இனி உங்கப்பா செத்துட்டான்னு தைரியமா சொல்லு! My story #224

Posted By:
Subscribe to Boldsky

குடும்பம் என்றான பிறகு அல்லது திருமணமான பிறகு நம்முடைய பல ஆசைகளை அடக்கிக் கொண்டு வெளிப்படுத்தாமல் இருப்பது தான் நல்லது என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஆசைப்பட்டதெல்லாம் அடைய வேண்டும் என்று நினைத்த்தால் மன்சஞ்சலத்தையும் வருத்தத்தையுமே வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

அழகான குடும்பம் உருவாவதற்கும் அது நிலைப்பதற்கும் அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருமே பங்களிக்க வேண்டிய கட்டாய பொறுப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது. எனக்கு பிடிச்சிருக்கு நான் போறேன். எனக்கு பிடிச்சிருக்கு நான் செய்றேன் என்று சுயநலமாய் எடுக்கும் ஒவ்வொரு முடிவுமே அந்த குடும்பத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகிறது.

இங்கேயும் அப்படித்தான் திருமணத்திற்கு பிறகு கிட்டதட்ட பதினைந்து வருடங்கள் கழித்து தன்னுடைய மனைவி மற்றும் மகளைப் பிரிந்து சென்று இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் அப்பா. இதனால் ஏற்படுகிற சிக்கல்களும் மனைவியும் மகளும் எதிர்கொண்ட பிரச்சனையும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை :

குழந்தை :

நான் குழந்தையாக இருந்த போதே அப்பா அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று விட்டு வருவார். அவருக்கு வியாபாரம் எல்லாம் வெளியூரில் தான் நடக்கும். கான்வெண்ட்ல தான் படிக்க வைப்பேன், பெரிய டாக்டரா எம் பொண்ணு வந்து நிப்பா பாரு என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.

வீட்டில் அப்பா இருந்தால் நாங்கள் டாக்டர் விளையாட்டு தான் அடிக்கடி விளையாடுவோம். நான் மருத்துவர் அவர் நோயாளி. எல்லாம் சரியாப்போகும் என்று சொல்லி காற்றிலிருந்து மருந்தை பிடுங்கித் தருவேன். அவரும் கை கூப்பி பவ்யமாக நன்றி சொல்லி எழுந்து போவார்.

 பள்ளியில் :

பள்ளியில் :

அப்பா இன்னக்கி ஸ்கூல்ல உங்க பேர சொல்லிட்டு ஒருத்தர் வந்தாரு. ஏதோ வட்டி கடை நைட்டுக்குள்ள உங்கள வந்து பாக்க சொன்னாரு என்றதுமே அப்பா பதறிப்போனார். வேற எதாவது சொன்னானா?

இல்லப்பா ஏன் டென்ஷனாகுறீங்க என்று கேட்க அப்பா எதுவும் பேசாமல் சட்டையை மாட்டிக் கொண்டார். அப்பா சாப்டு போங்க என்றேன்ம்ம்ஹூம் கேட்கவேயில்லை கிளம்பி போய்க் கொண்டேயிருந்தார். அம்மாவுக்கு போஸ்ட் ஆபிஸில் வேலை. வேலை முடிந்து இரண்டு பஸ் மாறி வர வேண்டும். வரும் வழியிலேயே மறுநாளுக்குரிய காய்கறிகளை எல்லாம் வாங்கி வீட்டிற்கு வந்து சேர எப்படியும் ஒன்பது மணியாகிடும்.

 இதே வேலை :

இதே வேலை :

அப்பா அவசர அவசரமாக கிளம்பிப் போனதை சொன்னேன். இந்த மனுஷனுக்கு இதே வேலையா போச்சு எப்பவுமே வேலை வேலைன்னு அலையுறது. என்ன சாப்பாட்ட கூடவா மறப்பான் மனுஷன் அப்டி என்ன அவசரமா இருக்கும் என்றார். பள்ளிக்கு வந்த வட்டி கடைக்காரனைப் பற்றி சொன்னேன்.

இந்த மனுஷன் ஒரு வார்த்த சொல்லலயே.... வட்டிகடைக்காரன் தேடி வர்ற அளவுக்கு நம்ம ஒண்ணும் கடன் வாங்கல அம்மாவின் பயம் முகத்தில் தெரிந்து அப்பாவிற்கு போன்செய்தார். போன் ஸ்விட் ஆஃப் என்று வந்தது.

