For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் மீதே பழி போட்டு தப்பித்துக் கொள்வது எளிது! My story #200

அம்மாவுக்கு கள்ளத்தொடர்பு இருக்கும் என்று நம்பி அம்மாவை வெறுத்த மகன்

|

இப்போ எதுக்கு இங்க வந்த? காலேஜ்ல எல்லா பசங்க முன்னாடியும் என் மானத்த வாங்குறதுக்குன்னே வந்திருக்கியா? எனக்கு அம்மா அப்பா இல்ல ரெண்டு பேரும் செத்துட்டாங்கன்னு சொல்லிருக்கேன் போ இங்கயிருந்து....

சும்மா இப்ப வந்து அழுது சீன் போடாத. இவ்வளவு வருடங்கள் கழிந்த பின்னும் என் மேல் இவ்வளவு கோபத்துடன் தான் இருப்பான் என்பதை இன்னமும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என் கண்ணு முன்னாடி நிக்காத போய்த்தொல என்று உள்ளே சென்று விட்டான்.

நான் சொல்ல வந்தது என்ன? இவ்வளவு வருடங்கள் கழித்து ஏன் பார்க்க வந்தேன் என்று எதுவுமே அவன் கேட்கவில்லை, என்னையும் சொல்ல அனுமதிக்கவில்லை. என்ன நடந்தது,என்று விரிவாக சொல்கிறேன் பொறுமையாக படித்துவிட்டு இறுதியில் நான் கேட்கிற சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம் :

குடும்பம் :

அளவான குடும்பம். நான் கணவர் மகன் என மூன்று பேர் தான் கணவருக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி, நான் ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்,மகன் பிறந்த பிறகு வேலையை விட்டு விட்டேன்.

குடும்பம் என்றால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் போகும் தானே.... அதே போலத்தான் எங்கள் வீட்டிலும்.

விபத்து :

விபத்து :

மகனுக்கு பதினான்கு வயதான போது, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் கணவர் விபத்தில் சிக்கினார், சுமார் பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் இறந்து விட்டார்.

வாழ்க்கை தலை கீழாய் மாறியது. குடும்பம்,குழந்தை,பணம்,உறவு,வேலை என எல்லாவற்றையும் நான் ஒருத்தியே சமாளிக்க வேண்டியதாய் இருந்தது. இவை எல்லாவற்றையும் விட நான் சமாளிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இந்த சமூகம் தான்.

விமர்சனங்கள் :

விமர்சனங்கள் :

வீட்டுக்காரர் இறந்துட்டாரு இன்னமும் எப்டி மேக்கப் பண்றா பாரு.... இன்னமும் சுடிதார் போட்றா பாரு, பையன் வளர்ந்துட்டானே கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருப்போம்னு இருக்காளா? வீட்டு வாடகை யார் கொடுப்பா? செலவுக்கு என்ன பண்றா? டெய்லி வெளிய போறாளே எங்க போறா??

அதான் ஹஸ்பண்ட் இறந்துட்டாருல்ல அப்பறமென்ன உன்ன கேள்வி கேக்க யாருமில்ல..... அதான் எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் ஆகிடுச்சுல்ல ஒருவாட்டி வந்துட்டுபோ... வேலை செய்யும் இடத்திலும் சரி, உறவுகள் மத்தியிலும் சரி ஏராளமான கேள்விகள்.

 மகன் :

மகன் :

மகனுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறைக்கு அவனை அம்மா வீட்டில் விட்டுவிட்டு நான் வேலைக்காக ஹைதிராபாத் வந்துவிட்டேன். பத்து நாட்கள் விடுமுறை முடித்து மீண்டும் அழைத்து வர சென்ற போது ஆளே மாறியிருந்தான். உருவத்தில் அல்ல குணத்தில்.

அங்கே யார் என்ன சொன்னார்கள்.... என்றெல்லாம் தெரியாது அதன் பிறகு அவன் போக்கு முற்றிலுமாக மாறியது.

