For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய் மாமனை கட்டிக் கொண்டு, நான் அனுபவித்து வரும் அவதிகள் - My Story #133

தாய் மாமனை கட்டிக் கொண்டு, நான் அனுபவித்து வரும் அவதிகள் - My Story #133

|

எங்கள் குடும்பத்தில், என் தலைமுறையை சேர்ந்த பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள். என் சகோதரர்கள், சகோதரிகள் என அனைவரும் நன்கு படித்து, நல்ல இடத்தில் வேலை செய்து வருகிறார்கள். நானும் நல்ல வேலையில் தான் இருக்கிறேன். ஆனால், அனைவருக்கும் அமைந்தது போல ஒரு நல்ல வாழ்க்கை எனக்கு அமையவில்லை.

என் குடும்பத்திலேயே நான் தான் மூத்த மகள். சிறு வயது முதலே எல்லா விஷயங்களிலும் என்னை ஒரு முன் உதாரணமாக கூறுவார்கள். 90-களில் எங்கள் ஊரில் கல்லூரிக்கு சென்ற சில பெண்களில் நானும் ஒருத்தி. ஆகையால், "இதோ, பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாதிரி நீயும் நல்லா படிச்சு காலேஜ் எல்லாம் போகணும்.... " என என்னைச் சுட்டிக்காட்டி அவரவர் மகள்களுக்கு அறிவுரைக் கூறுவார்கள்.

ஆனால், இன்றோ என் வாழ்க்கை முற்றிலும் திசை மாறி பயணித்துக் கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் காரணம் எனக்கும், எனது தாய் மாமனுக்கும் நடந்த திருமணம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொந்தம்

சொந்தம்

இப்போது இப்படி சொந்தம், கிந்தம் என கூறிக் கொண்டு யாரும் பெரிதாக நெருங்கிய உறவுகளுக்குள் பெண் எடுப்பதில்லை. பிறக்கும் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி இப்போது இந்த சொந்தத்தில் திருமணம் செய்யும் வழக்கம் முடிந்தவரை தவிர்க்கப் படுகிறது.

ஆனால், எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. என்னைவிட 12 மூத்தவர் எனது தாய் மாமன். என் அம்மாவுடன் பிறந்தவர். என் அம்மாவுக்கும், என் தாய் மாமாவுக்குமே வயது வித்தியாசம் அதிகம். தன் தம்பியை தனது குழந்தையை போல பார்த்துப் பார்த்து வளர்த்தார், எனவே என்னையே திருமணம் செய்து வைக்க முயற்ச்சித்தார் என்னுடைய அம்மா.

வேலைக்கு ஆகாதவர்!

வேலைக்கு ஆகாதவர்!

என் தாய் மாமாவும் படித்தவர் தான். ஆனால், படித்த வேலைக்கு அவர் செல்லவில்லை. எந்த வேலைக்கு போனாலும் அதிகப் பட்சமாக நான்கு மாதங்களை கூட தாண்டமாட்டார். சரியான கோபக்காரர். அவருக்கு பிடித்தது எல்லாம் சினிமா தான். எந்த படம் வெளியானாலும் உடனே சென்று பார்த்து வந்துவிடுவார். இதுப்போல, காரணமே இல்லாமல் அவர் விடுப்பு எடுக்கும் காரணத்தாலும் சில முறை வேலை பறிபோனது.

எல்லாம் சரி ஆயிடும்...

எல்லாம் சரி ஆயிடும்...

சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் சினிமாவுக்கும், குடி, சிகரெட்டுக்குமே செலவழித்துவிடுவார் என் தாய் மாமா. திருமணமானால் திருந்திவிடுவார். குழந்தைக் குட்டி என வந்துவிட்டால் இப்படி ஊதாரித்தனமாக வெட்டியாக ஊரை சுற்றமாட்டான் என கூறி, அவர் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என கருதி, என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் எனது குடும்பத்தார்.

குழந்தை?

குழந்தை?

என் கணவரான போதும் கூட, அவரை மாமா என்றே அழைத்து வந்தேன். திருமணமான பிறகு தான் அவரது உடலில் என்னென்னப் பிரச்சனை இருக்கிறது என அவருக்கே தெரிய ஆரம்பித்தது. திருமணமாகி ஓராண்டு காலமாக குழந்தை இல்லை என்பதால் அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். நாங்கள் எத்தனையோ முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.

நான்காண்டுகள் ஆகியும் குழந்தைப் பிறக்கவில்லை. என்னிடம் தான் ஏதோ கோளாறோ என எண்ணி, மருத்துவரை அணுக முற்பட்டோம்.

ஆல்ரைட்!

ஆல்ரைட்!

என்னைப் பரிசோதனை செய்த டாக்டர் என் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறிவிட்டார். பிறகு, என் தாய் மாமாவை பற்றி சில கேள்விகள் கேட்டார். அவரது உணவுப் பழக்கம், என வேலை செய்கிறார்? போதைப் பழக்கம் இருக்கிறதா? என பலவன என்னிடம் இருந்து கேட்டறிந்தார்.

கடைசியாக, முடிந்தால் உங்கள் கணவரை அழைத்து வாருங்கள். அவரையும் பரிசோதனை செய்துப் பார்த்துவிடலாம் என கூறினார் டாக்டர்.

பளார்!

பளார்!

நான் வீடு திரும்பியதும், தாய் மாமாவிடம் டாக்டர் கூறியது குறித்து மொத்தமாக கூறினேன். கூறி முடித்த மறுநொடி கன்னத்தில் பளார் என அடி விழுந்தது. எவனோ ஒருத்தன் சொல்றான்னு, என்ன ஆம்பளை இல்லைன்னு சொல்றியாடி... என அதட்டி மீண்டும் , மீண்டும் அடித்தார்.

நான் அப்படியாக கூறவில்லை, குடிப் பழக்கம் இருப்பதால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். மருத்துவம் பார்த்தல் சரியாகிவிடும் என மருத்துவர் கூறினார். அவ்வளவு தான் என அழுதுக் கொண்டே கூறினேன்.

கோபம்!

கோபம்!

அவருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. உடனே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இரவு நேரதாமதமாக வந்தார். போதையின் உச்சியில் இருந்தார். முற்றிலும் தன்னிலை இழந்து காணப்பட்டார். அவரை படுக்க வைத்துவிட்டு, நான் உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை எழுந்ததும், சரி வா மருத்துவரை போய் பார்க்கலாம் என்றார். ஒருபுறம் திருந்திவிட்டாரோ என்ற எண்ணம், மறுபுறம், மருத்துவரை அடிக்க தான் வருகிறாரோ என்ற அச்சம் என்னுள் எழுந்தது.

ட்ரீட்மெண்ட்!

ட்ரீட்மெண்ட்!

மருத்துவரை சென்று பார்த்தோம். பரிசோதனை செய்ததில், அதிகளவில் மது மற்றும் புகை பழக்கம் இருந்த காரணத்தால் விந்தணுக்களின் வலிமை, ஆரோக்கியம் குறைந்துக் காணப்படுகிறது. ஆகையால் தான் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என கூறினார். அதற்கு சில ட்ரீட்மெண்ட் இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டால் தீர்வுக் கண்டுவிடலாம் என்றார் டாக்டர்.

போதைக்கு அடிமை!

போதைக்கு அடிமை!

ஒருசில மருத்துவ முறைகள் மாற்றி, மாற்றி அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ட்ரீட்மெண்ட் தோல்வியடையும் போதும், என் தாய் மாமா விரக்தியின் உச்சிக்கே சென்றார். ஒரு கட்டத்தில், இதற்கு மேல் எதுவும் முயற்சி செய்ய முடியாது என்ற நிலை உண்டானது.

அதுவரை நினைக்கும் போது குடித்துக் கொண்டிருந்தவர், இந்த பிரச்சனைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற அளவுக்கு குடிக்கத் துவங்கினார். போதைக்கு அடிமையானார்.

அடி, உதை!

அடி, உதை!

அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. என் தாய் மாமாவிடம் இருந்த ஒரே கெட்டப் பழக்கம் இந்த குடி, புகை தான். மற்றப்படி மிகவும் நல்லவர். குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உதவி செய்வார். ஆனால், இந்த ஆண்மை குறைபாடு அவரை மிகவும் மோசமான நிலைக்கு அழைத்து சென்றது.

ஒவ்வொரு முறையும், குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்கும் போதும், எங்களிடம் யாராவது விசேசமா? என கேள்விக் கேட்கும் போதும் அவர் மிருகமாக மாறிவிடுவார். அதை நான் என் கண்ணால் பார்த்துள்ளேன்.

வேண்டாம்!

வேண்டாம்!

கொஞ்சம், கொஞ்சமாக மிருகமாக அவர் மாறி வருவதை கண்டு என்னால் சும்மா இருக்க முடியாவில்லை.

"மாமா, குழந்தை இல்லாட்டி என்ன, நீங்க இருக்கீங்க அது போதும். நமக்கு நாம போதும். இருக்குற வாழ்க்கைய நிம்மதிய வாழலாம். ஏன் இப்படி ரொம்ப குடிக்க ஆரம்பிச்சுட்டீங்க...? வேண்டாம்., இந்த விஷயத்துக்காக நீங்க அதிகமா குடிக்க வேண்டாம். உடம்புக்கு ஏதாவது பிரச்சனை வந்திடப் போகுது..." என்றேன்

"அதுதான், எல்லாம் போச்சே...இனிமேல் போக உசுரு மட்டும் தான் இருக்கு. அதுவும் போகட்டும்.." என மனமுடைந்து கூறினார்.

