For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைங்க வீட்ல இருக்காங்கலேன்ற அறிவு வேணாம்.... My Story #230

திருமணத்திற்கு பிறகு பழைய கால நட்பை பெண்கள் தொடர முடிவதில்லை. அதெல்லாம் பழைய காலம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இன்றைய காலத்து பெண்மணி சந்தித்த சில பிரச்சனைகள்

|

எனக்கு இது ஒன்றும் புதிதாகவோ அல்லது மிகப்பெரிய தவறு செய்வது போலவோ தோன்றிடவில்லை. ஆனால் இந்த ஒற்றை விஷயத்திற்காகவே என்னைச் சுற்றியிருப்பவர்களால் வெறுக்கப்படுகிறேன். யார் என்னை வெறுத்தாலும் அந்த ஒற்றை அன்பிற்காக எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்த ஒரு காலத்தில் கிடைத்த அறிமுகம் வருடங்கள் பல கடந்தும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்தும் தொடர்கிறது என்றால் எங்கள் இருவருக்குள்ளும் இருக்கிற அன்பை, அந்த பந்தத்தை ஏன் நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் ஆனால் இந்த சமூகமும் இந்த குடும்ப அமைப்பும் எங்களை பார்த்து தொடர்ந்து விமர்சித்துக் கொண்டேயிருக்கிறது.

பெண்களுக்கு நண்பர்களே இருக்கக்கூடாது. அதுவும் திருமணமாகிவிட்டால் நட்பு குறிப்பாக நண்பன் என்ற பெயரையே உச்சரிக்ககூடாது என்று தானே கற்பிக்கிறோம் கல்லூரி நண்பன் இவன் என்று அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் கல்லூரியைத் தாண்டி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை என்பதை அடிக்கோடிட்டு சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லூரி :

கல்லூரி :

நான் கல்லூரிக்கு படிக்க வந்த காலத்தில் எல்லாம் அவ்வளவாக வசதிகள் இருந்ததில்லை. காலை ஏழு மணிக்கு ஒரு பஸ்ஸும் மாலை ஆறு மணிக்கு ஒரு பஸ்ஸும் தான் இருக்கும். அதனால் பத்து மணி கல்லூரிக்கு ஏழு மணிக்கே கிளம்ப வேண்டும் மாலை நான்கு மணிக்கு கல்லூரி முடிந்தும் ஆறு மணி வரை காத்திருந்து தான் வர வேண்டும்.

இந்த பஸ்ஸை தவறவிட்டோமென்றால் மூன்று கிலோமீட்டர் வரை நடந்து சென்று பக்கத்தூரில் பஸ் ஏற வேண்டும். அவன் கல்லூரி வாசலில் ஸ்டாப்பிங் இல்லை என்று சொல்லி நிறுத்தமாட்டான். அதனாலேயே எங்கள் ஊரில் பலரும் ஏழு மணி பஸ்ஸுக்கு தான் செல்வோம்.

டியூசன் :

டியூசன் :

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வரை வெட்டியாக இருக்கிறோம் எதாவது செய்யலாம் என்று வகுப்பறையில் பேசினோம். கிட்டத்தட்ட வகுப்பறையில் இருந்த ஐம்பது பேரில் நாற்பது பேர் வரை பக்கத்து ஊர்களில் இருந்து வருகிறவர்கள் தான். எங்கள் ஊரில் இருந்தே பத்து பேர் வரை வந்தோம். மூன்று பேர் வரை விடுதி மாணவர்கள். ஒருசிலரைத் தவிர எதாவது செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்கள்.

அப்போது தான் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கிராமத்து மாணவர்களுக்கு டியூசன் எடுக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தான் முரளி.

மாணவர்கள் :

மாணவர்கள் :

இந்த பக்கம் இருக்குற பத்தாங்கிளாஸ் மற்றும் பன்னிரெண்டாங்கிளாஸ் படிக்கிறவங்களுக்கு அப்பறம் சின்ன கிளாஸ் எல்லாருக்கும் டியூசன் எடுக்கலாம். இங்கே இருப்பவர்கள் எல்லாம் தமிழ் வழி கல்வியைத் தான் படிக்கிறார்கள் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கலாம். விளையாட்டு பயிற்சி கொடுக்கலாம் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையைச் சொல்லி பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் மூன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுடன் எங்கள் டியூசன் ஆரம்பமானது. எட்டு மணிக்கு வந்து சேரும் பஸ்ஸ்டாண்டு தான் டியூசன் எடுக்கும் இடமானது. அப்படியே மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.

