சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்..

Posted By:

Senai Kizhangu Kulambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? எப்போதும் சேனைக்கிழங்கை வறுவல், ப்ரை என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை குழம்பு செய்யுங்கள். இப்படி சேனைக்கிழங்கைக் கொண்டு குழம்பு செய்யும் போது அது கறிக்குழம்பு போன்று ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். சேனைக்கிழங்கு நாக்கில் அரிப்பை ஏற்படுத்தாமல் இருக்க ஒரு சூப்பரான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் பின்பற்றி செய்யும் போது குழம்பு இன்னும் பிரமாதமாக இருக்கும்.

Senai Kizhangu Kulambu How To Make Elephant Foot Yam Kuzhambu Recipe

உங்களுக்கு இந்த சேனைக்கிழங்கு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேனைக்கிழங்கு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சேனைக்கிழங்கு - 1 1/2 கப்

வறுப்பதற்கு...

* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்

செய்முறை:

* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, ஓரளவு பெரிய சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி ப்ரை செய்வதன் மூலம் வாயில் நமைச்சல் அல்லது அரிப்பு ஏற்படாது.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்கு ப்ரை செய்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ப்ரை செய்த சேனைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சேனைக்கிழங்கு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, August 8, 2026, 14:21 [IST]
Desktop Bottom Promotion