For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

By Mayura Akilan
|

Bottle Gourd
நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அளப்பறிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந்துள்ளது. வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும் சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள்.

இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் பாட்டில்கார்டு (Bottle Gourd) என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை சிறிதளவு உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் காணப்படுகின்றன.

உடல்சூடு தணியும்

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

உடலுக்கு புத்துணர்ச்சி

சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு பலவகையான இன்னல்களை ஏற்படுத்தும். இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

நாவறட்சி நீங்கும்

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.

கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. மலச்சிக்கலைப் போக்கும்

கண்நோய்கள் நீங்கும்

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

தூக்கம் வரவழைக்கும்

தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும். சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.

யார் சாப்பிடக்கூடாது

சுரைக்காய் எவரும் பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும். சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.

வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக சுரைக்காயைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

English summary

Medicinal benefits of Bottle gourd | உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

It is one of the earliest vegetables cultivated by man, believed to be originated in Africa. Bottle gourd, not very familiar to the western world, is one of the favorite vegetables in Indian Cuisine. It grows in humid weather of India, Sri Lanka and other tropical countries. Bottle Gourd or Lauki has many properties that are valued in traditional healing. Its high water content makes it very cooling. The cooked Bottle Gourd is cooling, calming, diuretic and easy to digest. It is also effective against constipation and other digestive disorders.
Story first published: Monday, October 3, 2011, 16:17 [IST]
Desktop Bottom Promotion