டியூசன் :

டியூசன் :

அந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர் எல்லாரும் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றனர். எங்கள் புகழ் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. கல்லூரி மாணவர்களின் புது முயற்சி என்று சொல்லி செய்திகள் எல்லாம் வெளியானது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வந்து சேர்த்தார்கள். பஸ்ஸ்டாண்டு இடம் வசதியாக இல்லை என்பதால் பள்ளியில் அனுமதி கேட்டோம். அவர்களின் அனுமதியுடன் மாணவர்களுக்கு தொடர்ந்து டியூசன் எடுத்தோம்.

எங்களுக்கு பஞ்சாயத்தில் இருந்து பாராட்டு விழா எல்லாம் எடுத்தார்கள்.

எங்களுக்கு அடுத்து :

எங்களுக்கு அடுத்து :

மூன்றாண்டுகள் படிப்பு முடித்து நாங்கள் சென்று விடுவோம் எங்களுக்கு அடுத்து யார் இந்த டியூசனை நடத்துவார்கள்? இவ்வளவு சிரமப்பட்டு மாணவர்களை ஒன்றிணைத்திருக்கிறோம் என்ன செய்வது..... என்று யோசித்த போது இன்னொரு யோசனை வந்தது. இனி இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குழு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு டியூசன் எடுக்க வேண்டும் என்று ஒரு குழு உருவாக்கப்பட்டது. விருப்பமிருப்பவர்கள் அந்த குழுவில் சேரலாம்.

அவர்கள் மாணவர்களுக்கு டியூசன் எடுப்பார்கள்.

வேலை,திருமணம் :

வேலை,திருமணம் :

சிலருக்கு மூன்றாமாண்டு படிக்கும் போதே திருமணமானது, கல்லூரி நண்பர்கள் வேலை தேடி வெளியூருக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். கல்லூரி முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு விலகியது. இன்று இருப்பது போல சமூக வலைதள வசதியோ அல்லது ஸ்மார்ட் போனோ இருந்திருக்கவில்லை . ஒரு சிலர் வீட்டில் மட்டுமே போன் இருந்தது.

எனக்கும் திருமணம் முடிந்தது தஞ்சைக்கு அனுப்பினர்கள்.

ஆசிரியர் :

ஆசிரியர் :

கணவர் என்னை மேற்படிப்பு படிக்க வைத்தார். அங்கிருந்து ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தேன். அரசுப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்று விரும்பினேன். அந்த காலத்தில் என் மூத்த மகன் பிறந்திருந்தான். இரண்டு வருடத்தில் கும்பகோணத்தில் இருக்கிற அரசுமேல்நிலைப்பள்ளியில் வேலை கிடைத்தது.

கும்பகோணத்தில் குடியேறினோம்.

நண்பன் :

நண்பன் :

அந்த வருடம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மனநலப் பயிற்சி வழங்க சென்னையிலிருந்து ஒரு பயிற்றுனர் வருகிறார் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர் சொன்னார். இதை கேட்டதுமே கல்லூரியில் படிக்கும் போது நாங்கள் முன்னெடுத்த முயற்சி நினைவுக்கு வந்தது.

அந்த சிறப்பு பயிற்றுனர் யார் தெரியுமா? முரளி. கல்லூரியில் இந்த டியூசன் விஷயத்தை முன்னெடுத்தது இவன் தான்.... எதோ ஒரு வகையில் அதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது.

