரு 6 குழிக்கரண்டி கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதை இறக்கி, கஞ்சி மிகவும் கெட்டியாக இருப்பதாக உணர்ந்தால், மீண்டும் தேங்காய் பாலை ஊற்றி கலந்து பரிமாறினால், சுவையான தேங்காய் பால் குதிரைவாலி கஞ்சி தயார்.

எனவே நண்பர்களே! சிறுதானியங்களை மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு சுவையான முறையில் சமைத்து, உங்களின் தினசரி உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion