18 வயசுல அவ வாழ்க்கை நாசமானதுக்கு நான் தான் காரணம்... - My Story #147

Subscribe to Boldsky
Her Love and Dreams Were Ended Even Before The Start - My Story!

அவள் செய்தது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை. இன்றைய நகர்ப்புறங்களில் வாழ்ந்து வரும் டீனேஜ் மாணவர்களுக்கு இது ஒரு தவறாகவே தெரியாது. தினந்தோறும் அவரவர் வாழ்வில் நடக்கும் ஒரு சகஜமான விஷயம் தான் இது. ஒரு பெண், ஒரு ஆணுடன் மொபைலில் பேசுவது என்ன அவ்வளவு பெரிய தவறா?

ஆம்! அவள் செய்த மாபெரும் தவறென அவளது பெற்றோர் கூறிய விஷயம் இது தான். இந்த தவறுக்கு தண்டனையாக அவளது கல்வியை துண்டித்தனர். அதன்பால் அவளது கனவுகளும் தவிடுபொடியாக்கினர். அவளுக்குள் துளிர்விட காத்திருந்த காதலும் அந்த கோபக்காற்றில் மலராமலே உதிர்ந்துப் போனது.

ஒரு குடும்பத்தின் கௌரவம் பெண்கள் என கூறி மெச்சிக்கொள்கிறது நமது இந்திய சமூகம். ஆனால், அந்த கௌரவந்தை முன்காட்டி அந்த பெண்களின் வாழ்க்கை இன்றளவும் இந்தியாவின் பெருபகுதிகளில் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

அவளுக்கு நிகழ்ந்த இந்த கொடுமை இனி எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது என்பதே எனது வேண்டுகோள். இதற்கு அரசும் சில சட்டத்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மு!

அம்மு!

அவள் பெயர் அம்மு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மிக கட்டுக்கோப்பானவர்கள் என்று கூறப்படும் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த அப்பாவி மகள் அவள். அவர்கள் குடும்பத்தில் ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டம் என்பதை வலுவாக நம்புவோர். அதை அந்த குடும்பத்தின் பெண்களும் ஏற்று நடந்து வந்தார்கள் என்பதே உண்மை. ஆண்களின் அரவணைப்பில் பெண்கள் வாழலாம், ஆனால் அடிப்பணிந்து வாழ்வது என்பது சட்டமும் தவறென கூறும் செயல்.

அப்பா!

அப்பா!

அம்முவின் அப்பா கடுங்கோபக் காரர். அவரது வீட்டில் அனைவரும் அவரது சொல்லுக்கு பணிந்தே நடக்க வேண்டும். சில சமயங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை தாண்டி, இந்த உடை தான் உடுத்த வேண்டும், இப்படி தான் நடக்க வேண்டும், டிவியில் கூட இந்த நிகழ்சிகள் தான் காண வேண்டும், இவற்றை பார்க்க கூடாது என பல கடும் சட்டங்கள் இருந்தனர் அம்முவின் வீட்டில்.

ஆண்கள்!

ஆண்கள்!

அம்மு வீட்டில் வாழ்ந்து வரும் பெண்கள் யாராக இருந்தாலும், வெளி ஆண்களின் முகத்தை கூட ஏறெடுத்து பார்க்க கூடாது என்ற நிலை இருந்தது. அம்மு படித்தது எல்லாம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் தான். அவளுக்கு ஆண்களுடனான பழக்கம் என்பது சிறிதளவும் கிடையாது. அவள் அதிகம் பழகிய ஆண், அவளது அக்காவின் மகன் தான். ஆண்களை தலை நிமிர்ந்து பார்த்தாலே அம்மு அப்பாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். இது தான் அம்மு வீட்டின் சூழல்.

நாராசமாக திட்டுவார்!

நாராசமாக திட்டுவார்!

