சுவாச நோய்களை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கொழுஞ்சியின் நன்மைகள்!!

By: Gnaana
Subscribe to Boldsky

மனிதர்களுக்கு நன்மைகள் தரும் மூலிகைச் செடிகள் எல்லாம் பெரும்பாலும், சாலையோரங்களில், வயல்வெளிகளில் வளர்ந்திருக்கும். அதுபோல வயல் வெளிகளில் வளரும் கொட்டைக் கரந்தை போன்ற கற்ப மூலிகைகளை, அவற்றின் பலன்களை அறியாமல், பயிர்களை அழிக்க வந்த களைச்செடிகள் என்று விவசாயிகள் வெட்டியோ, இரசாயனங்கள் தெளித்தோ அழிக்கிறார்கள்.

இருந்தபோதிலும், ஒரு செடியை மட்டும், நெற்பயிர் விளைவதற்கு முன்னால் வயல்களில் வளர்க்கிறார்கள். இது என்ன விந்தை? அப்படி என்ன பலன்கள் இருக்கிறது அந்தச் செடியில்?

கொழுஞ்சி எனும் அந்தச் செடிதான், விவசாயிகளின் தோழனாகத் திகழ்கிறது. வயல்களில், நெல்மணி நாற்றுகளை நாடும் சமயத்திற்கு ஓரிரு வாரங்கள் முன்னர் அந்தச் செடிகளை, விதைகள் மூலம் நட்டு, வயலில் வளர்த்து வருவார்கள்.

மழை பொழிய ஆரம்பித்ததும், வளர்ந்து சில நாட்களே ஆன கொழுஞ்சி செடிகளை, சேற்றில் கலந்து மண்ணில் பரவும் வகையில், வயலை உழுது விடுவார்கள். அதன் பின்னரே, வயலில், நெல் நாற்றுக்களை நடுவார்கள்.

வயலில் வளர்த்து, வயல் மண்ணிலேயே கலந்த கொழுஞ்சி தான், அந்த நெற்பயிருக்கு சிறந்த இயற்கை உரமாகத் திகழும். சாம்பல், மணிச்சத்து மற்றும் தழைச் சத்து மிக்க, இந்த கொழுஞ்சி உரம், நெற்கதிர்களை விரைவில் செழித்து வளர வைத்து, நல்ல விளைச்சலை உண்டாக்கும் தன்மை மிக்கதாக விளங்குவதால்தான், கொழுஞ்சி செடிகளை வயலில் வளர்த்து, இயற்கை உரமாக்குகிறார்கள். இயற்கை கொழுஞ்சி உரத்திற்கு, விவசாயிகளிடையே ஏகப்பட்ட தேவையும் நிலவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கொழுஞ்சி செடி:

கொழுஞ்சி செடி:

ஒரு அடி உயரம் கூட வளராத சிறிய செடியான கொழுஞ்சி, சாலையோரங்களில் தானே வளரும் இயல்புடையது. கூட்டு இலைகளுடன் கூடிய நீல வண்ண மலர்களுடன் வெடிக்கும் தன்மையுள்ள காய்களைக் கொண்ட கொழுஞ்சி, வயல் வெளிகளிலும் காணப்படும்.

சுவாச நோய்களை விரட்டும் :

சுவாச நோய்களை விரட்டும் :

வேர், பட்டை, விதை மற்றும் இலைகள் மூலம், சிறந்த மருத்துவத் தன்மைகளைக் கொண்ட கொழுஞ்சி செடி, உடலுக்கு, ஊட்டச்சக்தியையும், எதிர்ப்பு சக்தியையும் அளிக்கவல்லது.

சுவாச பாதிப்புகளை சரியாக்கி, சளி மற்றும் ஆஸ்துமாவை விரட்டும். குஷ்டம் முதலிய சரும வியாதிகளுக்கு மருந்தாகிறது. உடலில் உள்ள வீக்கத்தைக் கரைக்கும். குடல் புண்களை சரி செய்யும். செடியின் வேரை மென்று சாற்றை விழுங்க, உடல் சூட்டினால் ஏற்பட்ட வயிற்று வலி, சிறுநீர்க் கடுப்பு போன்றவை, சில மணித்துளிகளில் தீரும்.

இதய நோய்களை குணப்படுத்தும் :

இதய நோய்களை குணப்படுத்தும் :

இதய பாதிப்புகளை சரி செய்து, இரத்த நச்சுக்களை அழிக்கும். வயிற்றுப் பூச்சிகளை அழித்து, மலச்சிக்கலை போக்கும் தன்மை மிக்கது, கொழுஞ்சி செடி.

கொழுஞ்சி இலைகளின் பயன்கள்:

கொழுஞ்சி இலைகளின் பயன்கள்:

கொழுஞ்சி இலைப்பொடி!

பொட்டுக்கடலை, துவரம் பருப்பு மற்றும் கொழுஞ்சி இலைப்பொடி இவற்றை சம அளவு எடுத்து, இவற்றின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவு மிளகுத்தூள் மற்றும் இந்துப்பு சேர்த்து, நன்கு அரைத்து, தூளாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை தினமும், சாப்பாட்டில் நல்லெண்ணெய் ஊற்றி பொடி சாதம் போல சாப்பிட்டு வர, வயிற்றில் உண்டான பூச்சிகளினால் ஏற்பட்ட வயிற்று வலி குணமாகி, பூச்சிக்களும் அழிந்து வெளியேறி விடும்.

