For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி!

By Mayura Akilan
|

Ginger
இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள். இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசி ஏற்படாது. இஞ்சி எரிக்கும் குணத்தை உடையது. பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. கடினமான உணவுகளைக் கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது.

இஞ்சியில் உள்ள சத்துக்கள்

சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இஞ்சியில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. எ, பி, சி போன்ற வைட்டமின்களும் காணப்படுகின்றன.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி காயகல்பம்

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இதனை தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். நெஞ்சு உரம் பெறும்.

வாய்வுத் தொல்லை நீங்கும்

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் விட்டு கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

வலி நீக்கும் நிவாரணி

உடலில் எந்தக் கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இஞ்சி. இயற்கை வழங்கிய கொடையான இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை உடையது.

இதயத்தை காக்கும்

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சளி இருமல் போக்கும்

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டு சுண்ட காய்ச்சி வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு நீங்கும்.

சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும்.

English summary

Healing Power of Ginger | வலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி!

Ginger is obtained from the plant Zingier officinale. Consumption of ginger for medicinal purposes is primarily to aid in digestion. It contains calcium, iron, magnesium, phosphorous, sodium, potassium, minerals as well as vitamins A, B complex, and C.
Story first published: Monday, March 12, 2012, 13:33 [IST]
Desktop Bottom Promotion