ஒரு சிறிய தவறு செய்தால் கூட மிக கொடிய வார்த்தைகள் கூறி திட்டுவார் அம்முவின் அப்பா. உதாரணமாக கூற வேண்டும் என்றால், மதிய உணவில் சாம்பாரில் உப்பு கொஞ்சம் குறைந்தாலும் கூட ,"போய் ரோட்டுல போறவன் மூத்திரம் பிடித்துக் குடி, அப்பவாவது சரியா சமைக்கிறியான்னு பார்ப்போம்..." என்று திட்டுவார்.

பல சமயங்களில் அம்முவின் தந்தை எந்த வார்த்தை கூறி திட்டுகிறார் என்பது அக்கம்பக்கத்து வீட்டாருக்கு எதிரொலியுடன் கேட்கும். அவரது கைகளின் நீளம் மட்டுமல்ல, குரல்வளமும் கொஞ்சம் பெரியது தான்.

முதல் தோழன்!

முதல் தோழன்!

ஒருவழியாக பள்ளி படிப்பை முடித்தாள் அம்மு. அவளுக்கு அதே ஊரில் இருந்த கல்லூரியில் இடமும் கிடைத்தது. ஆனால், அம்முவின் அப்பா தேடியது போல பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரி எங்கள் ஊரில் இல்லை. வெளியூர் அனுப்பி படிக்க வைக்கவும் அவருக்கு விருப்பமில்லை. எனவே, அரைமனதுடன் அம்முவை எங்கள் ஊரில் இருந்த கல்லூரியில் சேர்த்தார்.

அம்மு வாழ்வில் சுதந்திரமாக சுவாசித்தது, சிரித்தது எல்லாம் அந்த கல்லூரி நாட்களில் தான். நான் அம்முவின் பக்கத்து வீட்டில் தான குடி இருக்கிறேன். அம்மு இப்படி சிரிப்பாள், அவளது சிரிப்பு சப்தமும், சிரிக்கும் போது அவளது முகம் இவ்வளவு அழகாக இருக்கும் என இந்த 15வருடங்களில் நானே அறிந்ததில்லை. காரணம் நான் ஒரு ஆண் என்பதால், அம்மு என்னுடன் பழகியதே இல்லை.

அவளது முதல் தோழன் நான் என்பதில் ஒருவித மகிழ்ச்சி எனக்கு இருந்தது.

பழகிய நாட்கள்!

பழகிய நாட்கள்!

அம்முவுடன் நான் பழகிய நாட்கள் மிகவும் குறைவானது. அவளுக்குள் நிறைய அச்சம் இருந்தது. கல்லூரி வாசல் தாண்டினால் மீண்டும் பழைய அம்முவாக மாறிவிடுவாள். ஊர் காரர் யாரேனும் அல்லது அவளது அப்பாவின் நண்பர்கள் யாரேனும் சிரித்து பேசி பழகுவதை கண்டு அவரிடம் கூறிவிட்டால், படிப்பு பாதித்துவிடும் என்பது அவளது அச்சம். அவளது இந்த அச்சம் ஒருநாள் நிஜமாக நடந்தது. அதற்கு காரணமும் நான் தான்.

ஒரு நாள்...

ஒரு நாள்...

ஒரு நாள் எங்கள் கல்லூரியில் கலை விழா நடக்கவிருக்கிறது என கூறி, சில கூடுதல் வேலைகள் கொடுத்தனர். அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் அவரவர் எடுத்து நடத்தும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வைக்க வேண்டும் என்பதே வேலை. அது சார்ந்து மேடை அலங்காரம், கல்லூரி வளாகத்தில் வரவேற்பு செய்வது, தோரணங்கள் கட்ட, கோலங்கள் இட என நிறைய வேலைகள் பார்க்க வேண்டியது இருந்தது. இதனால், அம்மு அன்று வீடு திரும்ப நேரதாமதம் ஆனது.

மொபைல் போன்!

மொபைல் போன்!

