H3N2: நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு வேகத்தில் அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் கூறும் இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க..

H3N2 Influenza: தற்போது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் H3N2 இன்ப்ளூயன்ஸா தொற்று அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், இது ஒரு பெரிய தொற்றுநோயைத் தூண்டியுள்ளது. இந்த H3N2 வைரஸ் காற்றின் நீர்த்துளிகள் வாயிலாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரக்கூடியது.

இந்த வைரஸ் சளி, இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகளைத் தாண்டி, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களிடையே மோசமான அறிகுறிகளையும் உருவாக்கும்.

H3N2 Influenza Doctor Reveals Top 10 Best Foods To Increase Immunity Naturally

பொதுவாக ஒருவருக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படுகிறது என்றால், அவரது உடலின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்க வேண்டும். ஆனால் தொற்று ஏற்பட்டு அதன் பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை விட, அந்த தொற்று ஏற்படாமல் இருக்க நோயெதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதை அறிந்து, அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த வழி உணவுகள் தான். இந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 10 உணவுகளை டாக்டர் கார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது எந்த உணவுகள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. மஞ்சள் மற்றும் இஞ்சி

காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது, இஞ்சியை தட்டிப் போட்டு கலந்து குடிப்பது நல்லது. மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி ஆகிய இரண்டிலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது என்று டாக்டர் கூறினார்.

2. கறிவேப்பிலை

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கறிவேப்பிலையை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதுவும் காலையில் எந்த உணவை உட்கொண்டாலும், அத்துடன் கறிவேப்பிலையை சேர்த்து எடுப்பது என்பது மிகவும் முக்கியம். சொல்லப்போனால் துளசியை விட கறிவேப்பிலை முக்கியம் என்று டாக்டர் கூறினார்.

3. வைட்டமின் சி

வைட்டமின் சி அதிகம் நிறைந்த மிகச்சிறந்த ஒன்று தான் முருங்கைக்கீரை. முருங்கைக்கீரை கிடைத்தால், அதை கழுவி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் இந்த கீரையை தினமும் எந்த குழம்பு, சாம்பார் என்று எது செய்தாலும், அத்துடன் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவியாக இருக்கும் என்று டாக்டர் கூறினார்.

4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடி

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடி என்பது சீரகம், மல்லி, கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கக்கூடியது. இந்த பொடியை தினமும் சமைக்கும் பொரியல், கூட்டு, பச்சடி, வறுவல் போன்றவற்றில் சிறிது சேர்த்து வாருங்கள். இதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று டாக்டர் கூறினார்.

5. மிளகு ரசம்

மழைக்காலத்தில் சளி, இருமல் எதுவும் பிடிக்காமல், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க மிளகு ரசத்தை வைத்து சாப்பிடுங்கள். மிளகு, பூண்டு காம்பினேஷன் நிறைந்த ரசம், உடலுக்கு பல நன்மைகளைத் தரும். முக்கியமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே இந்த ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள் என்று டாக்டர் கூறினார்.

6. பெரிய நெல்லிக்காய்

பெரிய நெல்லிக்காயில் இவ்வளவு தான் நன்மை உள்ளது என்பதில்லை. அந்த அளவில் நிறைய நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த நெல்லிக்காயை ஊறுகாயாக செய்து சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அதுவும் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, பல நன்மைகளை பெறலாம் என்று டாக்டர் கூறினார்.

7. வாழைத்தண்டு

நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டுமானால், குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது நார்ச்சத்து. இந்த நார்ச்சத்து வாழைத்தண்டில் அதிகம் உள்ளது. இந்த வாழைத்தண்டை வாரம் ஒருமுறை தவறாமல் உணவில் சேர்த்து வர வேண்டியது முக்கியம் என்று டாக்டர் கூறினார்.

8. மூலிகை டீ

பட்டை டீ, இஞ்சி டீ, ஆவாரம்பூ டீ, செம்பருத்தி டீ போன்ற டீக்களை தினமும் ஒன்று என மாற்றி மாற்றி குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளலாம் என்று டாக்டர் கூறினார்.

9. மோர்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மோர் பெரிதும் உதவி புரியும். அதுவும் அந்த மோரில் இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தினமும் குடித்து வர வேண்டியது மிகவும் முக்கியம் என்று டாக்டர் கூறினார்.

10. கீரைகள்

கடைசியாக கீரைகளை தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். கீரையில் பல உள்ளன. எந்த கீரை கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். இருப்பினும், அதில் அவசியம் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டிய கீரை என்றால் அது மணத்தக்காளி கீரை என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்க விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, எப்பேற்பட்ட நோய்த்தொற்றுகளும் உடலைத் தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, September 24, 2025, 13:43 [IST]
Desktop Bottom Promotion