என்ன நியாபகம் இருக்கா ? :

என்ன நியாபகம் இருக்கா ? :

மாணவர்களை சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து இரண்டு மணி நேரம் அற்புதமாக மேடையை பயன்படுத்திக் கொண்டான். தேர்வும் தேர்வின் அணுகுமுறையும் எங்களை விட மாணவர்களுக்கு புரிகிற நடையில் சொன்னதாகவே எனக்கு தோன்றியது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக மார்க் பின்னாடி ஓடாதிங்க.... இதையும் தாண்டி எக்கச்சக்கமான வாய்ப்புகள் கொட்டிகிடக்கு என்பதை மாணவர்களுக்கு புரியவைத்தான். நிகழ்ச்சியை முடித்து வெளியேறும் போது மாணவர்கள் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.... நாங்களும் தான். கிரவுண்டிலிருந்து பின்னால் இருந்த அறைக்கு தன் பையை எடுத்துக் கொள்ள வந்தான்.

ஒடிச்சென்று முரளி.... என்றேன் திடுக்கிட்டு திரும்பினான்.

என்னைய நியாபகம் இருக்கா?

விட்ட இடத்திலிருந்து தொடரலாம் :

விட்ட இடத்திலிருந்து தொடரலாம் :

ஹேய்....நீ இங்க என்ன பண்ற என்றான். கதையை விவரித்தேன் சந்தோசப்பட்டான். இவ்வளவு வருடத்திற்கு பிறகு என்னை இங்கே இப்படி சந்திப்பான் என்று அவனும் நினைத்திருக்கவில்லை நானும் கூடத்தான். மதியம் சாப்பிட வெளிய போறேன் வரியா என்றான். அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்று உணவு ஆர்ட்டர் செய்து காத்திருந்தோம்.

இன்னும் என்னால நம்பவே முடியல என்று ஆனந்தப்பட்டான் பழைய நண்பர்கள் ஒவ்வொராக நினைவுபடுத்தி அவர்கள் அப்போது என்ன செய்தார்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பழைய கல்லூரி நாட்களுக்கே திரும்பினோம்.

டியூசன் எப்படியிருக்கு :

டியூசன் எப்படியிருக்கு :

இப்பவெல்லாம் டியூசன் யாரும் எடுக்குறதில்லையாம். ஸ்கூல் டீச்சர்களுக்கும் நம்ம பசங்களுக்கும் எதோ பஞ்சாயத்து ஆகியிருக்கும் போல பசங்க டியூசன் எடுக்க வந்தா நாங்க கிளாஸ் எடுக்கமாட்டோம்னு சொன்னனால இனி இடம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க கொஞ்ச நாள் அங்க இங்கனு வச்சு எடுத்துருக்காங்க அப்டியே விட்டுப் போச்சு என்றான்.

கேட்கும் போதே வருத்தமாய் இருந்தது. மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசிப்பதாகவும். மனநலம் குறித்து மேற்படிப்பு படித்து ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்கப் போவதாக சொன்னான்.

விட்டுக்கு வா :

விட்டுக்கு வா :

தான் வைத்திருந்த ஸ்மார்ட் போனில் மனைவி மற்றும் குழந்தையின் படத்தை காண்பித்தான். காலேஜ் படிக்கும் போது எங்க கூட நடந்து வர்றதுக்கே பயப்படுவ இப்ப என்னடானா ஹோட்டலுக்கே வந்துட்ட என்று சொல்லி சிரித்தான்.... அப்ப பாத்த மாதிரியே இருக்க துருதுருன்னு அந்த திடீர் பாராட்டு நம் மனதுக்கு பிடித்தவரிடமிருந்து கிடைக்ககூடிய அங்கீகாரம் எல்லாம் என்னை உச்சிக் குளிரச் செய்தது. மகிழ்வாய் அன்றைய மதிய உணவு முடிந்தது.

மனைவிக்கும் குழந்தைக்கும் நான் எதாவது வாங்கித் தரவேண்டும் என்று சொல்லி கடைக்கு அழைத்துச் சென்று துணி எடுத்துக் கொடுத்தேன். அதற்கே மாலையாகிவிட்டது. சரி குழந்தைகள் வீட்டிற்கு வந்திருப்பார்கள் வீட்டிற்கு வா கணவர் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துறேன் என்று சொல்லி அழைத்தேன்.

