காதலை எப்படி கொண்டாடுகிறோம்? அன்றும்... இன்றும்.. ஒரு பார்வை!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

நரகமென நகரும் வார நாட்களை இயந்திரத்தனமாய் கடந்து, வெள்ளிக்கிழமை இரவு சூடாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் வார இறுதி நாட்களில் தான் கணினியின் திரையை விட்டு விலகி வெளியே பார்த்து சிந்திக்க முடிகிறது. ஊரிலிருக்கும் அம்மாவுக்கு போன் செய்ய வேண்டும். பெரிய அக்கா பாப்பாவை பள்ளியில் சேர்த்துவிட்டதாக வாட்ஸப் சொன்னது, அவளுக்கு போன் செய்ய வேண்டும். இது எல்லாவற்றையும் விட கடல் கடந்த கற்பனையில் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த என் நேசத்தின் உச்சம், வருங்கால வாழ்க்கை இணை, இந்நாள் மட்டுமல்ல எந்நாளுக்குமான காதலனிடம் பேச வேண்டும். போன் செய்வதற்கான வரிசையில் நின்றிருந்த பலரை விலகிவிட்டு முன்னால் வந்து நின்றுவிட்ட அவனுக்கே முதலில் போன் செய்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாலாட்டும் பாடல் :

தாலாட்டும் பாடல் :

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா என்று ஒரு குரல் பாடி முடித்தது. எனக்கான குரல் கேட்கவில்லை. சரி பிடித்த பாடல் தானே இன்னொரு முறை கேட்கலாமென மீண்டுமொரு கால் செய்தேன். நடுவிலேயே கட் செய்யப்பட்டுவிட்டது.

வாட்ஸப்பில் ...

Busy

Nice. Where

Ofc

Fyn. Share ur location

?

?

நீண்ட நேரம் கழித்து தக்காளிப்பழம் போல சிவந்த ஸ்மைலியை அனுப்பி வைத்தான். பத்திரப்படுத்திக் கொண்டேன். அறையை இருட்டாக்கிக் கொண்டு லேப்டாப்பில் பாடல்களை ஒலிக்கவிட்டு சாய்ந்து கொண்டேன். எதேதோ யோசனை 20 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இடமான எங்கள் மரவூருக்குச் சென்றது.

மரவூர் :

மரவூர் :

மறக்க முடியாமல் அல்ல மறக்கத் தவிர்க்க முடியாமல் சில விஷயங்கள் நம் மனதிற்க்குள்ளேயே பதிந்திருக்கும். அது போலதான் என் மரவூர், இப்போது ஊரைப் பற்றியெல்லாம் எதுவும் சொல்லப்போவதில்லை எல்லா கிராமத்தைப் போலத்தான், மேற்சட்டையில்லாமல் வேட்டியை கட்டிய பெருசுகள், அழுக்கேறிய உருவங்கள்... வறுமைச் சாறு எல்லார் முகத்திலும் வீசும். அம்மா பிறந்து வளர்ந்த ஊர். விடுமுறைகளின் போது அங்கே செல்வோம் அப்போது, மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் எனக்கு, நன்றாக நினைவிருக்கிறது. அமுதா சித்தி, என் வாழ்க்கையில் பார்த்த முதல் காதல் ஜோடி.

கீரைக்கட்டும் போஸ்ட் மேனும் :

கீரைக்கட்டும் போஸ்ட் மேனும் :

அடுப்பு மேடை மட்டும் எட்டினால் நானே சமைத்து சாப்பிடும் அளவிற்கு சமத்துக் குழந்தை நான். ஊருக்குச் சென்றால் எனக்கு மூன்று வேளை ஊட்டிவிட ஆரம்பித்து விடுவாள். பின்னாட்களில் தான் அது என் மீதுள்ள பாசமல்ல, சித்தப்பாவை சைட் அடிக்க என்னை ஊறுகாயாக பயன்படுத்திக் கொண்டது புரிந்தது. எழுதுவாள் மாமா.... மாமா என்று கடிதமுழுக்க எழுதினாலும் அவளது மாமாவை நிறுத்த முடியாது. என்ன செய்ய!! மாமாவுக்கு கேட்டதோ இல்லையோ... அவளது மாமா இருக்கும் பக்கத்து ஊருக்குச் சென்று வரும் போஸ்ட் மேனுக்கு லஞ்சம் கொடுப்பதற்கென்றே உண்டியலில் காசு சேமித்து வைத்திருப்பாள். வாரம் ஒரு முறை அனுப்பும் கடிதத்தில் எத்தனை விஷயங்களை தான் பகிர்ந்து கொள்ள முடியும். யாருக்கும் தெரியாமல் போஸ்ட்மேனுக்கு பறித்து வந்த கீரைக்கட்டுகளை கொடுப்பது போல கடிதத்தை வாங்கிக் கொள்வாள். பார்த்த காட்சிகளை, தன் நாயகன் எப்படி இருந்தான், என்ன செய்து கொண்டிருந்தான் தன்னுடைய கடிதத்தை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்தான் என சித்திக்கு விளாவரியாக கதையளந்து கொண்டிருப்பான். சுபயோக சுபதினத்தில் எல்லாரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டாள்.

சித்தப்பா சித்தியிடம் தன் காதலை சொன்னதும் அதை சித்தி ஏற்றுக் கொண்டதும் கடிதத்தில் தான். தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட்டு பதிலுக்காக காத்திருக்கும் நொடிகளில் எல்லாம் காதலை வளர்த்து இதோ இப்போது அரைநூற்றாண்டு கடக்க போகிறார்கள். தான் பேச நினைப்பதை உடனடியாக பகிர்ந்திட முடியாமல் அதை ஒருவாரம் வைத்திருந்து எழுத்தாய் வடிவமைத்து தரும் கடிதங்கள் அதைவிட பிறர் கைகளுக்கு சென்றிடக்கூடாதே என்று தவிப்புமாய்.... இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த கதை.

ட்ரிங்... ட்ரிங்.... ஹலோ ராங் நம்பர் :

ட்ரிங்... ட்ரிங்.... ஹலோ ராங் நம்பர் :

வீட்டில் அப்போது தான் லாண்ட்லைன் போன் வாங்கியிருந்தோம். தன் வகுப்பு பையன் ஒருவனை காதலித்தாள் அக்கா. சித்தி மாதிரியான கடிதங்கள் எல்லாம் கிடையாது. பேசிடலாம் குரலைக் கேட்கலாம் ஆனால் சுதந்திரம் தான் இல்லை அம்மா எப்போதும் வீட்டில் இருப்பார். போன் அடிக்கும் போதெல்லாம் பகீரென்று இருக்கும். மாலை வேளையில் அம்மா மாவு வாங்க செல்லும் 10 நிமிடம் தான் அந்த போனை அக்கா பயன்படுத்த முடியும்... கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்வாள் எனக்கு வாசலில் வாட்ச் மேன் வேலையும் கொடுத்துவிடுவாள். போன் பேசும் போது மாட்டிக் கொள்ளாமல் இருக்க நான் ராங் நம்பர் என்று சொன்னால் அருகில் யாரேனும் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அதனால் போன் கட் செய்துவிட வேண்டும் என்று ஒப்பந்தம். ஒரு நாள் ஏதோ அவசரமாக வீட்டிற்கு அவன் போன் செய்ய அம்மா எடுத்துவிட்டார் அக்கா திகைத்து பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டாள். நான் எங்கோ கிடந்த ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படிப்பது போல முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்.. அத்துடன் அந்த காதல் முடிவுக்கும் வந்துவிட்டது.

கல்லூரி சென்றதும் கையில் மொபைல் போன் வந்துவிட்டது இப்போது என்னுடைய உதவியெல்லாம் அவளுக்கு தேவைப்படவில்லை. எப்போதாவது புலம்பலுக்கு மட்டும் நான் தேவைப்பட்டேன். காலையில் எழுந்தரிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை எல்லா தகவலும் அங்கே சென்றிடும், மெசேஜ் அனுப்பிக்கொண்டேயிருப்பாள்... வந்து கொண்டேயிருக்கும். சற்று தாமதமானாலும் காதலின் அளவை அளக்க ஆரம்பித்துவிடுவார்கள். போன் எடுக்கவில்லை என்றால் சண்டையிடுவாள். அவர்கள் காதலித்ததை விட இருவரும் சண்டையிட்டது தான் அதிகம். கல்லூரி முடித்த இரண்டு வருடங்களில் அக்காவுக்கு திருமணம் ஆனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன். கல்லூரி முடியும் போதே அவர்களும் பிரிந்துவிட்டிருந்தார்கள். அன்பு செய்ய, காதலை அசை போட, அதை உணர இவர்களுக்கு கால அவகாசம் இல்லாதது தான் பெருஞ்சோகம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகளே இல்லை அதோடு ஒரு சந்தேகத்துடனே காதலித்ததன் விடை கல்லூரி இறுதியாண்டில் தெரிந்துவிட்டது.

சர்க்கரைப்பொங்கல் கொடுத்தா லவ் ஒ.கே ஆகிடும் :

சர்க்கரைப்பொங்கல் கொடுத்தா லவ் ஒ.கே ஆகிடும் :

இரவு உணவுக்குப் பிறகு அக்காவும் நானும் அம்மாவின் திருமணக்கதையை நோண்ட ஆரம்பித்தோம்.... நானும் லவ் பண்ணியிருக்கேன் என்று சொல்ல நாங்கள் இருவரும் த்ரில்லர் படம் ரேஞ்ச்சுக்கு கற்பனை செய்து தொடர்ந்து கேட்க ஆயுத்தமானோம். பொங்கல் விழாவின் போது கிண்ணத்தில் சர்க்கரைப் பொங்கலைக் கொடுக்க அத்தை அப்பாவை அனுப்பியிருக்கிறார். அப்பா சர்க்கரை பொங்கலோடு சேர்த்து தன் விருப்பத்தையும் சேர்த்தே கொடுத்தாராம்! அம்மாவுக்கு பயத்தில் அழுகையே வந்துவிட்டிருக்கிறது... பிறகு ஒரு வாரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை, இரண்டு மூன்று முறை அப்பா பேச முயற்சி செய்ய அம்மா அசைந்து கொடுக்கவில்லையாம்... வெறுத்துப்போன அப்பா தாத்தாவிடம் பெண் கேட்டு உடனடியாக ஒ.கே., வாங்கியதோடு மூன்றே மாதங்களில் திருமணமும் முடிந்து விட்டது.