நீ சீட் :

நீ சீட் :

ஆரம்பத்தில் குழந்தை தெரியாமல் ஏதோ கோபம் இருக்கும். இவ்வளவு நாட்கள் அவனை இங்கே தனியாக விட்டுவிட்டேன் என்ற கோபம் அதான் இப்படி பேசுகிறான் என்று நினைத்து விட்டேன், ஆனால் போகப்போக அவனது கோபம் சிறிதும் குறையவில்லை.

ஒரு முறை அவனது ஸ்கூல் டைரி சைன் செய்யச் சொல்லி வைத்திருந்தான். அதில் கையெழுத்து போட்டு திரும்புகையில் அவனது ரஃப் நோட் ஒன்று கண்ணில் பட்டது. அதில் முழுக்க முழுக்க எழுதியிருக்கிறான். பல பக்கங்கள் ‘மை மம்மீ இஸ் சீட்' என்றிருந்தது.

அம்மாட்ட பேசுடா :

அம்மாட்ட பேசுடா :

ஒரு கணம் திக்கென்றது படிக்க ஆரம்பித்தேன், அப்பா வேண்டும். அப்பா இறந்த பிறகு அம்மா என்னை சரியாக கவனிப்பது இல்லை, பள்ளியிலும் அப்பார்ட்மெண்ட்டிலும் அம்மாவைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். பாட்டியும், அதையே தான் சொன்னார். பாட்டி சொன்ன பிறகு தான் அம்மா மீது தான் தவறு என்று நம்ப ஆரம்பித்தேன் என்று நிறைய சம்பவங்களுடன் எழுதியிருந்தான்.

தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பினேன்.

நீ நம்புறியா :

நீ நம்புறியா :

நீ யார நம்புற? உனக்காகத்தான அம்மா இவ்ளோ கஷ்டப்படறேன், உன்கிட்ட இப்டி சொன்னாங்க கேட்டாங்கன்னா நீ என்கிட்ட வந்து சொல்லியிருக்கலாம் கேட்டிருக்கலாம் தான அம்மாட்ட பேசுடா என்றேன்....

நான் கூட மொதோ நம்பவேயில்ல ஆனா ஊர்ல பாட்டி, சித்தப்பா,மாமா எல்லாரும் சொன்னதுக்கு அப்பறம் எப்டி நம்பாம இருக்க முடியும்.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

பேசுவது என் மகன் தானா? ஊரில் இருப்பவர்கள் பேசிய போது, சுற்றிலும் இருந்த உறவுகள் ஏசிய போது கூட வராத ஒரு வலி மகனின் வார்த்தைகளால் வந்தது.

அம்மாவ சந்தேகப்படறியாடா? சத்தியமாய் இந்த நிலைமை எந்த பெண்ணுக்கும் வந்து விடக்கூடாது.

அவன் பதிலேதும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

பல கேள்விகள் :

பல கேள்விகள் :

நான் ஏன் என்னை நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டும், நான் சுத்தமானவள், நான் யாரையும் காதலிக்கவில்லை, கணவரைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதை நான் ஏன் பிறருக்கு சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

எனக்கான வாழ்க்கை, நான் படித்திருக்கிறேன் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன், இங்கே தனி வீடு எடுத்து மகனை மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன் யாருடைய தயவும் இன்றி என்னால் வாழ முடிகிறதே.

எங்கே இடிக்கிறது ? :

எங்கே இடிக்கிறது ? :

ஒரு பெண், அதுவும் கணவனை இழந்தவள் எப்படி இவ்வளவு மரியாதையாக வாழலாம். மிகவும் சௌகரியமாக வாழலாம் என்ற கேள்வி தான் எல்லாரையும் குடைகிறது, எப்போதுமே இவள் யாருடனோ கள்ளத்தொடர்பு வைத்திருப்பாள், சம்பாதிக்கிற பணத்தில் எப்படி எல்லா செலவுகளையும் சமாளிக்க முடியும் என்ற கேள்வி தான் எல்லாவற்றையும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது.

 பஞ்சாயத்து :

பஞ்சாயத்து :

பிரச்சனை தீவிரமானது, ஊரில் எல்லாரிடமும் பெரிய விவாதம் பையன் கிட்ட நீங்களே இப்டி சொன்னா என்ன அர்த்தம் ஏம்மா நீ கூட என்னைய நம்பலையா? அவன் சின்னப்பையன் மத்தவங்க சொன்னா கூட என் பொண்ண பத்தி எனக்கு தெரியும்னு நீ பேசியிருக்கணும் ஆனா நீயே இப்டி என்னைய பத்தி தப்புத்தப்பா என் பையன்கிட்ட சொல்லி வச்சிருக்க.

ஊர்ல எல்லாரும் தப்பா பேசுறாங்களே.... அதான் வேலைய விட்டு இங்க வா, இங்க கிடைக்கிற வேலைய பாருன்னு சொல்றேன் கேக்குறியா?

தீர்மானம் :

தீர்மானம் :

என்னம்மா புரியாம பேசுற அங்க வாங்குற அம்பதாயிரத்த விட்டுட்டு இங்க நாலாயிரம் ரூபாய்க்கு வேல பாக்க சொல்றியா?

அஞ்சோ பத்தோ கிடைக்கிறத செய்... மவன, பக்கத்துல ஒரு ஸ்கூல சேத்து விடு நீ ஏன் இண்டர்நேஷனல் ஸ்கூல்ல சேத்துவிடணும்னு நினைக்கிற? இங்க அப்பா பென்ஷன் பணம் வருது, மாசம் உன் தம்பிட்ட காசு கொடுக்க சொல்வோம்.

சமாளிக்கணும்னு நினச்சா எல்லாத்தையும் சமாளிக்கலாம்.

சரமாரிக்கேள்வி :

சரமாரிக்கேள்வி :

நான் ஏன்ம்மா நெருக்கடியா இன்னொருதவங்கட்ட கையேந்திட்டு வாழணும், படிச்சிருக்கேன், வேலப்பாக்குறேன் என் சொந்த கால்ல நிக்க கூடாதா?

என் பையன இண்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்க வைக்ககூடாதா??? ஹஸ்பண்டோட இருக்குறவங்க தான் படிக்க வைக்கணுமா என்ன? அவனோட எதிர்காலமும் எனக்கு முக்கியம், வேலைக்கு அதுவும் ஐடி ல வேலை பாத்தாலே கள்ளத்தொடர்பு இருக்கும்னு நீங்க நினச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

எல்லாம் தலைகீழ் :

எல்லாம் தலைகீழ் :

நாலு நாட்கள் தொடர்ந்து சண்டை நடந்தது. யாருமே எனக்கு ஆதரவாய் நிற்கவில்லை, மகனும் அம்மாவும் கூட, இதில் ஹைலைட்டாக மகன் இனிமேல் என்னுடன் ஊருக்கு வரமாட்டேன் என்றான். பல முறை பேசிப்பார்த்தேன் கெஞ்சிப் பார்த்தேன்.

இங்க ஸ்டாண்டர்ட் எஜுகேஷன் இல்ல, அங்க இண்டர்நேஷனல் சிலபஸ் படிச்சுட்டு இங்க மெட்ரிக் சிலபஸ் படிக்கிறது வேஸ்ட்.... நெக்ஸ்ட் ரெண்டு வருஷத்துல +2 அப்பறம் காலேஜ்.... க்ரூசியல் ப்ரீயட் உன் ஃபுயூச்சர ஸ்பாயில் பண்ணிக்காத என்று எடுத்துக்கூறியும் கேட்கவில்லை.

சதி :

சதி :

நீ வேணாம் என்னைய விட்டுப் போ,இங்கயிருந்து போல நான் செத்துருவேன் என்று எதேதோ பேச ஆரம்பித்தான், என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை மகனை விட்டு வரவும் முடியாமல் புரியவைக்கவும் முடியாமல் தவியாய் தவித்தேன்.

கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தேன், சில நாட்கள் பிரிந்திருக்கட்டும் அப்போது தான் அவனுக்கு என் அருமை தெரியும் என்று நினைத்து ஊரிலேயே விட்டு விட்டு கிளம்பினேன். நீ எங்க குழந்தை பேரச் சொல்லி சொத்து கேட்ருவியோன்னு ஹஸ்பண்ட் வீட்டு சைடு இப்டி ப்ளான் பண்ணி குழந்தைய பிரிச்சிருப்பாங்க என்றார்கள்.