இன்னொரு நாள் பார்க்கலாம் :

இன்னொரு நாள் பார்க்கலாம் :

குடும்பத்துடன் வரும் போது வருகிறேன் என்றான்... இல்லை இப்போது வா டின்னர் எங்க வீட்ல தான். ஃபேமிலியோட இன்னொரு நாள் வரலாம் என்று வர்புறுத்தினேன் அவனால் அதை தவிர்க்க முடியவில்லை.சரி வா போலாம் என்று ஆட்டோ ஏறினோம். மகனையும் மகளை அறிமுகப்படுத்தினேன். சம்பிரதாயத்திற்கு பேசிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார்கள்.

பசங்களுக்கு எதுவுமே வாங்கிட்டு வர்ல நான் போய் எதாவது வாங்கிட்டு வந்திடவா என்று எழுந்தான்.... அதனால என்னயிருக்கு சும்மா இருக்கட்டும் பரவாயில்லை என்றேன்.

கணவர் :

கணவர் :

சிறிது நேரத்தில் கணவர் வந்து சேர்ந்தார். நுழையும் போதே அதிர்ச்சி கண்களில் தெரிந்தது ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. என் கூட காலேஜ் சேர்ந்து படிச்சான் இன்னக்கி ஸ்கூலுக்கு சீஃப் கெஸ்ட்டா வந்திருந்தான். எதோ புக் எல்லாம் எழுதியிருக்கான், அவார்ட் கூட வாங்கியிருக்கானாம் என்றேன் அட நீ வேற ரொம்ப பெருசா பில்டப் பண்றா என்றான்.

கணவர் அவனை நேரடியாக பார்க்க கூட இல்லை. எதோ ஒரு வித கோபத்துடனே இருந்தார். ஆபிஸ்ல எதாவது பிரச்சனையா என்றேன் அதெல்லாம் ஒண்ணுமில்ல சாருக்கு சாப்பாடு போட்டியா ? அப்பறம் கிளம்ப லேட் ஆகிட போது என்றார். முரளி புரிந்து கொண்டான். இப்படி பேசிவிட்டாரே என்று வருத்தத்துடன் எதுவும் நினைத்துக் கொள்ளாதே என்று சிக்னல் காட்டினேன்.

என்னடா அடி வேணுமா? :

என்னடா அடி வேணுமா? :

எழுந்து குழந்தைகள் இருந்த அறைக்குச் சென்றார். ரெண்டு பேரும் படிக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க டேய் உன்னைய சைக்கிள கேட் கிட்ட நிப்பாட்டுனு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன் ஏன் ஒரு தடவ சொன்னா புரியாதா ரெண்டு அடி வச்சாதான் புத்தி வருமா? எந்திரி போ போய் ஒழுங்கா நிப்பாட்டு என்று தலையில் தட்டினார். மகன் தெரித்து ஓடினான். நீ என்னடி கோழி கிறுக்குன மாதிரி கிறுக்கிட்டு இருக்க கைல சூடு வைக்கிறேன் என்று கத்தினார் அம்மா என்று என்னை வந்து கட்டிக் கொண்டாள்.

யூனிஃபார்ம் எடுத்தா ஹேங்கர்ல மாட்டுன்னு எத்தனவாட்டி சொல்றது நாளைக்கு இதே அசிங்கமா போட்டு போவியா ஒழுங்கா மடிச்சு வை என்று கட்டிலில் போட்டிருந்த யூனிஃபார்மை ஹாலுக்கு வீசினார்.

கிளம்புறேன் :

கிளம்புறேன் :

என்றும் இல்லாதவராக இன்றைக்கு ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரியாமல் விழித்தேன். சரி நான் வரேன் நைட் போய் பஸ் வேற புடிக்கணும் என்ற கிளம்பினான். சரி ஊருக்கு போய்ட்டு போன் பண்ணு பத்திரமா போ என்று அனுப்பி வைத்தேன். கேட்டுச் செல்வதற்காக கணவரை வரச்சொல் கேட்டுச் செல்கிறேன் என்று சிக்னல் காண்பித்தான். ஏங்க முரளி கிளம்பிட்டான் உங்கட்ட கேட்டு போணும்னு வெயிட் பண்றான் என்றேன்.

அப்ப நான் வரேன்னேன் என்றான்.... ம்ம்ம் சரி சரி என்று உள்ளிருந்து கணவரின் குரல் மட்டும் வந்தது.