"ஏன் லேட்டு, என்ன ஆச்சு..." என பல கேள்விகளுடன் வாசலிலேயே அம்முவை 15 நிமிடம் நிறுத்தி விசாரணை செய்தார் அவளது அப்பா.

நான் குறுக்கே பதில் கூற போனதற்கு முறைத்து பார்த்தார். நான் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டேன். அம்மு எவ்வளவு பாவப்பட்ட பிறவி என்பதை நான் அன்று தான் உணர்ந்தேன். முப்பது நிமிடங்களுக்கு முன் அவள் முகம் முழுவதும் நிறைந்திருந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் அப்படியே மாறிப்போனது. உண்மையில் இறந்துப் போனது.

ஆனால், அன்று லேட்டாக சென்ற காரணத்திற்காக அவளுக்கு ஒரு மொபைல் போன் கிடைத்தது. இனிமேல், லேட்டானால் கூப்பிட்டு சொல் என அதட்டி அதை அம்முவின் கைகளில் கொடுத்தார்.

யோசித்துப் பாருங்களேன்...

யோசித்துப் பாருங்களேன்...

நாம் கல்லூரியில் படிக்கும் போது அன்றாடம் ஏதாவது சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். வீடு திரும்பினாலும் அதை எண்ணி நாம சற்று நேரம் மகிழ்வோம். வீட்டில் அதுக்குறித்து பேசுவோம். ஆனால், அம்முவிற்கு அப்படி எந்த ஒரு அனுபவமும் கிடையாது. ஒரு நிகழ்வு குறித்து அவள் முழுமையாக மகிழவும் முடியாது. ஒரு நபரின் மகிழ்ச்சியை, அதை முழுமையாக மகிழ விடாமல் தடுப்பது எத்தகைய கொடுமை. இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.

காதலா?

காதலா?

அவளுக்கு மொபைல் கிடைத்த பிறகும் கூட அம்மு அதை பெரிதும் பயன்படுத்தியது இல்லை. அவளது மொபைலில் இருந்து பெரும்பாலும் அழைக்கப்படும் எண் அவளது அப்பாவின் கைப்பேசி எண்ணாக தான் இருக்கும்.

ஒருசில மாதங்கள் கழித்தே அவள் தனது தோழிகளுடன் மொபைலில் பேச துவங்கினாள். அப்படியாக நானும் அவளிடம் ஒருசில முறை பேசியுள்ளேன். ஆனால், அது ஓரிரு நிமிடங்களை கூட கடந்தது இல்லை.

18 வயது... அரும்பு மீசை முளைக்கத் துவங்கிய காலம். காதலும் சேர்ந்து முளைத்தது. அது காதலா? என்றும் எனக்கு தெரியாது. ஒருவேளை அம்மு மீது இருந்து பரிதாபம், அனுதாபம் போன்றவற்றை நான் காதலாக எண்ணினேனா என்றும் எனக்கு புலப்படவில்லை. அப்படியாக இருந்தால்... அம்முவிடமும் இதே உணர்வை நான் கண்டுள்ளேனே..? அது எப்படி?

ஒருவேளை நான் அவளது முதல் தோழன் என்பதாலும், அவள் இதற்கு முன் யாரிடமும் பேசும், பழகியது என்பதாலும்? காதல் போன்ற ஈர்ப்பு வந்திருக்கலாமோ என்று தெரியவில்லை.

மலராத காதல்!

மலராத காதல்!

நாங்கள் இருவரும் எங்களுக்குள் ஒருவரின் மேல் ஒருவருக்கு இப்படி ஒரு உணர்வு இருக்கிறது என்பதை அறிந்திருந்தோம். ஆனால், அது குறித்து ஒருநாளும் பேசியதோ, செய்தி பரிமாற்றம் செய்துக் கொண்டதோ இல்லை.

