தர்பூசணி சாப்பிட்டதும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...

Watermelon In Tamil: கோடைக்காலம் என்பதால் தர்பூசணி பழங்கள் ஆங்காங்கு விலை குறைவில் விற்கப்படுவதைக் காணலாம். யாருக்கு தான் நீர்ச்சத்துள்ள சுவையான தர்பூசணி பழம் பிடிக்காது. அதுவும் கோடைக்காலத்தில் தர்பூசணி பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், கோடையில் அதிகம் சந்திக்கும் நீரிழப்பு பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

மேலும் தர்பூசணி ஏராளமான சத்துக்களை கொண்டது என்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். என்ன தான் தர்பூசணி ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அந்த பழத்தை தவறான உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், அது உடலுக்கு பல்வேறு தீமைகளை விளைவிக்கும்.

Foods You Should Not Eat After Eating Watermelon In Tamil

முக்கியமாக தர்பூசணி பழத்தை சாப்பிட்ட உடனேயே ஒருசில உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது, அதன் விளைவாக வயிற்று உப்புசம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, தர்பூசணியால் கிடைக்கும் நன்மைகளும் தடைபடும்.

எனவே தர்பூசணிப் பழத்தின் முழு நன்மைகளைப் பெற விரும்பினால், அப்பழத்தை சாப்பிட்டதும் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும். கீழே தர்பூசணி சாப்பிட்டதும் எந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.

பால் குடிக்கக்கூடாது

தர்பூசணி பழத்தை சாப்பிட்டதும் பால் குடித்தால், அது உடலுக்கு பல வழிகளில் தீங்கை விளைவிக்கும். எப்படியெனில் தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொண்டதும் பாலைக் குடித்தால், அது ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து, வயிற்றில் உள்ள பால் திரிந்து, வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். இது தவிர இது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவித்து, அஜீரண கோளாறையும் உண்டாக்கும்.

புரோட்டீன் உணவுகள் கூடாது

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டதும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதோடு சிறிது ஸ்டார்ச்சும் உள்ளன. எனவே தர்பூசணி உட்கொண்டதும் புரோட்டின் உணவுகளான பருப்பு வகைகளை உட்கொள்ளும் போது, அது வயிற்றில் உள்ள செரிமான நொதிகளை சேதப்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

முட்டை சாப்பிடக்கூடாது

தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டதும் முட்டை சாப்பிட்டால், அது பல்வேறு வயிற்று பிரச்சனைகளை வரவழைக்கும். முட்டையில் புரோட்டீன் இருப்பது மட்டுமின்றி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன மற்றும் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவ்விரண்டையும் ஒன்றாக அல்லது அடுத்தடுத்து உண்ணும் போது, அது செரிமானத்தை பாதிப்பதோடு, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்றவற்றையும் உண்டாக்கும்.

தண்ணீர் குடிக்கக்கூடாது

தர்பூசணி சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தின் படி, தர்பூசணி சாப்பிட்டதும் நீரை குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது இரைப்பைக் குடலைப் பாதிக்கும்.

தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி சர்க்கரையும் உள்ளது. பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் சர்க்கரை மற்றும் ஈரப்பதமான பகுதியில் நன்கு வளர்ச்சி அடையும். எனவே தர்பூசணி சாப்பிட்டதும் நீரை குடிக்கும் போது, அது இரைப்பை குடல் பாதையில் நுண்ணுயிர்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். எனவே தான் தர்பூசணி சாப்பிட்டதும் நீர் குடிக்கக்கூடாதென ஆயுர்வேதம் கூறுகிறது.

இரவு தூங்கும் முன் சாப்பிடக்கூடாது

தர்பூசணியை இரவு நேரத்தை சாப்பிடக்கூடாது. இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும். இந்நிலையில் நீர்ச்சத்துள்ள மற்றும் சர்க்கரை நிறைந்த தர்பூசணியை உட்கொள்ளும் போது, அதை ஜீரணிக்க செரிமான மண்டலம் சிரமப்படும்.

இது தவிர, இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தின் காரணமாக, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திரிக்க வேண்டியிருக்கும். எனவே தர்பூசணியை சாப்பிட சிறந்த நேரம் பகல் வேளை தான். அதுவும் காலை உணவின் போது உட்கொள்வது மிகவும் நல்லது.

எனவே, இனிமேல் தர்பூசணி சாப்பிட்டால் மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உடனே சாப்பிட வேண்டாம். ஒருவேளை சாப்பிடுவதாக இருந்தால், குறைந்தது 30 நிமிடம் கழித்த பின்னரே உட்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, May 3, 2023, 12:45 [IST]
Desktop Bottom Promotion