For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவன் மனைவியின் சின்ன, சின்ன சண்டைகள் குறித்து அழகாக விவரிக்கும் ஊடலுவகை!

By Staff
|

அறம், பொருள், காமம் என்று முப்பாலில் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விபரங்களையும், பாடங்களையும் கற்பித்து சென்றுள்ளார் தெய்வ புலவர் திருவள்ளுவர். எப்படி இந்த ஒற்றை மனிதனால்... வாழ்க்கை மொத்தைதையும் 1330 குறளில் அடக்க முடிந்தது என்பது உலகின் பல உயர்ந்த எழுத்தாளர்களால் வியக்கப்படும் விஷயமாகும்.

நாம் தான் ஏனோ காமத்துப் பாலை முற்றிலும் ஒதுக்கிவிட்டோம். காமம் என்பதன் உண்மை பொருள் காதல். ஆனால், காலப்போக்கில் அதன் பொருள் இச்சை என தவறாக திரித்துக் கூறப்பட்டு வருவதால்... காமத்து பால் என்றால் தாம்பத்தியம் பற்றியது மட்டுமே என்று கருதி அதை மொத்தமாக ஒதுக்கிவிட்டோம்.

Relationship Tips From Oodaluvagai Thirukural Adhigaaram!

ஒருவேளை காமத்துப் பாலை ஒதுக்காமல் பிள்ளைகளுக்கு சரியாக கற்றுக் கொடுத்திருந்தால்... இன்று விவகாரத்து கோரி யாரும் நீதிமன்றம் சென்றிருக்க மாட்டார்கள். இதற்கென தனி வழக்கறிஞர்கள் வாதாட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

இதோ! ஊடலுவகை என்ற அதிகாரத்தில் கணவன் - மனைவி ; காதலர்கள் மத்தியில் எழும் ஊடலும், அதன்பால் தொடர்ந்து அவர்கள் உறவில் ஏற்படும் தாக்கம் பற்றியும் திருவள்ளுவர் விளக்கி கூறியிருக்கும் குறள்கள்....

குறள் 1321:

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கும் ஆறு

மு.வ உரை:

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

சாலமன் பாப்பையா உரை:

அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

கலைஞர் உரை:

எந்த தவறும் இல்லாத நிலையிலும் கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது

குறள் 1322:

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்

மு.வ உரை:

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

சாலமன் பாப்பையா உரை:

ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

கலைஞர் உரை:

காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்

குறள் 1323:

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து

மு.வ உரை:

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.

சாலமன் பாப்பையா உரை:

நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?

கலைஞர் உரை:

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

குறள் 1324:

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை

மு.வ உரை:

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

சாலமன் பாப்பையா உரை:

என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

கலைஞர் உரை:

இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது

குறள் 1325:

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து

மு.வ உரை:

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:

ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

கலைஞர் உரை:

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது

குறள் 1326:

உணலினும் உண்ட தறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது

மு.வ உரை:

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:

உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.

கலைஞர் உரை:

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்

குறள் 1327:

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்

மு.வ உரை:

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

கலைஞர் உரை:

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்

குறள் 1328:

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு

மு.வ உரை:

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

சாலமன் பாப்பையா உரை:

நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?

கலைஞர் உரை:

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?

குறள் 1329:

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா

மு.வ உரை:

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

சாலமன் பாப்பையா உரை:

ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

கலைஞர் உரை:

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக

குறள் 1330:

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்

மு.வ உரை:

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

கலைஞர் உரை:

ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்

English summary

Relationship Tips From Oodaluvagai Thirukural Adhigaaram!

Here we have listed out the thirukural from Oodaluvagai Adhigaram with its meaning, Which is discussinig about husband and wife relationship and written by Thiruvalluvar.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more