தொலஞ்சுட்டாரு :

தொலஞ்சுட்டாரு :

இரண்டு நாட்கள் ஆனது அப்பாவைக் காணவில்லை. அப்பா தொலஞ்சு போய்ட்டாரு என்று நான் சொல்ல நண்பர்கள் எல்லாம் பள்ளியில் கிண்டலடித்து சிரிப்பார்கள். குட்டி பிள்ளைங்க தான் தொலஞ்சு போவாங்க அப்பா எல்லாம் தொலஞ்சு போக மாட்டாங்க என்பார்கள்.

அம்மாவும் வேலைக்குப் போகவில்லை. தாத்தா பாட்டியெல்லாம் ஊரிலிருந்து வந்திருந்தார்கள் யார் யாரோ வந்து அம்மாவிடம் கேள்விகேட்டுக் கொண்டேயிருந்தார்கள். அம்மா அழுது கொண்டேயிருந்தாள்.

 மீண்டும் அப்பா :

மீண்டும் அப்பா :

சில நாட்கள் கழித்து அப்பா மீண்டும் வந்தார். அவசர வேலையாக டெல்லி வரை சென்றதாகவும். அங்கு தன்னுடைய பை திருடப்பட்டதால் தகவல் சொல்ல முடியவில்லை என்றார். வீட்டினர் சமாதானமடைந்தனர். அப்பா அதன் பிறகு அடிக்கடி வெளியூர்களுக்கு செல்லவில்லை நிறைய நேரம் வீட்டிலேயே இருந்தார்.

சமையல் எல்லாம் செய்து எங்களுக்கு கொடுத்தார். கடனைப் பற்றி அப்பாவும் சொல்லவில்லை அம்மாவும் கேட்கவில்லை.

எங்கயும் போகமாட்டன்னு சொல்லு :

எங்கயும் போகமாட்டன்னு சொல்லு :

அன்று என்னுடைய பிறந்த நாள். ஆசிர்வாதம் வாங்க அப்பாவிடம் சென்றேன். எப்போதும் 100 ரூபாய் தான் கொடுப்பார் இந்த முறை 500 ரூபாய் தாளை நீட்டினார். என்னப்பா இவ்ளோ பணம்? எப்பவும் இவ்ளோ தர மாட்டீங்களே என்றேன்.

சும்மா வச்சுக்கோடா. நல்லா படிக்கணும் சரியா என்றார். பொறந்தநாளைக்கு எதுவும் வாங்க முடியல என்ன வேணும் சொல்லு சாய்ந்தரம் வர்றப்போ வாங்கிட்டு வரேன் என்றார். அப்பா எனக்கு எதுவும் நீ வாங்கித் தர வேண்டாம் . ஒரே ஒரு சத்தியம் மட்டும் பண்ணுப்பா என்றேன்.....

என்ன என்பது போல கேட்டு முழித்தார். இனிமே எங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணுப்பா.... அம்மா பாவம் தெரியுமா உன்னைய காணோம்னு ரொம்ப அழுதுட்டே இருந்துச்சு சாப்ட கூட இல்ல என்றேன்.

மீண்டும் மாயம் :

மீண்டும் மாயம் :

நான் பள்ளிக்கும் அம்மா வேலைக்கும் சென்று விட்டோம். அப்பா வீட்டிலிருந்தார். மாலையில் வீடு திரும்பும் போது கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தியிருந்தது. அப்பாவைக் காணவில்லை பகீரென்றது பக்கத்துல எங்கயாவது போயிருப்பாங்க வந்திடுவாங்க என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது. அப்பா வரவில்லை அம்மாவும் வந்துவிட்டார். இம்முறை அம்மாவும் உறவினர்களும் கொஞ்சம் அசட்டையாகவே இருந்தார்கள். சித்தப்பாவிடம் போய் தேடும் படி சொன்னேன்.

உனக்கும் உங்கப்பனுக்கு வேற வேலையே இல்லையா டீ..... ரெண்டு நாள்ல வருவாரு போ வீட்டுக்கு என்று திட்டி அனுப்பிவிட்டார்.

 அம்மா :

அம்மா :

ஒரு மாதம் கடந்திருந்தது. அப்பா வரவில்லை கடன் வாங்கி கட்டமுடியாமல் ஊரை விட்டு ஓடிப்போனதாக பேசிக் கொண்டார்கள். அம்மா சகஜமாகத்தான் இருந்தாள். நாங்கள் வீட்டை மாற்றி அலுவலகத்திற்கு பக்கத்திலேயே சென்றுவிட்டோம்.

அப்பா எங்கம்மா என்று கேட்கும் போதெல்லாம்.... ஒன்று கண்ணீர் வரும் இல்லையென்றால் தூக்கிப் போட்டு போய்ட்டான் நாயி என்று அப்பாவைத் திட்டுவார். ஏன் சென்றார் எங்கு சென்றார் என்றெல்லாம் தெரியாது. ஏன் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட தெரியாது.

யார் அவங்க? :

யார் அவங்க? :

காலாண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்தார்கள். நான் பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என் வீட்டில் யாரோ நுழைவதைப் பார்த்து நானும் அவர் பின்னாலேயே ஓடினேன்.

அம்மா அழுது கெஞ்சிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் கோபப்பட்டு உதாசீனமாக பேசுகிறார். பெரிய மனுஷனாச்சே உள்ள விட்டா மரியாத கெட்டுப்போகும் ஆமா... மொதோ வெளிய போ என்று அவரைத் தள்ளி கதவை சாத்தினார்.

படியிலிருந்து இறங்கி சிறுமிகளுடன் ஐக்கியமாகிவிட்டேன். ஆனால் மனம் முழுக்க அம்மாவுடனேயே இருந்தது.

யார் அவங்க? நீ ஏன் திட்டி அனுப்பின என்று கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஒரு கேள்வி :

ஒரு கேள்வி :

ஒரு போதும் அப்பாவின் நினைப்பு எனக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அம்மா மிகவும் கவனமாக இருந்தார். என்னுடன் நிறைய நேரம் செலவிட ஆரம்பித்தார். ஒரு நாள் மாலை நானும் அம்மாவும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம்.

அம்மா அன்னைக்கு ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்தாருல்ல நீ கூட திட்டி அனுப்பினியே யார் அவங்க? என்றேன். அது எதுக்கு உனக்கு என்று வெடுக்கென்று எழுந்து கொண்டார். ஏன்ம்மா இதுக்கெல்லாம் கோச்சுக்குற சும்மா தான கேட்டேன். இதுவரைக்கும் அவங்கள பாத்ததில்லையே நீ வேற ரொம்ப கோவமா பேசின அதான் யாருன்னு கேட்டேன் என்றேன். கோவமா இருந்தேன்னு எப்படித் தெரியும் என்று ஆரம்பித்து பல கேள்விகள் கேட்டார். அவருக்கு சமாதானம் ஏற்படும் வகையில் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.

ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த அம்மா.... அவன் படுக்க கூப்டான் போகவா? என்று கத்தினார்.

 யார் தப்பு :

யார் தப்பு :

அதற்கு பிறகு தான் அம்மா ஒவ்வொரு நாளும் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே புரிந்தது. என்னோட அதிக நேரம் செலவிடுவது பாசத்தினால் அல்ல என்னை யாரும் தவறாக பார்த்து விடக்கூடாது என்கிற என்னுடைய பாதுகாப்பிற்காகத்தான் என்றும் தெரிந்து கொண்டேன்.

எவ்ளோ சந்தோசமா இருந்தோம் திடீர்னு அப்பா காணம போய்ட்டாரு அம்மா ஒவ்வொரு நாளும் பயந்து சாவுறா தேவையா இதெல்லாம்.... யார் பண்ண தப்புனால இது என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு அழுதேன்.

 தோழி :

தோழி :

அப்போது எனக்கிருந்த ஒரே ஆறுதல் என்னுடைய தோழி மட்டுமே. எனக்கு மிகவும் நம்பிக்கையானவளாக இருந்தாள் அவளிடம் பகிர்ந்து கொண்டு அழுதேன். அவள் எனக்கு சமாதனப்படுத்தினாள். ஆறுதல் சொன்னால், நான் வருத்தப்படும் போதெல்லாம் துணை நின்றாள்.

அடிக்கடி வீட்டிற்கு வந்து என்னிடமும் அம்மாவிடமும் எதாவது பேசி எங்களை அந்த நினைப்பு வராமல் பார்த்துக் கொண்டால் என்றே சொல்லலாம்.

போட்டோவில் அப்பா :

போட்டோவில் அப்பா :

வகுப்புத் தோழி ஒருத்தி அவள் அக்கா திருமணத்திற்கு பிறகு ஊரில் எடுத்த போட்டோ என்று ஒரு போட்டோ ஆல்பத்தை எங்களிடம் நீட்டினாள்.வரிசையாக பார்த்துக் கொண்டு வந்தோம். அதில் ஒரு போட்டோவில் கூட்டத்தில் ஒருத்தராக அப்பா நின்று கொண்டிருந்தார்.