என் கண்களில் நீர் நிற்காமல் வந்துக் கொண்டே இருந்தது. அவரை அணைத்து அழ துவங்கினேன். அவரும் அழுதுவிட்டார்.

கொஞ்ச நாட்கள்...

கொஞ்ச நாட்கள்...

அன்றில் இருந்து கொஞ்ச நாட்கள் அவர் நன்றாக தான் இருந்தார். ஆனால், மீண்டும் அவருக்கு என்ன ஆனது, யார் என்ன கேட்டார்கள் என தெரியவில்லை. தினமும் குடிக்க துவங்கினார். ஆனால், அதற்கான காரணம் என்ன என்று சொல்லவே மாட்டார்.

ஒவ்வொரு நாளும் என் இரவுகள் மிக மோசமாக மாறின. என்ன நடந்தாலும், அதற்கு காரணம் நான்தான் என சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். சில சமயங்களில் அடிக்கவும் செய்தார்.

இப்படி ஒரு நிலையில் என் மாமாவை நான் கண்டதே இல்லை. முற்றிலும் வேறு நபராக மாற துவங்கினார்.

20 வருடங்கள்!

20 வருடங்கள்!

எங்களுக்கு திருமணமாகி இருபது வருடங்கள் ஆகிறது. எனக்கு வயது 41. என் மாமாவுக்கு வயது 53.

ஒரு வருடத்திற்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது தான் அவரது உடலில் என்னென்ன பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கியுள்ளது என தெரியவந்தது. புகைக்கவோ, குடிக்கவோ கூடாது. மீறினால் மரணம் தான் என டாக்டர்கள் எச்சரித்தனர்.

இருந்த சேமிப்பு பணம் அனைத்தும் மருத்துவ செலவுக்கு சரியாய் போனது.

என்ன செய்வது?

என்ன செய்வது?

மூன்று மாதம் திருந்தி இருந்தார். ஆனால், அவரால் குடி இல்லாமல் இருக்க முடியவில்லை. நடுக்கம் வந்துவிடும். குடித்தாலும் நடுக்கம் வரும். சில சமயம் நடக்க முடியாமல் தடுமாறுவார். சில சமயம் நான் வேலை சென்று திரும்புவதற்குள் புகைத்து வந்தார். இதை நான் கண்டறிந்தேன், கண்டித்தேன். மனுஷனுக்கு கோபம் வந்துவிட்டது. கொஞ்சம் நடக்க தெம்பு வந்ததும். மீண்டும் குடிக்க துவங்கினார்.

டாக்டர் சொல்லியது போலவே மீண்டும் உடல்நலம் சீர்கெட்டு போனது.

கடன்!

கடன்!

அதுவரை எங்களிடம் இல்லாமல் இருந்த கடனும் வந்தது. மீண்டும் ஒருசில இலட்சங்கள் மருத்துவ செலவுக்காக தேவைப்பட்டது. சேமிப்பும் இல்லை, வீட்டை விற்கவும் முடியாது. எனவே, கடனாக பணம் வாங்கினேன். இனிமேல் குடிக்க வேண்டாம் என அவரிடம் காலில் விழாத குறையாக அழுது மன்றாடினேன்.

சரி, சரி என தலையை மட்டும் ஆட்டினார்.

வேலை!

வேலை!

ஆறேழு மாதங்களுக்கு பிறகு இப்போது தான் மீண்டும் வேலைக்கு சென்று வருகிறார். ஒரு குழந்தையைப் போல அவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அவரைவிட்டு நான் விலகுவதே இல்லை. தனியாக எங்கேயும் செல்வதும் இல்லை. அவர் தான் என்னை அலுவலகத்தில் விட்டு, கூட்டி செல்வார். வேலைவிட்டு வீட்டுக்கு போகும் போதே, வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருளும் வாங்கி சென்றுவிடுவேன்.

எத்தனை நாட்கள்...

எத்தனை நாட்கள்...

வீட்டுக்கு சென்ற பிறகு, கோவிலுக்கு, உறவினர் வீடு என எங்கே சென்றாலும் உடன் அவரையும் அழைத்து சென்றுவிடுவேன். மீண்டும் அவர் குடித்துவிட்டால்... அவரை இழக்க நேரிடும் என்ற அச்சம் என்னுள் அதிகமாக இருக்கிறது.

வயது 53 என்றாலும், பார்பதற்கு 70 வயதை வதை எட்டியது போன்ற தோற்றத்திற்கு மாறிவிட்டார். ஓரிரு மாதமாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I was Forced to Get Marry To My Cousin - Real Life Story!

I was Forced to Get Marry To My Cousin - Real Life Story!
Story first published: Monday, January 8, 2018, 13:28 [IST]
Desktop Bottom Promotion