For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இனி காப்பாத்துங்கன்னு யாருகிட்ட போய் நிப்பேன் - My story #212

  |

  விளையாட்டாய் நாம் செய்கிற விஷயம் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதற்கு உதாரணமாய் எனது கதையைச் சொல்லலாம். இந்த காதல் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நுழைந்து எத்தனையோ மாற்றங்களை கொடுக்கிறது. ஆனால் எனக்கு என் வாழ்க்கையையே திருப்பி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

  உயிருக்கு உயிராய் காதலித்து நீயில்லாமல் நானில்லை என்றெல்லாம் வசனம் பேசி பெற்றோரை எதிர்த்து எல்லாம் காதலித்து கரம்பிடிக்கவில்லை. என் கதையை கேட்பவர்கள் எல்லாரும், எப்டி.... உங்களால முடிஞ்சது என்று ஆச்சரியப்பட்டு கேட்டுப் போவார்கள்.

  இது தான் வாழ்க்கை,கற்பனையில் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் துளியளவும் சம்மந்தமில்லை என்று உணர்ந்து கொண்டிருக்கிறேன், இப்போது உணர்ந்து என்ன பிரயோஜனம் எல்லாம் முடிந்து விட்டதே, மற்ற எந்த விஷயத்தையும் விட இந்த திருமணம் விஷயத்தில் நாம் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் நம்முடைய வாழ்க்கையையே முற்றிலுமாக திசை திருப்பிவிடுகிறது

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   அத்தை மகன் :

  அத்தை மகன் :

  ராஜா என்னுடைய அத்தை மகன் தான், சதா சர்வ காலமும் எங்கள் வீட்டில் தான் கிடப்பான், பள்ளிக்கு கூட அதிகமாக சென்றதில்லை, அப்பாவின் அரிசி மண்டியில் எதாவது வேலை பார்ப்பான் இல்லையென்றால் வீட்டுத் தோட்டத்தில் எதையாவது தட்டிக் கொண்டு கிடப்பான்.

  என்னையும் என் தங்கையையும் வம்பிழுத்து விளையாடுவது தான் அவனது பொழுது போக்கே.... தங்கை அழ வைக்கிறான் என்பதற்காக பாட்டியிடம் செமத்தியாக திட்டும் வாங்குவான்.

  கடன் :

  கடன் :

  திடீரென்று ஒரு நாள் அத்தை குடும்பத்தினர் ஊரை விட்டு கிளம்ப இவனும் சென்றுவிட்டான், அதன் பிறகு பல வருடங்கள் ஊர் பக்கமே வரவில்லை. நாங்களும் அவனை மறந்து போனோம்.

  வெகு நாட்களுக்கு பிறகு தான் அவர்கள் கடன் பிரச்சனையால் ஊரை விட்டு ஓடியது தெரிய வந்தது

  சண்டை :

  சண்டை :

  கடன்காரர்கள் எங்கள் வீட்டிற்கு தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள், உன் தங்கையும் மாப்பிள்ளையும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியும், ஒழுங்கா சொல்லு இல்லன்னா அவங்க வாங்கின பணத்த நீ கொடு என்று அப்பாவிடம் சண்டையிட ஆரம்பிக்க.... விஷயம் போலீஸ் வரை சென்று திரும்பியிருக்கிறது.

  கோர்ட்டில் வழக்கு பதிவு செய்த பிறகு மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தார் அப்பா அதன் பிறகு ஓரளவுக்கு கடன்காரர்களின் தொல்லை குறைந்தது, ஆனாலும் பொதுஇடத்தில் ஜாடையாக பேசுவது, முக்கியஸ்தர்கள் வரிசையில் அப்பாவை தவிர்ப்பது போன்ற சில வேலைகள் செய்ய அப்பா அத்தை மீதும் மாமா மீதும் பயங்கர கோபத்தில் இருந்தார். அரிசி வியாபாரம் முழுவதுமாக படுத்துக் கொண்டது.

  குடும்பமே :

  குடும்பமே :

  ஒன்றுமே செய்யாத போது வெறும் உறவின் பெயரை சொல்லி நம் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாள் என்று அத்தையின் குடும்பத்தின் மீது எங்கள் குடும்பம் பயங்கர கோபத்தில் இருந்தோம், போதாதற்கு வியாபாரமும் படுத்துக் கொள்ள அப்பா மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். வீட்டிற்கு வருவதையும் எங்களிடம் பேசுவதையும் தவிர்த்தார். குடிக்க ஆரம்பித்தார்.