நிரிந்தரப்பிரிவு :

நிரிந்தரப்பிரிவு :

உண்மையா பொய்யா என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை..... அது எனக்கு தேவையும் இல்லை. அப்படி பிரிந்த மகன் நிரந்தரமாய் பிரிந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வின் போது கூட வாழ்த்துச் சொல்ல எவ்வளவோ முயன்றும் என்னுடன் பேசவே மறுத்துவிட்டான்.

மதிப்பெண்களைக்கூட சொல்லவில்லை, அவன் வெளிநாட்டிற்கு போய் படிக்க வேண்டும் என்றால் கூட அதை செய்ய நான் தயாராய் இருந்தேன்.

ஆசை :

ஆசை :

சிறுவயதில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வான் அது எந்த கல்லூரியில் இருக்கிறது, எது பெஸ்ட் என அலசி ஆராய்ந்து அங்கு செமஸ்டர் கட்டணம்,ஹாஸ்ட்டல் கட்டணம் என எல்லாவற்றையும் விசாரித்து வருடத்திற்கு குறைந்தது மூன்று லட்சமாவது செலவாகும் என்று தெரிந்து கொண்டு பணம் சேமித்திருந்தேன், அவன் பெயரில் சின்ன சின்னதாய் முதலீடுகளும் செய்திருந்தேன்.

ஆனால் என்னிடம் ஒரு வார்த்தையைக் கூட சொல்லாமல் சென்னையில் ஏதோ ஒரு கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சையின்ஸ் எடுத்திருப்பதாக உறவினர் ஒருவர் மூலமாக தெரிந்தது.

ஏண்டா இப்டி ? :

ஏண்டா இப்டி ? :

ஒரு கணம் என்ன இது, கல்லூரியில் சேரும் போதாவது என்னிடம் வருவான் என்று எதிர்ப்பார்த்தால் இப்படி ஒரு பெயரே தெரியாத கல்லூரியில் சேர்ந்திருக்கிறானே என்று அதிர்ச்சியாக இருந்தது. பல முறை போன் செய்த பிறகு வேறு வழியின்றி எரிச்சலுடன் பேசினான்.

ஏன் தேவையில்லாம உன் லைஃப இப்டி கெடுத்துக்குற?

நீ தான் என் லைஃப் கெடுத்த.... என்று என் மீதே எரிந்து விழுந்தான். நீ ஃபாரின் போய் படிக்கணும்னு சொன்னா கூட நான் படிக்க வச்சிருப்பேன், ஏரோநட்டிக்கல் கோர்ஸ் எங்க பெஸ்ட்டுன்னு தேடி அங்க உன்னைய படிக்க வைக்கணும்னு நினச்சுட்டு இருந்தா நீ இப்டி ஒரு மொக்க காலேஜ்ல போய் சேர்ந்திருக்க...

நீ எப்டி பணத்த பொறட்டுவன்னு யாருக்கு தெரியும்.

மகனே :

மகனே :

அடுத்த கணம் போனை கட் செய்துவிட்டேன், அவன் சொன்ன அந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தது, பேசுவது என் மகன் தானா? அவனுமா இப்படி..... இப்போது அவன் மேல் பரிதாபப்படுவதற்கு பதிலாக கோபம் வந்தது.

அவனாவது என் அம்மாவைப் பற்றி எனக்கு தெரியும் என்று ஒரு முறை சொல்லியிருந்தால் கூட பரவாயில்லையே என்று நினைத்து வருந்தினேன். அதன் பிறகு அவனிடம் பேசவேயில்லை.

தனிமை :

தனிமை :

அவன் பகுதி நேரமாக வேலைக்குச் செல்வதாகவும், டுவீலரில் சென்று போது விபத்து,கை ஃபிராக்சர் ஆகிவிட்டது என்றெல்லாம் தகவல்கள் வந்தது. ஏனோ இம்முறை மகன் மீது பரிதாபம் ஏற்படவில்லை, யாரோ மூன்றாம் மனிதனைப் பற்றி கேட்பது போல....ஹோ அப்படியா என்ற படி விலக பழகியிருந்தேன்.

யாரும் வேண்டாம்.... எதற்கு தேவையில்லாமல் இவ்வளவு பெரிய வீடு,கார் எல்லாமே ஒருத்திக்காக... இப்படியே இருந்தால் நானே பைத்தியமாகிவிடுவேன் போல

முதியோர் இல்லம் :

முதியோர் இல்லம் :

வயதாகிவிட்டது ஆரம்பத்தில் இருந்தது போல ஓடியாடி எல்லாம் என்னால் வேலை செய்ய முடியவில்லை, ஐடியில் பரபரப்பாக இயங்க முடியவில்லை, வேலையை ரிசைன் செய்துவிட்டேன்.

தொண்டு நிறுவனத்தினர் ஒருவர் நடத்தும் முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி கேட்டேன். முடிந்தளவு வேலை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றார்கள். அங்கேயே வேலை தருவதாகவும் சொன்னார்கள் சம்மதம் சொல்லிவிட்டேன். அந்த நிறுவனத்தின் அக்கௌண்ட் செக்‌ஷன் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டேன்.

இனி எதற்கு இதெல்லாம் :

இனி எதற்கு இதெல்லாம் :

தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தது,எத்தனை உறவுகள், எவ்வளவு பேர் தங்கள் குழந்தைகளின் பாசம் கிடைக்காமல் ஏங்கிக் கிடக்கிறார்கள். இனி இந்த சொத்து, வீடு, கார் எல்லாம் எதற்கு இனி இறுதி மூச்சு வரை இங்கேயே இருந்திட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.

என் பெயரில் உள்ள சொத்துக்கள், முதலீடுகள், பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும் மகனின் பெயருக்கு மாற்ற முன்வந்தேன், அதற்காகத்தான் அவனை கல்லூரிக்கு போய் சந்தித்தேன்.

ஸ்ரீ தேவி :

ஸ்ரீ தேவி :

ஒரு நாயைத் துறத்துவது போல துறத்திவிட்டான், என் மீது அப்படி என்ன கோபம், அப்படி அவன் கோபப்படும் அளவுக்கு நான் என்ன பெரிய தவறு செய்தேன் ஒன்றும் புரியவில்லை. இனி இந்த ஊர்ப்பக்கமே வரக்கூடாது என்ற முடிவுடன் கிளம்பினேன். சொத்துக்கள் அனைத்தையும் நான் பணியாற்றிய இல்லத்திற்கே எழுதி கொடுத்துவிட்டேன்.

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியை குறித்த பல செய்திகளை கடந்து வந்த போது இந்த கேள்வி எழுந்தது. இது என்னுடைய வாழ்க்கையிலும் பொருந்திப் போவதால் உங்களிடம் கேட்கிறேன் முடிந்தால் பதில் சொல்லுங்கள்.

ஒரேயொரு கேள்வி :

ஒரேயொரு கேள்வி :

அப்பாவை ஏமாற்றி ஸ்ரீ தேவி திருமணம் செய்து கொண்டார் அதனால் ஸ்ரீ தேவி மீது மிகுந்த கோபத்தில் இருந்திருக்கிறார் போனிகபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர். ஸ்ரீ தேவிக்கு போனி கபூர் மீது முதலில் காதல் இல்லை, என இரண்டு செய்திகளை கடந்து வந்திருப்போம்.

போனி கபூர் தான் ஸ்ரீ தேவியை விரும்பினார், ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். உண்மையில் அர்ஜுன் கபூர் தந்தை மீதல்லவா கோபப்பட்டிருக்க வேண்டும்???? இந்த சமூகத்தில் எப்போதும் பெண்கள் மீதே பழி போட்டு தப்பித்துக் கொள்வது ஆண்களுக்கு சுலபமாக இருக்கிறது போல....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Son Hated His Mother

Son Hated His Mother Because Of He believe that Mom has illegal relationship
Story first published: Monday, March 12, 2018, 10:00 [IST]
Desktop Bottom Promotion