அட்டகாசமான வத்த குழம்பு ரெசிபி... செஞ்சு பாருங்க 3 நாள் வைச்சு ரசிச்சு சாப்பிடலாம்... ட்ரை பண்ணுங்க...!

Posted By:

Vatha Kulambu Recipe in Tamil: தென்னிந்தியாவில் பொதுவாக பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் குழம்பு என்றால் அது சாம்பார்தான். ஆனால் சாம்பாரையும் தாண்டி செய்யக்கூடிய குழம்புகள் பல உள்ளன. அதில் ஒன்று தான் வத்தல் குழம்பு. இந்த குழம்பு செய்வது சுலபமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு கல்யாண வீடுகளில் செய்வது போல சூப்பராக இருக்கும்.

இந்த குழம்பை மூன்று நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். வத்தல் குழம்பு பொதுவாக சுண்டைக்காய் வத்தல் வைத்துதான் செய்யப்படும். ஆனால் மணத்தக்காளி வத்தல் வைத்துகூட இதை செய்யலாம். இந்த பதிவில் நாம் இரண்டு வத்தலையும் வைத்து குழம்பு செய்யப்போகிறோம். அதனால் இந்த குழம்பு அற்புதமான சுவையுடன் இருக்கும். இந்த பதிவில் மணமணக்கும் வற்றல் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Vatha Kulambu Recipe How to Prepare Vatha Kulambu

தேவையானப் பொருட்கள்:

- 10 சின்ன வெங்காயம்
- 10 பூண்டு பல்
- 1 தக்காளி
- 2 டேபிள் ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல்
- 2 ஸ்பூன் மணத்தக்காளி வற்றல்
- 2 காய்ந்த மிளகாய்
- 2 ஸ்பூன் சாம்பார் பொடி
- 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
- சிறிது கறிவேப்பிலை
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 7 ஸ்பூன் கடலை எண்ணெய்
- உப்பு தேவையான அளவு

அரைக்க:

- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் வர மல்லி
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 6 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 3 காய்ந்த மிளகாய்
- 3 காஷ்மீரி மிளகாய் வற்றல்

செய்முறை:

- புளியை சூடான நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். பின் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் மல்லி விதை சேர்த்து லேசாக வறுக்கவும். பின் சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

- பின் வர மிளகாய் வற்றல் மற்றும் காஷ்மீரி மிளகாய் சேர்த்து லேசாக நிறம் மாறியதும் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அவை நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். இது ஆறியதும் சிறிய மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

- வாணலியில் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

- இப்போது மெதுவாக புளிக்கரைசலை சேர்க்கவும். பின்னர் புளிக்கரைசலை கலந்து விடவும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.

- பின் அரைத்த விழுதை சேர்த்து மேலும் தண்ணீர் விட்டு கலந்து கொதிக்க விடவும்.

- குழம்பு பச்சைவாசனை நீங்கி கொதித்து கெட்டியாகும் போது வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும் வர மிளகாய், மணத்தக்காளி வற்றல் மற்றும் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட்டால் சுவையான கார குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, March 7, 2025, 19:01 [IST]
Desktop Bottom Promotion