  அம்மா கெஞ்சல் :

  அம்மா கெஞ்சல் :

  ரெண்டு பொம்பளப் புள்ள இருக்கு.... வியாபாரம் நஷ்டமடஞ்சிட்டா அப்டியே உட்கார்ந்திடரதா?வேறு வியாபாரம் பாக்கலாம்.... வீட்ட அடமானம் வச்சு புதுசா ஆரம்பிக்கலாம் நானும் வேலைக்கு போறேன் என்று அம்மா எதேதோ சொல்லி அப்பாவை சமாதானப்படுத்த முயன்றார்.

  ஆனால் அப்பா.... அவள(அத்தையை) கொன்னா என் ஆத்திரம் அடங்கும். என் முன்னாடி பேசக்கூட பயந்தவங்க எல்லாம் சட்டைய புடிச்சு கேட்டுட்டு போறான். எல்லாம் அவளால தான்.

  கல்லூரி :

  கல்லூரி :

  வசதி வாய்ப்புகள் எல்லாம் வெகுவாக குறைந்தது, பக்கத்தூரில் இருந்த அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன், தங்கை அதே பகுதியில் இருந்த பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

  அங்கே தான் மீண்டும் ராஜாவை சந்தித்தேன். முதலில் அடையாளம் தெரியவில்லை கோவையில் வேலை செய்வதாகச் சொன்னான். கல்லூரிக்கு ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக வந்திருக்கிறேன், ஊரில் வந்து எல்லாரையும் சந்திக்கிறேன் என்றான்.

  ஆரம்பம் :

  ஆரம்பம் :

  ஐயோ வந்திடாத.... சொல்ல கஷ்டமா தான் இருக்கு அப்பா உங்க மேல ரொம்ப கோவமா இருக்காரு என்று ஆரம்பித்து நடந்த மொத்தத்தையும், இன்று நாங்கள் வாழுகின்ற சூழலையும் சொன்னேன், மிகவும் வருத்தப்பட்டான்.

  சத்தியமாய் இப்படியொரு நிலைமை வருமென்று நினைக்கவில்லை, முழுக்க முழுக்க அப்பாவின் தவறு இது, அம்மாவிற்கு கூட முழு விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று பேச ஆரம்பிக்க எங்களால தான உங்களுக்கு கஷ்டம் என்று என் மீது அவனுக்கு கரிசனம்.

  பட்டணத்திலிருந்து ஒருவன் தினமும் பேசுகிறான், காத்திருக்கிறான் என்றால் சொல்லவா வேண்டும்..... காதலென்று தூபமேற்றினார்கள்

  மன்னிப்பு :

  மன்னிப்பு :

  ரொம்ப சங்கடமா இருக்கு, நான் வீட்டுக்கு வந்து உங்க அப்பாட்ட பேசுறேன், மன்னிப்பு கேக்குறேன். இப்படி ஆகும்னு நாங்க கொஞ்சம் கூட நினைக்கவேயில்ல.... என்ன ரெண்டு அடி அடிப்பாரா வாங்கிக்கிறேன் என்ன இருந்தாலும் என்னைய ரொம்ப பாசமா பாத்துகிட்ட மனுஷன்....

  அவருக்கு எங்கம்மா அப்பா மேல தான் கோவம் இருக்கும், என் மேல இருக்காது அதுவும் இவ்ளோ வருஷம் கழிச்சு போறேன் அதனால சந்தோசப்படுவாரு என்றான்.

  அப்பா :

  அப்பா :

  அவன் சொல்வதும் ஓரளவுக்கு சரியென்றே பட்டது.... அப்பா அத்தையைப் பற்றியும் மாமாவைப் பற்றியும் தான் அடிக்கடி புலம்புவாரே தவிர இவனைப் பற்றி அதிகம் பேசமாட்டார்...... சரியென்று ஒரு ஞாயிற்று கிழமை வரச் சொன்னேன்.

  எனக்கும் தங்கைக்கும் மட்டும் ராஜா வீட்டிற்கு வருவது தெரியும், பதினோறு மணியிருக்கும், அப்பா கறி வாங்க கிளம்பிக் கொண்டிருந்தார், அப்போது அண்ணே.... உங்களத்தேடி வெளியூர்ல இருந்து ஒரு தம்பி வந்திருக்கு என்று குரல்.... அப்பா சந்தோஷப்படுவார் அல்லது ஆச்சரியத்துடன் என்னைப் பார்க்க யார் வந்திருப்பார்கள் என்று பார்ப்பார் என்று பார்த்தால்.....