என்னம்மா இதெல்லாம் ஒரு லவ்வாம்மா என்று இருவரும் கோரஸாக பாடினோம்.... உன் அத்தை பையன பாக்க இவ்ளோ சீன் எல்லாம் ஆகாது, என்று மிரட்ட பாக்குற பையன் மேல தான் லவ் வரும்... லவ் பண்ண என்ன வெளியவா ஆள் தேட முடியும் என்று வாயடைத்துவிட்டால். அம்மாவுக்கும் காதலில் விருப்பம் இருந்தது. ஆனால் கூடவே பயமும் இருந்தது. பயத்தை ஜெயிக்க அவளுக்கு திராணி இருந்திருக்கவில்லை தன் வயதொத்த ஆடவரை பார்க்கவே பயப்படும், வெட்கப்படும், தன் காதலை தனக்குள்ளேயே வைத்து அதை மட்கி சாகடித்திடும் லட்சக்கணக்கானோரில் அம்மாவும் ஒருத்தி.

புலனாய்வு புலி :

புலனாய்வு புலி :

கல்லூரி முடிக்கும் போதே இரண்டு ப்ரேக் அப் ஆகிவிட்டிருந்தது. முதல் ப்ரேக் அப் என் தோழியின் பேஸ்புக் படத்திற்கு ஹார்ட் ஏன் போட்டாய் என்று ஆரம்பித்தது. அப்படியே சண்டையாக பரஸ்பரம் பிரிவதாய் அறிவித்துக் கொண்டோம், இரண்டாவது காதலில் எதோ ஒரு பொய் சொல்ல அதை நான் கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் மறுத்துக் கொண்டிருந்தான் பேஸ்புக்கில் செக் இன் செய்த நேரம், வாட்ஸ் அப்பில் தெரியும் லாஸ்ட் சீன் என புலனாய்வு புலியாய்.." என்னிடம் ஏன் மறைக்கிற அப்போ நான் முக்கியமில்லையா?" என்று அழுது கேட்க பதில் சொல்ல முடியாமல் போனை கட் செய்தவன் இன்று வரை எடுப்பதில்லை... நானும் போன் செய்வதில்லை.

உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதை விட "நான் இருக்கிறேன்! இங்கே தான் இருக்கேன்" என்று அட்டெண்ட்ஸ் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். தொழில் நுட்பங்கள் பெருக பெருக காதலர்களுக்குள் உண்டான நெருக்கம் அந்த அன்யோன்னியம் குறைந்து விட்டது என்பது உண்மை தான். காதலின் கைபிடித்து நடந்து செல்வதற்கும், "மிஸ் யூ பேபி" என்று ஒரு சோக ஸ்மைலியுடன் வாட்ஸப்பில் மெசேஜ் தட்டிவிடுவதற்கும் வித்யாசங்கள் இருக்கத்தானே செய்கிறது. ஒவ்வொரு உணர்வையும் அனுபவிக்க நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்து கடந்து போகச் செய்யும் தொழில்நுட்பங்கள் அம்மா அனுபவித்த பயத்திற்கும், சித்தியின் தவிப்பிற்கும் ஈடாகாது.

காதலை காதலியுங்கள் :

காதலை காதலியுங்கள் :

இன்றைக்கு தொழில்நுட்பங்களைத் தாண்டி மனதும் பக்குவப்பட்டிருக்கிறது, வாரம் ஒரு முறை பேசிக் கொண்டாலே அதிசயம். பேச வேண்டும் என்று ஏங்குவதில்லை பேசித் தான் ஆக வேண்டும் என்று தவிப்பதுமில்லை ஆனால் அள்ளி அள்ளி கொடுக்க அமுதசுரபியாய் காதல் நிரம்பி வழிகிறது. வாழ்க்கையின் ஒர் பகுதிக்காக வாழ்கையை தொலைக்க கூடாது என்பதில் இருவருமே உறுதியாய் இருக்கிறார்கள். காதலிக்கிறேன் என்று மழையில் குதித்து ஆடுவதுமில்லை விட்டுச் சென்று விட்டாள் என்று புலம்புவதுமில்லை. எதையும் எளிதாக்கும் தொழில்நுட்பம் காதலையும் எளிதாக்கிவிட்டது. அதன் உணர்வுகளையும் அதன் தாக்கத்தையும் குறைத்துவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love and romance
English summary

Does Technology Make Love Easier?

Influence of Technology on Love and relationship.
Story first published: Friday, July 14, 2017, 16:49 [IST]
Subscribe Newsletter