1/2 கப் ஜவ்வரிசி வெச்சு.. ஈவ்னிங் இப்படி மொமோஸ் செய்யுங்க... டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...

Posted By:

Veg Momos Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் மொமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மொமோஸ் செய்து கொடுங்கள்.

அதுவும் வீட்டில் 1/2 கப் ஜவ்வரிசியும், ஒருசில காய்கறிகளும் இருந்தால், செம டேஸ்ட்டான வெஜ் மொமோஸ் செய்யலாம். கடைகளில் நிறைய பணம் கொடுத்து அளவாக வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

Vegetable Momos How To Make a Veg Momos Recipe

உங்களுக்கு ஜவ்வரிசி கொண்டு வெஜ் மொமோஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் மொமோஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துககளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

உள்ளே வைப்பதற்கு...

* முட்டைக்கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

மேல் மாவிற்கு....

* மாவு ஜவ்வரிசி - 1/2 கப்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 1 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மாவு ஜவ்வரிசியை போட்டு, நன்கு வெள்ளையாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், வெங்காயம், கேரட் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். உப்பு சேர்த்து ஊற வைப்பதால், காய்கறிகள் நீர்விடும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த ஜவ்வரிசியை போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை சலித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சலித்த ஜவ்வரிசி மாவுடன், சோள மாவு, உப்பு சேர்த்து கலந்து, நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் காய்கறிகளில் உள்ள நீரை கைகளால் பிழிந்துவிட்டு, அந்த காய்கறிகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து உருட்டி, சோள மாவைப் பயன்படுத்தி சப்பாத்தி போன்று சிறிதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே பிழிந்து வைத்துள்ள காய்கறிகளை கொஞ்சமாக வைத்து, கொழுக்கட்டை போன்று மடித்து, முனைகளை அழுத்தி விட வேண்டும். பின் மொமோஸ் வடிவத்தில் வர, அதன் முனைகளை பின்புறமாக வளைத்து ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில், எண்ணெய் தடவி, அதில் செய்து வைத்துள்ளதை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான வெஜ் மொமோஸ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, February 15, 2025, 17:50 [IST]
Desktop Bottom Promotion