உனக்கு அறிவில்லையா :

உனக்கு அறிவில்லையா :

அவன் கிளம்பியது தான் தாமதம் உள்ளறையிலிருந்து வெளியே வந்தார். யார்ரீ அவன் கண்ட நாய நடுவீட்ல உக்கார வச்சு பேசிட்டு இருக்க பாக்குறவன் என்ன நினைப்பான பசங்க வீட்ல இருக்கேன்ற கூருகூட இல்லாம பல்ல காட்டி சிரிச்சுட்டு இருக்க பாத்தோமோ பேசினோமா அப்டியே அனுப்பினோமானு இல்லாம எதுக்கு வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு வர?

மரியாதையா பெட்டி படுக்கைய கட்டிட்டு உங்காத்தா வீட்டுக்கு கிளம்பு என்று கத்த ஆரம்பித்தார்.

மறுநாள் :

மறுநாள் :

கல்லூரியில் உடன் படித்த நண்பன் என்று எவ்வளவோ சமாதனப்படுத்த முயன்றேன். இன்னைக்கி வரைக்கும் மறக்காம இருக்கான் வீடு வரைக்கும் வரான்னா காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணிங்களா? என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார் ஐயையோ இல்லங்க ரெண்டு பேருக்குமே அப்படி ஒரு எண்ணமே வந்ததில்ல நாங்க நல்ல பிரண்ட்ஸ் அவ்ளோ தான். ரொம்ப நாள் கழிச்சு பாத்த நாள வீட்டுக்கு வா பசங்களையும் வீட்டுக்காரரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு நான் தான் கூட்டிட்டு வந்தேன் என்றேன்.

மறு நாள் அவன் சென்னை சென்று சேர்ந்திருப்பான் ஒரு மரியாதைக்காகவாது நல்லபடியாக போய் சேர்ந்துவிட்டாயா என்று கேட்கலாம் என்று போன் செய்தேன்.

அதே நிலைமை :

அதே நிலைமை :

நீண்ட நேரம் கால் சென்றும் எடுக்கவில்லை சில நேரத்திற்கு பிறகு முயற்சித்தேன் காலை கட் செய்தான். சரி வேலையாய் இருப்பான் போல என்று விட்டுவிட்டேன். ஒரு மணி நேரம் கழித்து அவனிடமிருந்து போன் வந்தது. ம்ம்... வந்துட்டேன் ஆபிஸ் கிளம்பிட்டு இருக்கேன் என்றான். டிரஸ் புடிச்சுப் போச்சா சேலை எப்டியிருக்கு சொன்னாங்க என்று கேட்டேன்...

ஸ்ஸப்பா அதனால தான் காலைல இருந்து டென்சன் என்றான்.

என்னாச்சு ? :

என்னாச்சு ? :

ஐயையோ என்னாச்சு அவங்களுக்கு புடிக்கலையா என்றேன். அத ஏன் கேக்குற சேலை எடுத்து கொடுத்தது யாரு மதியமே கிளம்பிடுவேன்னு சொன்னீங்க நைட் வரைக்கும் என்ன பண்ணிங்கன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டா பேச்சு வாக்குல உன்னைய பாத்தேன் உன் வீட்டுக்கு வந்தேன்னு சொல்லிட்டேன் அதையே புடிச்சுட்டா அப்போ அவள பாக்குறதுக்காகத்தான் அங்க போனீங்களா? என்னைய ஏமாத்திட்டிங்கனு ஒரே ஒப்பாரி.... அவ அம்மா வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணிட்டா

வருசையா போன் மேல் போன் பண்ணிட்டு இருக்காங்க நாளைக்கு வேற கிளம்பி வராங்களாம் என்றான். ஆமா நான் வந்தது கூட உன் ஹஸ்பண்டுக்கு புடிக்கல தான என்ன சொன்னாரு என்றான்... அத ஏன் கேக்குற என்று நடந்ததை விவரித்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women Cant Continue Her Friendship After Marriage

Women Cant Continue Her Friendship After Marriage
Story first published: Monday, April 16, 2018, 11:59 [IST]
Desktop Bottom Promotion