  யார் நீ :

  யார் நீ :

  குப்பென்று வியர்க்கிறது, நெஞ்சையும் சுவற்றையும் பிடித்து கலவர முகத்துடன் அம்மாவை பார்க்கிறார் நாங்கள் பதட்டப்பட்டு என்னாச்சுப்பா என்று ஓடினோம்.... அவரை பிடித்து உட்கார வைத்து ஃபேன் போட்டுவிட்டேன்.

  இருபது வருசம் ஆச்சு..... இன்னும் கடன்காரய்ங்க ஒழிஞ்ச பாடில்ல இருக்குற கொஞ்ச நஞ்ச உசுரையும் உருவியெடுக்க போறான் என்று புலம்ப ஆரம்பித்தார்.... ஐயோ.. உங்களுக்கு வேற வேலையே இல்ல யாரு நம்ம வீட்டுக்கு வந்தா கூட கடன் கொடுத்தவன் தான் வருவானா சும்மா இருங்க ஏய் அப்பாக்கு காபி போட்டு கொடு.... இருங்க நான் போய் பாத்துட்டு வரேன் என்று அம்மா வாசலுக்கு போனார்.

  நான் ராஜா.... நியாபகம் இருக்கா என்று நெருங்கி வந்தவனை கையை நிறுத்தி நிற்கச் சொன்னார்.

  யார் நீ....

  ராஜா என்று தயங்கி மென்று முழுங்கினான்.

  எந்த ராஜா எங்களுக்கு எந்த ராஜாவையும் தெரியாது என்றார்.

   மன்னித்துவிடுங்கள் :

  மன்னித்துவிடுங்கள் :

  உங்க கோபம் புரியுது.... இப்டி நடக்கும்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பாக்கல அமுதா விஷயம் சொன்ன பிறகு தான் எனக்கு தெரியும் அதான் உங்கள பாக்க வந்தேன்....

  அமுதாவ எங்க பாத்த நீ? இன்னும் எங்க குடும்பத்த நாசமாக்க விடமாட்டீங்களா..... உங்க அம்மாவும் அப்பாவும் சேர்ந்த என் வாழ்க்கையில மண்ணள்ளி போட்டீங்க இப்போ நீ என் பொண்ணு வாழ்க்கைய கெடுக்க பாக்குறியா.... மரியாதையா போய்டு இல்ல நடக்குறதே வேற உள்ள அந்த மனுஷன் என்னடான்னா கதவு தட்டுற சத்தம் கேட்டாளே நெஞ்ச புடிச்சுட்டு கடன்காரன் வந்துட்டான்னு பயந்து சாவுறாரு. கண்ணுல படாம ஓடிப் போய்டு

  அவன் எவ்வளவோ கெஞ்சியும் அம்மா அவனை வீட்டிற்குள் விடவேயில்லை.

   இத மாத்த முடியும் :

  இத மாத்த முடியும் :

  மாலை வரை காத்திருந்து.... சென்றுவிட்டான், மறுநாள் கல்லூரியில் சந்தித்துக் கொண்டோம்.இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. நீயாவது என்னைய மன்னிப்பியா, தப்பு தான் நாங்க எங்கள காப்பாத்திக்கிறத நினச்சு ஓடினோம் ஆனா அது உங்கள இந்த அளவுக்கு பாதிக்கும்னு சத்தியமா தெரியாது.

  நேர்ல பாத்தப்பறம் தான் நிலைமை எவ்ளோ சீரியஸ்னு புரியுது.... நம்ம குடும்பம் பழையபடி ஒண்ணு சேரணும், அதுக்கு ஒரு உதவி செய்றியா....

   கல்யாணம் பண்ணிக்கலாம் :

  கல்யாணம் பண்ணிக்கலாம் :

  அவன் சொல்வதும் சரியென்றே பட்டது.... ஆமா, நீ சொல்றதும் கரெக்ட்டு தான். இத மாத்த நம்ம எதாவது பண்ணனும் சொல்லு நான் பண்றேன் என்றேன்....

  நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?