அப்பா..... என்று கத்தவும் முடியவில்லை அழுகையை அடக்கிக் கொண்டு அது அப்பா தானா அல்லது அப்பா உருவத்தில் இருக்கிற வேறு யாராவதா என்று உற்றுப்பார்த்தேன் அது அப்பா தான்.

அவளிடம் எந்த ஊர் என்று கேட்டேன். திருச்சி என்றாள்.

திருச்சியில் :

திருச்சியில் :

அம்மாவிடம் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு திருச்சிக்கு கிளம்பினேன். அங்கே யாரைத் தேடி போவது அப்பாவை எப்படித் தேடுவது என்று எதுவும் தெரியவில்லை. போட்டோவில் இருந்த அக்கா அவரது குடும்பத்தினர் என விசாரித்ததில் ஒரு வழியாக அப்பாவை நெருங்க முடிந்தது.

தெரு முக்கில் நின்று வீட்டின் அடையாளம் தெரியாமல் ஒவ்வொராக வழி கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தேன். இங்க எதுக்கு வந்த? என்றது ஒரு குரல்..... அப்பா குரல் வரவில்லை என்னைப் பார்த்து ஆறத்தழுவிக் கொள்வார் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அப்பா வாப்பா வீட்டுக்கு போகலாம் என்றேன்..... அப்பா அப்பான்னு கூப்டுட்டு என் பின்னாடி வராத போ..... என்று துரத்தி விட்டார். அவர் பின்னாலேயே போனேன்.வீட்டிற்குள் சென்று கதவை சாத்தினார். இரவு முழுவதும் அந்த வாசலிலேயே கிடந்தேன்.

அது எங்கப்பா :

அது எங்கப்பா :

நீண்ட நேரம் கழித்து அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டது வயதான தாத்தா ஒருவர் வந்தார் யாரும்மா நீ என்ன வேணும்.... என்று விசாரித்தார். விவரங்களைச் சொன்னேன். நான் சொல்ல சொல்ல உள்ளே ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் கேட்டது.

நீ இங்க வந்தது அம்மாவுக்கு தெரியுமா? சின்ன பொண்ணா இருக்க இப்டி தனியா வரலாமா என்றார். அப்பாவ கொடுங்க நான் கூட்டிட்டு போனும் என்றேன். அந்த தாத்தா அமைதியாக இருந்தார். உள்ள வா என்று அழைத்துச் சென்று சாப்பாடு போட்டு தூங்கவும் அறை ஒதுக்கித் தந்தார்.

மறு நாள் காலை எழுந்து எனக்கு காபியும் இட்லியும் வந்தது. சாப்பிட்டு முடித்து வெளி வராண்டாவில் உட்கார்ந்திருந்தேன். ஐந்து வயதுடைய சிறுமி வந்தாள். யதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கும் போது அது எங்கப்பா என்று என்னுடைய அப்பாவையும் அது எங்கம்மா என்று யாரோ ஒரு பெண்ணையும் கை நீட்டினாள்.

அறிவில்லையா? :

அறிவில்லையா? :

அந்த தாத்தா என்னிடமிருந்து அம்மாவின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு இங்கே வரச் செய்தார். அம்மா அங்கே என்னைப் பார்த்து பிரண்டு கல்யாணம்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ற என்று அடிக்கப்பாய்ந்தார்.

புள்ளைய அடிக்காத என்று தடுத்தது அப்பாவின் குரல் அம்மா ஒரு கணம் அதிர்ந்து திரும்பினார். அந்த சூழலை பார்த்தே புரிந்து கொண்டார். யாரும் எதுவும் பேசவில்லை. அம்மாவிற்கு அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லையே தவிர கண்ணீர் கொட்டியது.

உனக்கு அறிவில்லையா அவன் தான் நம்ம வேண்டாம்னு தூக்கிப் போட்டு போய்டான்ல திருப்பியும் போய் ஏன் அவன் கால்ல போய் விழற..... இனி எல்லார்கிட்டயும் தைரியமா உங்கப்பன் செத்துட்டான்னு சொல்லு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: relationship my story
English summary

Daughter Found Father Illegal Relationship

Daughter Found Father Illegal Relationship
Story first published: Thursday, April 5, 2018, 17:51 [IST]