கொழுஞ்சி துவையல்:

கொழுஞ்சி துவையல்:

செடியில் பறித்த கொழுஞ்சி இலைகளை, நன்கு அலசி, வாணலியில் நல்லெண்ணை இட்டு அதில் வதக்கிய பின்னர், வதக்கிய கொழுஞ்சி இலைகளோடு, சிறிது காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், புளி மற்றும் இந்துப்பு சேர்த்து, அம்மியில் அரைத்து, சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோடைக்கால சாப்பாட்டில் இந்த துவையலைச் சேர்த்து சாப்பிட, உடலுக்கு குளிர்ச்சி அளித்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கொழுஞ்சி தேநீர்!

கொழுஞ்சி தேநீர்!

கொழுஞ்சி, துளசி, ஆவாரை, கீழாநெல்லி மற்றும் கிராம்பு இவற்றை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் கலந்து தேநீராகப் பருகி வர, தலைவலி, உடல் வெம்மை போன்றவை நீங்கி, உடல் அசதி விலகும்.

கொழுஞ்சி வேரின் பயன்கள்.

கொழுஞ்சி வேரின் பயன்கள்.

கொழுஞ்சி வேருடன் அதில் பாதி அளவு மிளகுத்தூள் சேர்த்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் சுண்டியதும், அந்த நீரை தினமும் இரு வேளை பருகி வர, பித்தத்தால் ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள், கல்லீரல் வீக்கம், வயிற்று வலி மற்றும் செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் சரியாகி விடும்.

கொழுஞ்சி வேரின் தூளை, தூபக்கால் நெருப்பில் இட்டு, அந்தப் புகையை சுவாசித்து வர, சளியினால் உண்டான மூச்சிரைப்பு, நெஞ்சு வலி மற்றும் சளி இருமல் பாதிப்புகள் விலகும்.

வாய்ப்புண் நீங்கும் :

வாய்ப்புண் நீங்கும் :

வேர்ப்பொடியை சிறிது மோரில் கலந்து பருகி வர, இரத்தத்தில் சேர்ந்த நச்சுக்களினால் ஏற்பட்ட கட்டிகள், முகப்பருக்கள் நீங்கி, நச்சுக்கள் அழிந்து, உடல் நலமாகும்.

வேர்ப்பொடியை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்புளித்து வர, வாய்ப்புண், பூச்சிப்பல் மற்றும் பல் வலி பாதிப்புகள் நீங்கும்.

வயிற்று வலியைப் போக்க, கொழுஞ்சி !

வயிற்று வலியைப் போக்க, கொழுஞ்சி !

கொழுஞ்சி செடியைப் பிடுங்கி, வேருடன் கூடிய முழுச்செடியை உலர்த்தி, அரைத்து, அதை சிறிது நீரில் இட்டு நன்கு கொதித்து வந்ததும், ஆற வைத்துப் பருகி வர, தீராத வயிற்று வலியும் தீர்ந்து விடும்.

கொழுஞ்சி விதைகளை காயவைத்து, வறுத்தரைத்து வைத்துக்கொண்டு, காபித்தூள் போல டிகாக்ஷன் உண்டாக்கி, பாலில் கலந்து பனை வெல்லம் சேர்த்து பருகி வர, உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.

கொழுஞ்சி இயற்கைச் சத்து உரம்.

கொழுஞ்சி இயற்கைச் சத்து உரம்.

அக்காலத்தில் கிராமங்களில், அனேகமாக எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறங்களிலும் எருக்குழிகள் என்ற குழிகள் இருக்கும். இதில், மாட்டின் சாணம், மற்றும் இலை தளைகளைக் கொட்டி வைப்பார்கள்.

குறிப்பிட்ட காலம் கடந்ததும், இவை மக்கி உரமாகும். இந்த உரங்களே, நெற்பயிர்கள் விளையும் வயல்களுக்கு, சிறந்த இயற்கை உரங்களாகத் திகழும். காலப்போக்கில், மாடுகள் குறைந்து, இயற்கை உரங்களை அளித்த எருக்குழிகளும் இல்லாது போய்விட்டன.

ஆயினும், இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய நமக்கு, கொழுஞ்சி செடி பேருதவி செய்யும்.

பயிர்கள் செழித்து வளர :

பயிர்கள் செழித்து வளர :

தோட்டங்களில், குழி வெட்டி, அதில் கொழுஞ்சி செடிகளைப் போட்டு சற்று காலம் மூடி வைக்க, செடிகள் மக்கி, நல்ல இயற்கை உரங்களாக மாறும். இவற்றை நெற்பயிர் விளையும் நிலங்களில் இட, பயிர்கள் செழித்து வளரும்.

கொழுஞ்சி உரத்தில், தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மிகுந்து இருக்கின்றன. இதனால், மண்ணிற்கு தேவையான அனைத்து வளங்களும், இந்த ஒரே உரத்தில் கிடைத்து விடுகின்றன. ஒரு முறை கொழுஞ்சி இயற்கை உரத்தை நிலத்தில் இட்டால், குறைந்த பட்சம் ஐந்தாறு ஆண்டு காலம், மண்ணை வளமாக்கி வைத்திருக்கும்,

ஆயினும், தற்காலத்தில், களைகளை அழிக்கும் இரசாயன மருந்துகளால், கொழுஞ்சி செடிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன.

கொழுஞ்சியை அழிக்கும் செயற்கை உரங்களின் மூலம், நமக்கு உணவிடும் மண்ணை மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறைகளையும் வலுவிழக்கச் செய்கிறோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to add Kozhunji herb to the food to increase Immunity

How to add Kozhunji herb to the food to increase Immunity
Story first published: Thursday, December 7, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter