கபட நாடகமாடி காதலித்து ஏமாற்றிய கணவன் - My Story #108

Posted By:
Subscribe to Boldsky
He Told His Girl Friend Cheated Him. But, The Truth is Straight Opposite - My Story!

நான் அப்போது கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தேன். எனக்கென பெரிய நட்பு வட்டாரம் ஏதுமில்லை. என் வகுப்பின் முன்னே வந்து நான்கு வார்த்தை பேச வேண்டும் என்றால் கூட எனக்கு வியர்த்துக் கொட்டும். கூச்சம், வெட்கம், அச்சம் என இதை எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஏனெனில், எனக்கு இந்த மூன்றுமே அதிகமாக இருந்தது.

நான், என்னுடன் மூன்று பெண் தோழிகள் இவ்வளவு தான் எனது கல்லூரி வட்டம். இதற்கு மேல் நான் பெரிதுப்படுத்திக் கொண்டதும் இல்லை, எனக்கென இருந்த அந்த மூன்று தோழிகளை இழந்ததும் இல்லை. படிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வமும் இருக்கவில்லை.

என் தோழிகளில் இருவர் ஓட்டப் பந்தயம், பாடல், ஆடலில் கலந்துக் கொள்வார்கள். அதை மட்டும் காண செல்வேன். அவர்கள் வெற்றிப் பெற கூட்டத்தில் இருந்து கத்தி உத்வேகப் படுத்த நான் கத்தியது கூட இல்லை. கைத் தட்டி பாராட்டுவேன் அவ்வளவு தான்.

இதுதான் நான். என் பெயரை போலவே, என் வாழ்க்கையும் மிகவும் மிருதுவானதாக இருந்தது அன்று. நான் எப்படி அவன் கூறியதை நம்பினேன்? என இதுநாள் வரை தெரியவில்லை. ஒருவேளை அன்றே யோசித்திருந்தால்... என் கதை இப்படி வேறு பெண்களுக்கு பாடமாகும் படியாக திசை மாறியிருக்காது என கருதுகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரவுஸிங் செண்டர்!

பிரவுஸிங் செண்டர்!

இன்று தான் அனைவரும் கைகளில் செல்போன் இருக்கிறது. அதில் நாள் ஒன்றுக்கு மிகுதியாக பயன்படுத்த டேட்டாவும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இப்படியான சூழல் இல்லை. ரிசல்ட் பார்ப்பதில் இருந்து, படிக்க தேவையான பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என எதுவாக இருந்தாலும் பிரவுசிங் செண்டர் தான் செல்ல வேண்டும். அப்படியாக தான் அந்த பிரவுஸிங் செண்டர் செல்ல ஆரம்பித்தேன் நான்.

தோழி!

தோழி!

என் தோழி மூலமாக தான் அந்த பிரவுஸிங் செண்டர் எனக்கு பரிச்சயம். மொத்தமே எட்டு கம்ப்யூட்டர் தான் இருக்கும். முதலில் ஒரு அக்கா தான் அந்த பிரவுஸிங் செண்டரை நடத்தி வந்தார். அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால், கொஞ்ச நாட்கள் அந்த பிரவுஸிங் செண்டரை நடத்த வந்தான் அவன். அவன் அந்த அக்காவின் உறவுக்காரன் என தான் ஆரம்பத்தில் கருதினோம். ஆனால், பிறகு தான் அவன் வேலைக்கு அமர்த்தப்பட்டவன் என தெரிய வந்தது.

அந்த மூஞ்சி...

அந்த மூஞ்சி...

எப்போதும் தனது மூஞ்சியை சோகமாகவே வைத்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் என் தோழி பிரிண்ட் அவுட்டுக்கு பணம் தரும் போது, ஏன் இப்படி எப்பவும் சோகமா இருக்கீங்க என கேட்டாள். அவன் எதுவும் பதில் பேசவில்லை. மீத காசை கொடுத்துவிட்டு மூஞ்சியை திருப்பிக் கொண்டான். கோபக் காரனாக இருப்பானோ என எண்ணி நாங்கள் அங்கிருந்து விரைந்து கல்லூரிக்கு சென்றுவிட்டோம்.