எப்போதும் போல ஓரிரு நிமிடம் மட்டுமே உயிர்வாழும் அந்த மொபைல் போன் அழைப்பை, அன்று சாதாரணமாக செய்தேன். பேசத்துவங்கி ஒரு நிமிடம் தான் இருக்கும். அன்று கல்லூரியில் நடந்த விஷயங்கள் குறித்து பேசி சிரிக்க துவங்கினோம். அம்மு கொஞ்சம் சப்தமாகவே சிரித்தாள். அது தான் அவளது கடைசி சிரிப்பு. நாங்கள் பேசிக் கொண்ட கடைசி நிமிடமும் அதுதான்.

அந்த சப்தம்...

அந்த சப்தம்...

இன்றும் என மனதில் உறைந்துபோய் கிடைக்கிறது அன்று அம்முவிடம் இருந்து போனை பிடிங்கி அவளது அப்பா திட்டிய சப்தம்.

"எவன்கூட டீ கொஞ்சி இழிச்சுட்டு இருக்க.... இதுக்கு தான் இவளுக்கு எல்லாம் எதுக்கு காலேஜ்... ------" அப்படியே கட் ஆனது அந்த கால். இணையாத எங்கள் காதலும் அப்படியே கட் ஆனது.

ஒருவேளை நான் அன்று அம்முவுடன் பேசாமல் இருந்திருந்தால்... அவள் மீது ஈர்ப்படையாமல் இருந்திருந்தால். குறைந்தபட்சம் தனது கனவையாவது அடைந்திருப்பாள் அம்மு.

18 வயதில் திருமணம்!

18 வயதில் திருமணம்!

அப்போது அம்முவிற்கு வயது 18. எனக்கும் அதே வயது தான். இந்திய சட்டத்தின் படி பெண்களுக்கான திருமண வயது 18. ஆகவே. அம்முவின் அப்பாவிற்கு சட்ட ரீதியாகவும் எந்த சிக்கலும் இல்லை. ஒரே வாரத்தில் அவளுக்கான வரனை பார்த்தார். திருமண தேதி குறித்தார்.

அன்று அம்முவுடன் நான் தான் பேசிக் கொண்டிருந்தேன் என்பதாவது அவருக்கு தெரியுமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.

ஆனால், அவர் முகம் நிறைய புன்னகையுடன் எங்கள் வீட்டு வாசல் ஏறி வந்து அம்முவின் திருமண பத்திரிக்கை நீட்டிய போதுதான். அன்று இரவு அம்மு யாருடன் பேசினாள், என்ன பேசினாள் என்பது கூட தெரியாமல் அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார் என்பதை நான் அறிந்தேன்.

திருத்தம் வேண்டும்!

திருத்தம் வேண்டும்!

இன்றைய சூழலில் இப்படி ஒரு தந்தையா என்று நீங்கள் கருதலாம். இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் டவுன் பகுதிகளில், நகரங்களின் சில தெருக்களில் இப்படியான சந்தேக குணம் படைத்த அப்பாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவர்களின் மனதிலும், எண்ணத்திலும், கௌரவம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் காரியங்களிலும் திருத்தம் வரவேண்டும்.

முக்கியமாக இந்திய சட்டத்தில் பெண்களின் திருமண வயதும் 21 என மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் அந்த பெண் தனக்கான ஒரு அடிப்படை தகுதியையவாது இன்றைய உலகில் பெற முடியும்.

வருத்தம்!

வருத்தம்!

திருத்தம் வருமா? இவர்கள் திருந்துவார்களா? என்பதை இன்னும் எத்தனை காலங்களுக்கு பொறுத்திருந்து காண்பது என தெரியவில்லை.

அவளிடமும் எனது காதலை கூற முடியவில்லை என்பதை விட, அவளிடம் சிறு மன்னிப்பு கேட்க கூட எனக்கு ஒரு வாய்ப்பு அமையவில்லை என்பதே எனக்குள் இருக்கும் ஒரே வருத்தம்.

சாரி அம்மு!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Her Love and Dreams Were Ended Even Before The Start - My Story!

    Her Love and Dreams Were Ended Even Before The Start - My Story!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more