  திடீர்னு இப்டி கேக்குறானேன்னு தப்பா எடுத்துக்காத, நம்மளால நம் குடும்பம் ஒண்ணு சேரும், செஞ்ச தப்புக்கு பிராயாசித்தமா உன்னைய நான் நல்லா வச்சு பாத்துப்பேன், அம்மாக்கும் உன்னைய ரொம்ப பிடிக்கும். கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா எல்லாம் ஒத்துப்பாங்க என்றான். இரண்டு நாட்கள் யோசித்து சம்மதித்தே. நண்பர்கள் உதவியுடன் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டோம். தங்கைக்கு மட்டும் விஷயம் சொல்லியிருந்தேன்.

  அப்பா அதிரடி :

  அப்பா அதிரடி :

  விடிந்ததும் விஷயம் கசிய ஆரம்பித்தது..... அப்பா ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார் தங்கைக்கு பயங்கர அடி கிடைத்திருக்கிறது, காலேஜ்ல இருந்து ட்ரைனிங் போயிருக்கா மூணு மாசம் சென்னையில தங்கி வேலை பாத்துட்டே படிக்கணுமாம் என்று அம்மா சொல்லி வைத்தாளும், அதே கல்லூரியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்கள் மூலம் விஷயம் கசிய ஆரம்பித்திருந்தது.

  அப்பா என்னை வெறி கொண்டு தேட ஆரம்பித்தார்..... பொண்ண கண்டுபிடிச்சு கூட்டிட்டு வருவேன்னு கனவு கண்டுட்டு இருக்காத பாக்குற இடத்துலயே கழுத்த நெறிச்சு கொன்னு போட்ருவேன்.

   கொடுமை :

  கொடுமை :

  அத்தைக்கு ராஜா என்னை திருமணம் செய்து கொண்டு அழைத்து வந்தது துளியும் விருப்பமில்லை.... வரதட்சணையாக 100பவுன் போட்டு என் பையனுக்கு பொண்ணு கொடுக்க தயாரா இருந்தாங்க ஆனா பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாத உன்னைய போய் கூட்டிட்டு வந்துட்டான் என்று முகத்திற்கு நேராகவே சொல்ல அதிர்ந்தேன்....

  உங்களால எங்க குடும்பமே அங்க நிர்மூலமாகி கிடக்கு நீங்க என்னடான்னா இப்டி பேசுறீங்களே..... என்றேன் சிறிதும் கண்டு கொள்ளவில்லை. சம்பளமில்லாத வேலைக்காரியாக நடத்தப்பட்டேன்.

  அம்மா சொல்றத கேளு, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று ஆரம்பத்தில் சொன்ன ராஜா குழந்தை பிறந்த பிறகு சுத்தமாக கண்டு கொள்வதேயில்லை.

  இரண்டு வருடங்கள் :

  இரண்டு வருடங்கள் :

  கிட்டத்தட்ட நான் திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன, இங்கே எதையோ நம்பி வந்து பல அவமானங்களையும் கொடுமைகளையும் சந்தித்து வந்தேன், என்னைப் போலவே என் குழந்தையின் வாழ்க்கையும் இப்படியாகிவிட்டதே என்று நினைத்து வருத்தப்பட்டேன்.

  குழந்தை பிறந்திருப்பதை ராஜா மூலம் அறிந்து கொண்ட தங்கை அப்பாவிடம் சொல்லியிருக்கிறாள், அம்மா பேசினார்..... எதேதோ ஆசை வார்த்தைகள் உன்னப் பாக்காம இருக்க முடியல போயும் போயும் அவன கல்யாணம் பண்ணிக்கு உனக்கெப்பிடி மனசு வந்துச்சு ஒரு வாட்டி கூட எங்கள பாக்கணும்னு தோணலயா

  திருமணம் செய்த சூழலையும், இங்கே நடக்கிற கொடுமைகளையும் சொன்னேன், உடனே கிளம்பி வா என்றார், இனி எல்லாம் மாறியது குடும்பம் என்னை ஏற்றுக் கொள்ளும் என்று சந்தோஷத்துடன் அங்கே சென்றேன். போய்ட்டு வரப்போ வெறுங்கைய வீசிட்டு வரக்கூடாது என்ன சொல்றது புரிஞ்சதா என்று அனுப்பி வைத்தார் அத்தை.... ஆனால் அங்கே நடந்ததோ வேறு.

  அத்தை மீதிருந்த கோபத்தை என் மீதும் குழந்தை மீதும் காட்ட அம்மாவும் அப்பாவும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Lovers Separated Because Of Family Loan

  Lovers Separated Because Of Family Loan
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more