எக்ஸாம்!

எக்ஸாம்!

எக்ஸாம் நேரங்களில் நாங்கள் பிரவுஸிங் செண்டரில் அதிக நேரம் எடுத்துக் கொள்வோம். உடனே சிறிய பிராஜக்ட் வர்க் இருந்ததால் அந்த ஒரு சில நாட்களில் மாலை 6 மணி வரைக்கும் கூட நாங்கள் பிரவுஸிங் செண்டரில் இருக்க வேண்டி இருந்தது. அப்படியான ஒரு நாளில் தான், எங்களுடன் அவன் பேசினான்.

காதல் தோல்வி!

காதல் தோல்வி!

ஒரு நாள் மொத்தமே நாங்கள் நான்கு பேர் மற்றும் அவன் மட்டுமே பிரவுஸிங் செண்டரில் இருந்தோம். என் தோழி, அந்த மூஞ்சியே மாத்தவே மாட்டிங்களா? என கேட்டாள். அப்போது தான் மிகவும் சோகமாக தனது காதல் கதையை கூற துவங்கினான்.

அவனும், ஒரு பெண்ணும் ஐந்தாறு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும். இவனுக்கு வேலை இல்லை என்ற காரணத்தாலும், அவள் மேனஜர் அளவிற்கு பதவி உயர்வு வாங்கியதாலும் பிரேக்-அப் செய்துவிட்டு சென்றுவிட்டாள் என கூறினான்.

ஏன் வேலைக்கு போகல?

ஏன் வேலைக்கு போகல?

வேலைக்கு போகாமா தண்டமா இருந்தா? எந்த பொண்ணு தான் ஏத்துக்கும். நீங்க ஏதாவது வேலைக்கு போக வேண்டியது தானே என்றோம். படித்ததற்கு வேலை கிடைக்கவில்லை. மற்றவர்களை போல ஏதோ படித்துவிட்டு, ஏதோ வேலை செய்ய விருப்பமில்லை என வியாக்கியானம் எல்லாம் நன்றாக பேசினான்.

நாங்களும், இவன் நல்லவன் தான் போல, அவள் தான் மோசமாக நடந்துக் கொண்டிருக்கிறாள் என கருதினோம்.

பாவம்!

பாவம்!

அதன் பிறகு அவனை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அட இவன் ரொம்ப பாவம் என மனதில் தோன்றும். மெல்லியதாக ஒரு புன்னகை கொடுத்து செல்வேன். நான் அவனை பார்த்து சிரிக்க துவங்கியதில் இருந்து அவன் சோகமான முகம் மாற துவங்கியது. கொஞ்சம் சிரித்த முகத்துடன் காணப்பட்டான். அதன் பிறகு அவன் சோகமாக உட்கார்ந்து நான் கண்டதே இல்லை.

காதல்!

காதல்!

நாங்கள் இருவரும் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. ஆனால், அவன் மேல் எனக்கொரு சாப்ட்கார்னர் உண்டானது. ஆகையால், அவனிடம் யாரும் இல்லாத போது பேசத் துவங்கினேன். அவனது காதலை பற்றி அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தேன். அவன் ஒரு கட்டத்திற்கு மேல், என்னிடம் அழுது பேச ஆரம்பித்தான்.

அவனுக்கு யாருமே இல்லை, இருந்த காதலும் ப்ரேக்-அப் ஆகிவிட்டது. வேலை இல்லாத காரணத்தால் வீட்டிலும் யாரும் மதிப்பதில்லை என கூறினான். இது போன்ற காரணங்கள் அவன் மீது காதல் கொள்ள வைத்தது.

பேசுதல்!

பேசுதல்!

அடிக்கடி நேரம் கிடைக்கும் போது பிரவுஸிங் செண்டர் அருகே இருக்கும் இடத்தில் பேச துவங்கினோம். என்னுடைய அன்பு, என்னுடைய வார்த்தைகள் கேட்டு ஓர் நல்ல வேலைக்கு செல்வதாக கூறினான். சரி எப்படியும் வாழ்க்கையில் முன்னேறிவிடுவான், திருமணம் செய்துக் கொண்டால் எல்லாம் நன்றாக அமையும் என கருதினேன்.

அடிக்கடி...

அடிக்கடி...

அவனிடம் சில நல்ல மாற்றங்கள் தென்பட்டன. பல வேலைகளுக்கு முயற்சி செய்தான். ஆனாலும், அடிக்கடி தனது பழைய காதல் மற்றும் காதலி ஏமாற்றியதை கூறி அழுவான். சில சமயங்களில் தோள்களில் சாய்ந்து அழத் துவங்கினான். அப்படியாக தான் எங்கள் இருவருக்குள் நெருக்கம் அதிகரித்தது.

டெக்னிக்!

டெக்னிக்!

வெறுமென என்னை தொட்டு பேசினால் நான் தவிர்த்துவிடுவேன், தவறாக எடுத்துக் கொள்வேன் என கருதி, என்னை தொட்டுப் பேச அவன் மேற்கொண்ட டெக்னிக் தான் அது. ஆனால், அப்போது இதெல்லாம் என் புத்திக்கு எட்டவில்லை. சில தருணங்கள் அவனது அழுகையை போக்க, அவன் இயல்பு நிலைக்கு திரும்ப முத்தங்கள் தேவைப்பட்டது.

அத்துடன் இல்லை...

அத்துடன் இல்லை...

ஒரு நாள் இந்த நெருக்கம், முத்தங்கள் என்பவை எல்லை மீற வழிவகுத்தது. என்னுள் இருந்த வேலிகள் எல்லாம் அறுபட்டு அவனுடன் உறவில் இணைந்தேன். கல்லூரியின் கடைசி வருடம் இன்னும் ஒரு செமஸ்டர் தான் மீதம் இருக்கிறது. நான் அப்போது இந்த காரியத்தை செய்திருக்கக் கூடாது. சில சமயங்களில் மனதின் பேச்சைக் கேட்க கூடாது என்பதை பிறகு தான் அறிந்துக் கொண்டேன்.

உண்மை புலப்பட்டது!

உண்மை புலப்பட்டது!

எங்கள் வீட்டில் இது தெரிய வந்தது. உடனடியாக கருகலைப்பு செய்து வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். அவன் என் வீட்டுக்கு வந்து கெஞ்சியும் என் வீட்டார் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றிரவே அவனுடன் ஊரைவிட்டு ஓடினேன்.

பணம் தேவை என்பது அப்போது எங்களுக்கு தெரியவில்லை. கையில், காதில் இருந்ததை விற்று கொஞ்ச நாட்கள் செலவு செய்தோம். கல்லூரியில் என் நடத்தை காரணம் காட்டி கடைசி செமஸ்டர் எக்ஸாம் எழுத முடியாமல் போனது. அவனுக்கு வேலை இல்லை, எனக்கு படிப்பு இல்லை.

சோம்பேறி!

சோம்பேறி!

ஒரே மாதத்தில் அவன் எவ்வளவு பெரிய சோம்பேறி என்பதை அறிந்துக் கொண்டேன். தங்கம் விற்ற காசெல்லாம் செலவானது. நான் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல். அவன் மீண்டும் வீட்டில் முடங்க ஆரம்பித்தான். காதலித்த போது நான் கூறிய அறிவுரைகளை ஏற்றுக் கொண்டவன். திருமணத்திற்கு பிறகு அதை வெறுத்தான். வயிற்றில் குழந்தை வேறு வளர்ந்து வருகிறது. என்ன செய்ய? வேலைக்கு நான் தான் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம்.

அவன் வீட்டார்..

அவன் வீட்டார்..

இவனை நம்பி ஏன் வந்தாய், இவன் உருப்படதாவன் என அவனது தாயே திட்டினார். அவனை காட்டிலும், அவனது தாய் என் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். அவருக்கு மார்கெட்டில் காய்கறி விற்பது தான் தொழில். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் இருந்து எல்லாமும் அவர் தான் செய்தார்.

ஒரு நாள்...

ஒரு நாள்...

நானும் என் மாமியாரும் ஒரு நாள் மருத்துவமனைக்கு செக்கப் சென்றோம். அங்கே யாரோ ஒருவர் எங்களை நீண்ட நேரமாக பின்தொடர்ந்து வருவது போல தெரிந்தது. அவர் ஒரு பெண் தான். ஆயினும் எங்களை ஏன் பின்தொடர வேண்டும்? என்ற அச்சம்.

என் மாமியார் மருந்து வாங்கி வர சென்ற நேரம் பார்த்து அந்த பெண் என் அருகே வந்து பேச துவங்கினாள்.

பாவி!

பாவி!

அவள் வேறு யாருமில்லை, தன்னை காதலித்து ஏமாற்றியதாக அவன் கூறிய அதே பெண். அவள் ஒரு வங்கியில் மேனாஜர் பொறுப்பில் தான் இருக்கிறாள். ஆனால், அவன் கூறியது போல அவள் மோசமானவள் எல்லாம் இல்லை.

காதலித்து வந்த போது அந்த பெண் வங்கியில் கிளர்க் தான். இவன் அப்போதும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மாதாமாதம் இந்த பெண் தான் அவன் செலவுக்கு பணம் கொடுத்து வந்திருக்கிறாள்.

திமிர்!

திமிர்!

வங்கியில் தானே வேலை செய்கிறாய் என அளவுக்கு மீறி செலவுகள் செய்து, மீண்டும் மீண்டும் பணம் கேட்டு நச்சரித்துக் கொண்டே இருக்க. ஒரு எல்லையில் சண்டை வலுத்து இருவரும் பிரிந்துவிட்டனர் என்று கூறினாள். ஒரு நாள் என்னையும், அவனையும் ஒன்றாக பார்த்ததாகவும். பிறகு அவனது தோழர்கள் மூலமாக எங்களுக்கு திருமணம் ஆனதை அறிந்ததாகவும் கூறினாள்.

 போதுமடா சாமி!

போதுமடா சாமி!

இப்படியும் ஏமாற்றும் நபர்கள் இருக்கிறார்கள் என அப்போது தான் அறிந்துக் கொண்டேன். ஆனால், என்னால் ப்ரேக்-அப் எல்லாம் செய்ய முடியாது. அவனை திருத்த வேண்டும். இப்போது எனக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவனும், தன் தகப்பன் போல ஆகிவிடக் கூடாது. எப்படியோ கரஸில் படித்து டிகிரி முடித்துவிட்டேன்.

குடும்பத்தை ஓட்டும் அளவிற்கு ஊதியம் வருகிறது. இப்போதும் மூன்று மாதத்திற்கு ஒரு வேலை, ஆறு மாதத்திற்கு ஒரு வேலை என அவன் மாறிக் கொண்டே தான் இருக்கிறான்.

ஏமாறாதீர்!

ஏமாறாதீர்!

என்ன செய்ய.. எனது அச்சம் அவனை விட்டு விலக முடியாமல் இருக்கிறேன். என்றாவது ஒருநாள் அவன் திருந்துவான் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.

சென்டிமென்ட்டாக பேசி தான் பெரும்பாலான ஆண்கள் பெண்களை ஏமாற்றுகிறார்கள். இதோ, என் கணவனை போல. அந்த ஒரு நிமிடத்தில் நாம் மனம் உருகிவிடுவோம். ஆனால், அது வாழ்நாள் முழுக்க எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு எடுத்துக் காட்டு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

He Told His Girl Friend Cheated Him. But, The Truth is Straight Opposite - My Story!

He Told His Girl Friend Cheated Him. But, The Truth is Straight Opposite - My Story!
Story first published: Thursday, December 14, 2017, 15:00 [IST]
Subscribe Newsletter